March 22, 2023

ஊட்டி – குன்னூர் மலை ரயில் ரெடி!

நீலகிரி மலை ரயில் என்று அழைக்கப்படும் ஊட்டி மலை ரயில், மிக நீண்ட வரலாறு கொண்டது. 1854ம் ஆண்டு ஊட்டிமலையில் ரயில் பாதை அமைக்கும் திட்டம் முதன் முதலாக உருவாக்கப்பட்டது. ஆனால் மலைப்பகுதி மிகவும் கரடுமுரடாக இருந்ததால் இந்தப் பணி தாமதடைந்து, 1891ம் ஆண்டு தான் ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கியது. முதலில், அதாவது 1899ம் ஆண்டு மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையில் ரயில் பாதை அமைக்கப்பட்டது.
ooty rail
அதன்பின்னர் 1908ம் ஆண்டு ஊட்டி வரை இந்த ரயில் பாதை நீட்டிக்கப்பட்டது. அந்த ஆண்டு முதல் மலை ரயில் போக்குவரத்து தொய்வின்றி தொடங்கி நடந்து வருகிறது. உலகிலேயே இதுபோல ரயில்சேவை ஓரிரு இடங்களில் தான் உள்ளன. இந்த லகிரி மலை ரயிலை உலக பாரம்பரியச் சின்னமாக அறிவித்துள்ளது. இன்றளவும் உலகின் மிகச் சிறந்த ரயில் போக்குவரத்தாக நீலகிரி மலை ரயில் உள்ளது. பல்வேறு சிறப்பம்சங்கள் மற்றும் தனித் துவத்துடன் நீலகிரி மலை ரயில் விளங்குகிறது. ரயில் என்ஜின்கள், ரயில் பெட்டிகள்,ரயில் நிலையங்கள் என அனைத்துமே மிக சிறப்பாகவும், தனித்துவத்துடனும் உள்ளன. எனவேதான் இந்த ரயிலுக்கு உலக பாரம்பரியச் சின்னம் என்ற அந்தஸ்தைத் தருவது மிகப் பொருத்தமானது என்று யுனெஸ்கோஅமைப்பு தெரிவித்திருந்தது.

இந்த ரயிலில் பயணம் செய்தால் இயற்கை சூழ்நிலையை அனுபவித்தபடி 208 வளைவுகள் வழியாக வளைந்து, நெளிந்தபடி, 16 குகைகளுக்குள் புகுந்து வெளியேறியபடி, 250 பாலங்களை கடந்து 5 மணி நேரம் அருமையான பயணம் செய்தால் ஊட்டி வரும். இந்த இனிமையான அனுபவத்தை பெற, ஜில்லிடும் குளிரை அனுபவிக்க உலகம் முழுவதும் இருந்து வருகின்றனர். இதையொட்டி ஊட்டிக்கு பயணம் செய்தால் இந்த மலை ரயிலில் பயணம் செய்யலாம் என்பது போய், இந்த மலை ரயிலில் பயணம் செய்வதற்காகவே ஊட்டிக்கு பயணம் செய்பவர்களும் இருக்கிறார்கள். இவ்வளவு இருந்தும் இந்த ரயிலில் புறப்படுவது மட்டுமே நிச்சயமான விஷயம்; போய்ச் சேர்வது என்பது நிச்சயமில்லாத விஷயம். எந்த இடத்திலும் எப்போது வேண்டுமானாலும் நின்றுவிடும் என்பதாகவே செய்திகள் அடிக்கடி வந்துகொண்டு இருக்கின்றன.

இந்நிலையில் மெயிடெண்டன்ஸுக்காக கொண்டு போயிருந்த மலை ரயிலின் டீசல் இன்ஜின் ஏழு மாத இடை வெளிக்கு பின்பு, நேற்று (25-08-15) குன்னுார் வந்து சேர்ந்தது. நீலகிரி மாவட்டம், ஊட்டி – குன்னுார் மலை பாதையில், நான்கு டீசல் இன்ஜின்கள் மூலம், மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், குன்னுார் – ஊட்டி இடையில் இயக்கப்படும் டீசல் இன்ஜின் பராமரிப்பிற்காக, கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு திருச்சி பொன்மலையில் உள்ள பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.இந்த இன்ஜின் முழுமையாக புதுப்பிக்கப்பட்டு, மேட்டுப்பாளையத்திற்கு கொண்டு வரப்பட்டு, ராட்சத கிரேன் மூலம் தண்டவாளத்தில் வைக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று காலை, 9:00 மணிக்கு, குன்னுாருக்கு டீசல் இன்ஜின் கொண்டு வரப்பட்டது. இதில், 10 அதிகாரிகள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் அடங்கிய குழுவினர் வந்தனர். இன்ஜின், பகல், 12:00 மணியளவில் குன்னுார் வந்து சேர்ந்தது. ரயில்வே அதிகாரிகள் கூறுகையில்,’ இன்று முதல், இந்த மலை ரயில் ஊட்டிக்கு இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்றனர்.