January 27, 2023

உலகப் பொது நாணயம் சாத்தியமா? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

ற்போது நிகழ்ந்து வரும் ரஷ்யாவின் உக்ரைன் மீதான போர் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. அதில் ஒன்று அமெரிக்காவின் தொடர்ச்சியான வல்லாதிக்கம் தொடர்பானது. அமெரிக்கா தனது பொருளாதார நலன்களைக் காக்கும் பொருட்டு தொடர்ச்சியாக பல்வேறு மேலாதிக நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என்பது பலகாலமாக பல அறிஞர்களின் குற்றச்சாட்டு. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக (1991 ஆம் ஆண்டில் ஈராக் மீது தாக்குதல் தொடுத்தது முதல்) வளைகுடா பகுதியில் அமெரிக்கா தொடர்ச்சியாக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ போர் செய்து வருகிறது. அதே போல சர்வதேச விவகாரங்களில் தனது செல்வாக்கை தக்க வைக்க புதிய நண்பர்களையும் ஏற்படுத்தி வருகிறது. இந்தியா இதற்கொரு சிறந்த எடுத்துக்காட்டு. சீனாவை மட்டம் தட்டி வைக்க இந்தியா இப்போது தேவை. ஒரு காலத்தில் இந்தியாவை அடக்கி வைக்க பாகிஸ்தானை வளர்த்து விட்ட அமெரிக்கா பின் லேடன் விவகாரத்திற்குப் பிறகு முற்றிலுமாக பாகிஸ்தானை கைவிட்டது. ஆக அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை; எதிரியும் இல்லை எனும் நிலையை அமெரிக்கா கடைபிடிக்கிறதோ எனும் ஐயம் எல்லோர் மனதிலும் உண்டு. ஆயினும் எப்படி அமெரிக்கா இவ்வாறு நினைத்த நேரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டாலும் செல்வாக்கை இழக்காமல் இருக்கச் செய்கிறது? இதற்கு பதில் அளிப்பதுதான் அமெரிக்க டாலர்.

சென்ற நூற்றாண்டில் முதல் இரண்டு உலகப்போர்களின் விளைவாக இங்கிலாந்து பேரரசின் செல்வாக்கு மறைந்து அமெரிக்காவும், சோவியத் ஒன்றியமும் இரு துருவ வல்லரசுகளாக உருவாயின. அதுவரை இங்கிலாந்தின் பவுண்ட் ஸ்டெர்லிங்தான் உலகளவில் நிலைத்த மதிப்புக் கொண்ட நாணயமாக இருந்து வந்தது. முதல் உலகப்போரின் முடிவில் இங்கிலாந்தின் செல்வாக்கு குறைந்தபோது அமெரிக்க டாலர் சர்வதேச பரிமாற்று நாணயமாக ஆனது. இரண்டாம் உலகப்போரின் முடிவில் முக்கிய தொழில்மய நாடுகள் ஒன்றிணைந்து பெரட்டன்வூட்ஸ் சிஸ்டம் எனும் அமைப்பை ஏற்படுத்தின. அதன்படி அமெரிக்க நாணயம் தங்கத்திற்கு இணையாக மதிப்பிடப்பட்டு நிலைத்த நாணயமாக ஏற்கப்பட்டது. ஆனால் பின்னர் அதிபர் நிக்சன் 1970 ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் தங்கத்திற்கு இணையான மதிப்பு என்பதை நீக்கி அமெரிக்க டாலரின் மதிப்பையே மாற்று மதிப்பிற்கான நாணயமாக ஆக்கினார். இதனால் உலக நாடுகள் தங்கள் அந்நிய செலாவணியை டாலர்களிலேயே வைத்துக்கொள்ளத் துவங்கின. இன்றுவரை அமெரிக்க டாலரின் மதிப்பு எத்தனையோ இடர்ப்பாடுகள் வந்தாலும் சிறிதும் அசைந்து கொடுக்காமல் நிலைத்த மதிப்புக் கொண்டதாக இருக்கிறது. அமெரிக்க டாலர் தவிர ஐரோப்பிய ஒன்றியத்தின் யூரோ, இங்கிலாந்தின் பவுண்ட் ஸ்டெர்லிங், ஜப்பானின் யென், சீனாவின் யுவான் எனப் பல நிலைத்த மதிப்புக்கொண்ட நாணயங்களும் உள்ளன.

