September 18, 2021

ஆபத்தான ஆன்லைன் கேம்களுக்குத் தடை! – மத்திய அரசு திட்ட வட்டம்!

தற்கொலைக்கு தூண்டும் வகையில் சமூக ஊடகங்களில் ஆன்லைன் விளையாட்டுகள் உலக அளவில் பிரபலமாகி வருகின்றன. 50 நாட்கள் விளையாட்டில் ஈடுபடுபவர்களுக்கு பிளேடால் கீறிக் கொள்வது போன்று பல்வேறு வன்முறைக்கு உள்ளாக்கும் உத்தரவுகள் கொடுக்கப்படும். கடைசி நாளில் தற்கொலை செய்து கொள்ளுமாறு உத்தரவிடப்படும். இந்த விளையாட்டில் ஈடுபட்ட இரண்டு மாணவர்கள் மகாராஷ்டிராவிலும் மேற்கு வங்கத்திலும் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்நிலையில், தற்கொலைக்குத் தூண்டும் ஆன்லைன் விளையாட்டுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விளையாட்டுக்கான இணைப்பை உடனடியாக அகற்றுமாறு கூகுள், பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ,மைக்ரோசாப்ட், யாஹூ உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அபாயகரமான ஆன்லைன் விளையாட்டால் இந்தியாவில் குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வந்துள்ளன. குழந்தைகளை தற்கொலைக்குத் தூண்டும் இதுபோன்ற விளையாட்டுகளை நீக்குமாறு சமூக ஊடகங்களுக்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை கடிதம் எழுதியுள்ளது. இதற்கிடையே டெல்லியில் நேற்று பேட்டியளித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ‘‘ஆபத்தான ஆன்லைன் விளையாட்டுக்களுக்கான இணைப்பை அகற்றாத சமூக ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று கூறியுள்ளார்.

ஆனால், தடை செய்வது சாத்தியமா என்ற கேள்வி எழுப்புகிறார்கள் . கூகுள் தேடுதல் தளத்தில் ‘புளூ வேல் சேலஞ்ச்’ என்ற வார்த்தையை முழுமையாக நீக்கி விடலாம். பேஸ்புக் நிர்வாகம்  தன் இணைய தளத்தில் தனியாக செயல்படும் குழுக்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கலாம். இதேபோல்  ட்விட்டர் நிர்வாகமும் செயல்படலாம். ஆனால் இதையெல்லாம் செய்தால் கூட இந்த விளையாட்டை நிறுத்த முடியாது என்ற சூழ்நிலையே காணப்படுகிறது என்கிறார்கள். காரணம் இந்த விளையாட்டு வாட்ஸ் ஆப் மற்றும் டெலிகிராம் போன்ற,’ மெசேஜ் ஆப்’கள் மூலமும் விளையாடப்படுகிறது. தினசரி உத்தரவுகள் இந்த,’ ஆப்’கள் மூலமே பரவுகின்றன. இந்த,’ ஆப்’களை உருவாக்கியவர்கள் கூட யார் யாருடன் தொடர்பில் உள்ளனர்; என்ன தகவல் பரிமாறிக்கொள்ளப்ப டுகிறது என்பதை கண்டுபிடிப்பது கடினம். அதனால் த்திய அரசு தடை விதித்தது ஒரு புறம் இருக்க, ஒவ்வொரு வீட்டிலும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். பிள்ளைகளின் தினசரி செயல்பாடுகளை கண்டுபிடித்து சரி செய்ய வேண்டும். அப்போது தான் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என்கிறார்கள்.