August 14, 2022

தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே திருவண்ணாமலை கோயிலுக்குள் அனுமதி!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கொரோனா தடுப்பூசி 2 டோஸ்கள் செலுத்தியிருப்பதற்கான ஆதரச் சான்றுடன் வந்தால் மட்டும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர் என மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் கண்டிப்பாகத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரம் வருமாறு:

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் நோய் தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு 10.01.2022 (திங்கள் கிழமை) முதல் கொரோனா தடுப்பூசி 2 தவணைகள் செலுத்தியவர்கள் மட்டுமே திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுவாமி தரிசனம் செய்ய வருகை தருபவர்கள் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி 2 தவணைகள் செலுத்தியற்கான ஆதாரமாக சான்று அல்லது கைபேசியில் பெறப்பட்ட குறுந்செய்தியை காண்பித்தால் மட்டுமே திருக்கோயில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

தற்போது, கோவிட் நோய் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்தின் நோய் தொற்று பரவலை தடுக்கும் இத்தகைய முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகளவில் பரவாமல் இருக்க உதவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா. முருகேஷ் தெரிவித்துள்ளார்.