தற்போதைய உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரும் அதனையொட்டி நடைபெறும் விவாதங்களிலும் இடம் பெறும் ஒரு கேள்வி அமெரிக்காவின் செல்வாக்கு முன்பு போல் வலுவாக இருக்கிறதா என்பதேயாகும். ஏனெனில் 2015 ஆம் ஆண்டில் கிழக்கு உக்ரைனில் ஆக்கிரமிப்பு செய்த ரஷ்யா இன்று உக்ரைனின் மீது வல்லாதிக்க போர் ஒன்றை நடத்தி வருகிறது. உலகப் பொருளாதாரத்தை பாதிக்கின்ற இப்போரை முடிவிற்கு கொண்டு வரவோ, தடுத்து நிறுத்தவோ அமெரிக்காவால் இயலவில்லை. உக்ரைனிற்கு நேரடியாக இராணுவ உதவிகளைச் செய்வது சாத்தியமில்லாத காரணத்தால் செய்யவில்லை. அப்படி செய்தால் உலகப் போர் மூளும் என்கிறார் அதிபர் பைடன். எனவே ரஷ்யா மீது கடும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளார். இத்தடைகளை ரஷ்யாவால் முற்றிலும் உடைக்க முடியாவிட்டாலும் தனது பொருளாதாரம் தாக்குப் பிடிக்கும் வகையில் வேறு வழிகளில் நாட்டிற்கு அந்நிய செலாவணியையும், பொருளாதார நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும். குறிப்பாக பணப்பரிமாற்றத்திற்கு சீனாவின் மத்திய வங்கியை பயன்படுத்திக் கொள்வதும் ஒன்று. இந்தியாவிற்கு சலுகை விலையில் கச்சா எண்ணெய்யை அளிப்பது என சில நடவடிக்கைகளின் மூலம் தனது செல்வாக்கை வெளிக்காட்டிக் கொள்ள நினைக்கிறது.

இச்சூழலில்தான் ரஷ்யா மீதான தடை உலகப் பொருளாதாரத்தில் ஏற்படுத்தப் போகும் பாதிப்பை, குறிப்பாக தாதுப் பொருட்களின் வர்த்தகத்தில் ஏற்படும் இடைவெளி குறித்து கவலைத் தெரிவிக்கப்படுகிறது. நிக்கல், கம்ப்யூட்டர் சிப்களுக்கு தேவைப்படும் நியான், பல்லாடியம் மற்றும் பிளாட்டினம் ஆகியவற்றின் உற்பத்தியும், ஏற்றுமதியும் முற்றிலுமாக பாதிக்கப்படுகிறது. இது தவிர செம்பு, இரும்பு போன்ற மிக முக்கிய கனிமங்களும் கூட சிக்கலைச் சந்திக்கின்றன. இவற்றின் விலை அதிகரிக்கும் போது பல நாடுகளின் பொருளாதாரமும் பாதிக்கப்படும். அவை கடன் வாங்கத் துவங்கும். எதைக் கொண்டு கடன் வாங்குவார்கள்? தங்கள் இருப்பிலுள்ள அமெரிக்க டாலரை பயன்படுத்தித்தான் கடன் வாங்குவார்கள். இந்தியா போன்ற நாடுகளில் உள்நாட்டில் பத்திரங்களை வெளியிட்டு ஓரளவாவது கடன் திரட்டலாம். ஆனால் பிற நாடுகளால் இயலாது. எனவே அந்நாடுகள் அமெரிக்க டாலரையே தங்களது மீட்பராக கருதும் இதனால் டாலரின் மதிப்பு துவக்கத்தில் கூடும். ஆனால் இந்நாடுகளில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டால் அவற்றால் கடனைத் திரும்ப அடைக்க இயலாது. அவற்றின் வீழ்ச்சி அமெரிக்க டாலரின் வீழ்ச்சியாகவும் மாறும். எந்தவொரு நாணயத்தின் அதிகமான புழக்கம் அதன் மதிப்பை குறைக்கவே செய்யும். இத் தர்க்கம் அமெரிக்க நாணயத்திற்கும் பொருந்தும்.

