எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி – டெல்லி முடிவு!

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி – டெல்லி  முடிவு!

ம் நாடு உள்பட சரவ்தேச நாடுகள் தற்போது சந்தித்து வரும் மிகப்பெரிய சவால் சுற்றுச்சூழல் மாசு. இந்த ஆபத்தில் இருந்து தப்புவதற்கான பல்வேறு முயற்சிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன உலக நாடுகள். அதில் முக்கியமானது போக்குவரத்து கொள்கைகள். போக்குவரத்து வாகனம் தவிர்க்க முடியாத அளவிற்கு இன்றியமையாததாக உள்ளது. ஆனால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களால் சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது. இந்த சிக்கலை தீர்ப்பதற்காகத்தான் உலக நாடுகள் எலக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றன.

இந்தியாவிலும் எலக்ட்ரிக் வாகன பயன்பாடு, உற்பத்தி மற்றும் விற்பனையை ஊக்கப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, காற்று மாசு இல்லா டெல்லி என்ற கொள்கையின் அடிப்படையில் புதிய போக்குவரத்து கொள்கையை நடைமுறைப்படுத்த டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, வணிக போக்குவரத்திற்காக பயன்படும் வாகனங்கள் எலக்ட்ரிக் வாகனங்களாக மட்டுமே இருக்க வேண்டும் என டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. புதிய போக்குவரத்து கொள்கையின் படி டெல்லிக்குள், வாடகை டாக்சிகள், உணவு டெலிவரி செய்யும் வாகனங்கள், இ-காமர்ஸ் வணிக நிறுவனங்கள் இனி தங்கள் வணிக பயனபாட்டிற்கு எலக்ட்ரிக் வாகனங்களையே பயன்படுத்துவதை கட்டாயமாக்க உள்ளது டெல்லி அரசு.

வரும் 2030-க்குள் இந்த புதிய போக்குவரத்து கொள்கையை 100 விழுக்காடு நடைமுறைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி மாநில போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் கூறியுள்ளார். அதன்படி இனி டெல்லி எல்லைக்குள் வணிக பயன்பாடுகளில் பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி எரிபொருட்களால் இயங்கும் வாகனங்கள் அனுமதிக்கப்படாது. ஏற்கனவே தனிப்பட்ட மற்றும் பொது போக்குவரத்து வாகனங்களில் பெருமளவு எலக்ட்ரிக் வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி அரசின் புதிய போக்குவரத்து கொள்கை டெல்லியை தூய்மைான நகரமாக மாற்ற உதவும் என்றும் கைலாஷ் கூறியுள்ளார்.

எலக்ட்ரிக் வாகனங்கள் அதிக அளவில் பயன்பாடடிற்கு வரும் நிலையில் டெல்லி முழுவதும் சார்ஜிங் பாயிண்ட்டுகளை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளையும் அம்மாநில அரசு எடுத்து வருகிறது. இதற்கான மசோதா விரைவில் நிறைவேற்றப்பட்டு, சட்டத்துறையின் அனுமதியோடு துணை நிலை ஆளுநரின் ஒப்புதல் பெற்று சட்டமாக்கப்படும் என்றும், அந்த சட்டம் மிகத்தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் டெல்லி அரசின் போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். அதே போல் வணிக பயன்பாட்டில் இருக்கும், பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி வாகனங்களை அப்புறப்படுத்துவதற்கான ஆலோசனைகளை டெல்லி அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சி டெல்லியில் காற்று மாசை குறைத்து தூய்மையான நகரமாக இந்தியாவின் தலைநகரை மாற்ற உதவும் என அம்மாநில அரசு நம்புகிறது.

error: Content is protected !!