மோடி பேச்செல்லாம் அட்டர் வேஸ்ட்! – எதிர்கட்சிகள் கமெண்ட்

மோடி பேச்செல்லாம் அட்டர் வேஸ்ட்! – எதிர்கட்சிகள் கமெண்ட்

தெலங்கானா மாநிலத்தில் உள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் குடிநீர் விநியோகிப்பதற்கான ரூ.35 ஆயிரம் கோடி மதிப்பிலான “மிஷன் பாகீரதா’ திட்டத்தை கிராமத்தில் மோடி தொடங்கி வைத்தார். முதல்வர் சந்திரசேகர ராவின் தொகுதி கஜ்வேல் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரதமர் தனது தெலங்கானா பயணத்தின்போது, ஹைதராபாத்தையும் கரீம்நகரையும் இணைக்கும் 152 கி.மீ. நீள மனோகராபாத்-கொத்தபள்ளி ரயில் பாதைத் திட்டம், ராமகுண்டத்தில் அமைக்கப்பட உள்ள தேசிய அனல் மில் நிறுவனத்தின் தெலங்கானா சூப்பர் தெர்மல் பவர் திட்டம், வாரங்கல் நகரில் உருவாக உள்ள கலோஜி நாராயணராவ் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், கரீம்நகரில் புதுப்பிக்கப்பட உள்ள ராமகுண்டம் உர ஆலை ஆகியவற்றுக்கும் அடிக்கல் நாட்டினார்.

MODI AUG 8

இந்த நிகழ்ச்சியில் மோடி பேசும் போது, “இந்த நவீன காலத்தில் கூட தலித் சகோதரர்களை ஒதுக்குவது மற்றும் அவர்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டுவதும் அவமானகரமானது. நீண்ட காலமாக இந்த சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு வரும் அவர்களை மதிக்கவும், பாதுகாக்கவும் வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். தலித்துகள் மீது தாக்குதல் நடத்துபவர்களிடம் நான் கூற விரும்புவது என்னவென்றால், உங்களுக்கு ஏதாவது பிரச்சினையா? தாக்க வேண்டுமா? என்னை தாக்குங்கள். என்னுடைய தலித் சகோதரர்கள் மீது தாக்குவதை நிறுத்துங்கள். உங்களுக்கு சுட வேண்டுமா? என்னை சுடுங்கள், என்னுடைய தலித் சகோதரர்கள் மீது அல்ல. இந்த விளையாட்டு நிறுத்தப்பட வேண்டும்.

சில சம்பவங்கள் நம் கவனத்துக்கு வரும் போது தாங்க முடியாத வலியை ஏற்படுத்துகிறது. தலித்துகளை மதித்து பாதுகாக்க வேண்டியது நமது கடமை. அமைதி, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் ஆகிய முக்கியமான மந்திரங்கள் இல்லாமல் நாடு ஒருபோதும் வளர்ச்சியடையாது. நாட்டின் ஒற்றுமையே நாட்டின் வளர்ச்சிக்கு மூல காரணம் ஆகும்.
இந்த சமூக பிரச்சினையை தீர்க்க விரும்புபவர்களிடம் நான் கேட்டுக்கொள்வது இதுவே, சமூகத்தை பிரித்தாளும் அரசியலை விட்டுவிடுங்கள். ஏனெனில் பிரிவினை அரசியல் நாட்டுக்கு எந்த நன்மையும் அளிக்காது”என்று கூறினார்.

முன்னதாக சனிக்கிழமை டெல்லியில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “”பசுக் காப்பாளர்கள் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுவோர் அனைவரும் சமூக விரோதிகள்” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் “”பசு மீது கொண்ட பக்தி என்பது வேறு; பசு பாதுகாப்பு வெறி வேறு” என்று தெரிவித்திருந்தார்

இதனிடையே பிரதமரின் இந்த திடீர் பேச்சு மற்றும் கண்டனம் ‘அட்டர் வேஸ்ட்’ என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன. இது குறித்து காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மணிஷ் திவாரி கூறுகையில், ‘பிரதமர் மோடி பஜ்ரங்தள நிர்வாகிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? விசுவ இந்து பரிஷத்தை கலைத்து விடுமாறு ஆர்.எஸ்.எஸ்.ஐ ஏன் வலியுறுத்தவில்லை?’என்றும் எனவே நாடு முழுவதும் பசு பாதுகாப்பு என்ற பெயரில், தனது கருத்தியல் சார்ந்த சக பயணிகள் செய்யும் ஸ்திரத்தன்மையற்ற செயல் குறித்து மோடி கூறியவை அனைத்தும் முற்றிலும் வெற்றுப்பேச்சு எனவும் மணிஷ் திவாரி கூறினார்.

இதே கருத்தை பிரதிபலித்த ஐக்கிய ஜனதாதள தலைவர் பவன் வர்மா கூறும்போது, ‘பிரதமர் மோடி தற்போது கூறியுள்ள கருத்துகளை சில மாதங்களுக்கு முன்னரே கூறியிருந்தால் இத்தகைய தாக்குதல்கள் நாடு முழுவதும் பரவியிருக்காது. ஆனால் அப்போது மவுனம் சாதித்து வந்த அவர், பிற துறைகள் தொடர்பான கருத்துகளை டுவிட்டரில் போட்டு வந்தார். எனினும் தற்போது மவுனம் கலைத்ததற்காக வரவேற்கிறேன். இதற்கு ஏன் இவ்வளவு தாமதம்? என்பதே ஒரே கேள்வி’ என்று தெரிவித்தார்.

மேலும் இதைப்போல, பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் நடந்த தலித் மீதான தாக்குதல் குறித்து எந்த கருத்தையும் கூறாதது ஏன்? என இந்திய கம்யூனிஸ்டு தலைவர் டி.ராஜா கேள்வி எழுப்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!