அமெரிக்காவின் நாணயத்தை உலக நாடுகள் ஏற்றது அப்போதைய சூழலுக்கு ஏற்றபடியான செயல்பாடு. இன்று உலகம் பல சக்தி வாய்ந்த நாடுகளின் சங்கமமாகவுள்ளது. இந்தியா, ரஷ்யா, சீனா, பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்கா இணைந்த பிரிக்ஸ் அமைப்பு போன்ற வர்த்தக மற்றும் பொருளாதார கூட்டுறவு அமைப்புகள் உலகம் முழுதும் ஏற்படுத்தப்படுகின்றன, இதன் நோக்கம் குறைந்த செலவில் இறக்குமதியும், தங்களது பொருட்களுக்கு நிரந்தரமான ஏற்றுமதி சந்தையுமாகும். இதனைத் தொடர்ந்து பொதுவான நாணயங்களையும் அவை ஏற்படுத்த நினைத்தாலும் கைகூடுவதில்லை. இதற்கு புவிசார் அரசியல் காரணமாகவுள்ளது. சொல்லப்போனால் அமெரிக்கா அல்லது அதனுடன் போட்டியிடும் நாட்டுடனான உறவினால் பொது நாணயத்தை இந்த அமைப்புகள் தவிர்க்கின்றன. பிரிக்ஸ் அமைப்பும் பொது நாணயத்தை நடைமுறைப்படுத்த விரும்புகிறது. இதற்கு தடையாக இருப்பது சீனாவின் வெளிப்படையற்ற, ஜனநாயகமற்ற அமைப்பு. ரஷ்யாவும் கூட பொருளாதார பலம் பெற்றிருந்தாலும் பலவீனமான ரூபிள் நாணயத்தையே வைத்திருக்கிறது. இந்திய நாணயமும் நிச்சயமற்ற முகமதிப்புக் கொண்டது.

இப்படியிருந்தாலும் கூட அமெரிக்க டாலருக்கு நிகராக உலகப் பொதுவான் நாணயமுறையை ஏற்படுத்துவதில் சிக்கல் ஏதுமில்லை. ஜப்பான், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஈரோ, வளைகுடா நாடுகளில் குவைத், சவூதி மற்றும் ஐக்கிய அமீரகம் போன்ற நாடுகளின் நாணயங்கள் நிரந்தர மதிப்புக்கொண்டவை. இது தவிர கனடா, இங்கிலாந்தின் பவுண்ட் ஸ்டெர்லிங் போன்றவையும் இணைந்தால் உலகப் பொது நாணயம் ஏற்படுத்தப்படலாம். அதற்கான வழிமுறைகள் என்ன என்பதே இப்போதைய கேள்வி. அப்படியொரு சூழல் வந்தால் அமெரிக்க டாலரின் மதிப்பு என்னவாகும். அதன் மூலம் மேலாதிக்கம் செலுத்தும் அமெரிக்காவின் நிலை என்னவாகும் என்பது தெரியாது. ஆனால் பொது நாணயத்தின் மதிப்பு எவ்வாறு நிர்ணயிக்கப்படும் என்பதும் தெரியாது. அதுவரை அமெரிக்க டாலரே தொடரும்.

உலகின் பொருளாதாரத்தை தீர்மானிப்பது கச்சா எண்ணெய் மற்றும் கனிமங்களின் வர்த்தகமே. அதில் அமெரிக்காவின் பங்கு குறைவுதான். அமெரிக்க நிறுவனங்கள் டிஜிட்டல் உலகிலும்(மென்பொருள் உட்பட), ஆயுதங்களின் ஏற்றுமதியிலும், நிதி மூலதனத்திலும் ஈடுபடுகின்றன. உணவுப் பொருட்கள், வாகனங்கள், விமானங்கள் போன்றவற்றில் ஈடுப்பட்டாலும் போட்டியை எதிர்கொள்கின்றன. கச்சா எண்ணெயின் பயன்பாடு 2030 முதல் பேரளவில் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனிமங்களுக்கும் மாற்று வரலாம் அல்லது பயன்பாடு குறையலாம். எனவே அடுத்த 50 ஆண்டுகால பொருளாதார வளர்ச்சி முற்றிலும் புதியது. அதற்கு அமெரிக்க டாலர் போன்ற ஒரு நாட்டின் நாணயத்தையே சார்ந்திராமல் இருப்பதும் நன்மையே. எனவே உலகம் முழுதும் மாற்று நாணய அமைப்பைக் குறித்த விவாதங்கள் நிகழ்கின்றன. ஆகையால் மாற்றம் என்பதே நிலையானது என்றக்கூற்று அமெரிக்க டாலருக்கும், அமெரிக்காவிற்கும் சேர்ந்தே பொருந்துகிறது அல்லவா?

ரமேஷ்பாபு