March 21, 2023

ஜம்மு காஷ்மீர் முழுவதும் ஆகஸ்டு 4, 5 ஆகிய 2 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு!

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு நாளையுடன்( புதன்கிழமை) ஒரு ஆண்டு நிறைவடையும் சூழலில் ஜம்மு காஷ்மீர் முழுவதும் ஆகஸ்டு 4, 5 ஆகிய 2 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்பதால் 2 நாள்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு படையினரின் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

ஆகஸ்ட் 5ந் தேதியை கருப்பு தினமாக பிரிவினைவாதிகளும் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளும் அறிவித்துள்ளார்கள். வன்முறையில் ஈடுபட அவர்கள் திட்டமிட்டு இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, ஸ்ரீநகர் உட்பட மாநிலம் முழுவதும் இன்றும் நாளையும் 2 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஜம்மு – காஷ்மீரில் கொரோனா வைரஸ் தொற்று பரவலையொட்டி ஜூலை 31ம் தேதி வரை அமலில் இருந்த கட்டுப்பாடுகள் ஏற்கனவே 8ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தீவிரவாதிகள் அச்சுறுத்தலை அடுத்து, ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட உள்ளன. பொதுமக்கள் வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து ஆனதை அடுத்து, அம்மாநில முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முஃப்தி, உமர் அப்துல்லா, அவரது தந்தை ஃபருக் அப்துல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் முன்னாள் முதல்வர்கள் 3 பேரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இவர்களில் உமர் அப்துல்லா, ஃபருக் அப்துல்லா ஆகிய இருவரும் கடந்த மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டனர்.

மெகபூபா முஃப்திக்கு விதிக்கப்பட்டு இருந்த பொது பாதுகாப்புச் சட்டம் நாளையுடன் முடிவடை வதால் காவலை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து ஜம்மு – காஷ்மீர் உள்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.இந்த நிலையில் ஸ்ரீநகரில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை ராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர். இந்த வெடிகுண்டுகளை ஸ்ரீநகர் – பாராமுல்லா தேசிய நெடுஞ்சாலை பகுதியில் செயலிழக்க வைத்தனர்.