ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டோர் நடத்தும் உணவகம் – வாரணாசியில் தொடக்கம்!

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டோர் நடத்தும் உணவகம் – வாரணாசியில் தொடக்கம்!

நாடு முழுவதும் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. பல்வேறு காரணங்களுக்காக பெரும்பாலும் ஆண்களால் செய்யப்படும் இந்த குற்றத் துக்கு பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தேசிய குற்றப்பதிவு ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரப்படி கடந்த 2010-ல் 80 பேர் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 2011-ல் 106, 2012-ல் 116 மற்றும் 2014-ல் 349 என அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்வை மேம்படுத்தும் விதமாக உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி யில் உணவகம் ஒன்று தொடங்கவுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு பெண்களின் பாதுகாப்பிற்கு துணை நிற்கும் விதமாக “ரெட் பிரிகேட்” (Red Brigade) எனும் அரசு சாரா அமைப்பை அஜய் குமார் படேல் என்பவர் தொடங்கினார். சமுதாயத்தின் நலனை கருதி செயல்படும் இவர், பெண்களின் முன்னேற்றத்திற்காக பல சேவைகளில் ஈடுப்பட்டு வருகிறார். தற்போது இவர் வாரணாசியில் உள்ள துர்கா குண்ட் எனும் இடத்தில் “தி ஆரஞ்ச் கஃபே” ( The Orange Cafe ) எனும் உணவகத்தை துவங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த உணவகத்தை ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்ட பெண்களே, நடத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த உணவகத்தில் பணி புரிய இருக்கும் பெண்களுக்கு சமைப்பது, உணவை பரிமாறுவது மற்றும் உணவக நிர்வாகம் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டுவருவதாகவும் அவர் கூறினார். மேலும் முதலில் வாடகைக்கு இடம் எடுத்து செயல்பட இருக்கும் இந்த உணவகம் விரைவில் சொந்தமாக இடம் வாங்கும் அளவிற்கு வளர்ச்சி பெறும் என்றும் கூறினார். மேலும் இந்த உணவகத்தின் மூலம் ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வாழ்க்கையே முடிந்துவிட்டதாக எண்ணி ஒரு அறைக்குக்குள் அடைந்து கிடக்காமல் துணிந்து வெளியே வந்து தனது சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதே குறிக்கோள் எனவும் அஜய் பட்டேல் தெரிவித்துள்ளார்.

இந்த உணவகத்தை ஜான்பூரைச் சேர்ந்த ரேகா, பரேலியைச் சேர்ந்த சோம்வதி, ரேபரேலியைச் சேர்ந்த விம்லா, வாரணாசியைச் சேர்ந்த பாதம் தேவி ஆகியோர் நடத்த இருக்கின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட பெண்ணான சோம்வதி, இந்த புதிய முயற்சியால், சொந்த காலில் நிற்கும் தைரியத்துடன், யாரையும் சாராமல் வாழ்வதற்கான நம்பிக்கையையும் ஏற்பட்டு உள்ளதாக கூறினார். கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு பக்கத்து வீட்டில் வசித்த நபரால் ஆசிட் வீச்சுக்கு உள்ளான இவர், இந்த உணவகத்தின் மூலம், அவரது 10 வயது மகனுக்கு நல்ல கல்வியைத் தர முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Posts

error: Content is protected !!