அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்பு தொடக்கம்!
தொடரும் கொரோனா மற்றும் ஊரடங்கால் முடங்கி போன நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் ஆன்லைனில் வகுப்புகள் தொடங்கப்படுவதாக கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்துவதில் சிக்கல் நிலவியது. பின்னர், இறுதி செமஸ்டர் தேர்வு தவிர பிற செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. மேலும், நடப்பாண்டு வகுப்புகளை தொடங்க திட்டமிடப்பட்டது.
அதில் மாநிலம் முழுவதும் உள்ள 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை 2, 3-ம் ஆண்டு பயிலும் மாணவர்கள் மற்றும் முதுகலை 2-ம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்த கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தர விட்டிருந்தது. அதன்படி, அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் ஆன்லைனில் பாடங்கள் நடத்தும் பணி இன்று தொடங்கியுள்ளது.
ஒவ்வொரு வகுப்புக்கும் பிரத்யேக வாட்ஸ் அப் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, அதில் பாடங்கள் பற்றிய தகவல்கள், கால அட்டவணை உள்ளிட்டவை புதுப்பிப்பு செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. அனைத்து மாணவர்களும் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்று, பாடங்களை கற்பதை உறுதி செய்யும் வகையில், மாணவர்களை தனித்தனியாக அழைத்து அவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பதை பேராசிரியர்கள் உறுதி செய்து வருவதாகவும் கூறியுள்ளது.
ஊரடங்கால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், மீண்டும் கல்லூரிகள் திறக்கப்படும் வரை ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.