கவர்னருக்கு ஒரு வாரம் அவகாசம்! – ஸ்டாலின் பேட்டி!

கவர்னருக்கு ஒரு வாரம் அவகாசம்! – ஸ்டாலின் பேட்டி!

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டது. தன்னுடைய பெரும்பான்மையை சட்டமன்றத்தில் நிரூபிக்க ஆளுநர் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இதற்கு உதவியாக தமிழக சட்டமன்றத்தை உடனடியாக கூட்டவும் உடனடியாக உத்தரவிடவேண்டும் என்று கோரி தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மூன்று கோரிக்கை மனுக்கள் ஆளுர் வித்யாசாகர் ராவிடம் இன்று மாலை தரப்பட்டுள்ளன. முதல்வருக்கு பெரும்பான்மை பலம் இல்லை என்று வெளிப்படையாகத் தெரிந்த போதிலும் ஆளுநர் இதுவரை உரிய உத்தரவிடவில்லை. இது அவர்மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே, ஒருவார கால அவகாசத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என ஆளுநருக்கு அளித்த மனுக்களில் கூறப்பட்டுள்ளது. ஆளுநர் ஒரு வார காலத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்கத் தவறினால் நீதிமன்றத்தையும், மக்கள் மன்றத்தையும் நாடி தகுந்த நடவடிக்கை எடுப்போம் என, ஆளுநரிடம் தெரிவித்துவிட்டதாக ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பின்னர் கூறினார்.

ஆளுநர் வித்யாசாகர் ராவை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில், காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி உறுப்பினர் அபுபக்கர் மற்றும் திமுக உறுப்பினர்கள் அடங்கிய குழு சந்தித்து மனுக்களைத் தந்தது. திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் தனித்தனி மனுக்கள் தரப்பட்டன.

மனுக்களில் எழுப்பப்பட்ட கோரிக்கைகள் குறித்து பின்னர், செய்தியாளர்களிடம் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் திமுக செயல்தலைவருமான மு.க. ஸ்டாலின் விளக்கமளித்தார்.”எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டது. மொத்தம் உள்ள 234 எம்எல்ஏக்களில் முதல்வருக்கு ஆதரவாக 114 எம்எல்ஏக்களும் எதிராக 119 எம்எல்ஏக்களும் உள்ளனர். இந்த விவர அடிப்படையில், ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநரிடம் பலமுறை மனுக்கள் தரப்பட்டுள்ளன. இந்திய குடியரசு தலைவரிடமும் நேற்று மனுக்கள் தரப்பட்டுள்ளன. மாநில அரசுக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளதா என்பதை நிரூபிக்கவேண்டிய இடம் சட்டமன்றம்தான். ஆளுநர் மாளிகை அல்ல என்பதை எஸ்.ஆர். பொம்மை வழக்கிலும், அருணாசலம் தொடர்பான வழக்குகளிலும் உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்புகளை வழங்கியுள்ளது.

எனவே, மாநில முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தன்னுடைய பெரும்பான்மை பலத்தை சட்டமன்றத்தில் உறுதி செய்ய உடனடியாக ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டமன்றத்தை உடனடியாக கூட்டுவதற்கும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை ஆளுநரிடம் நாங்கள் எழுப்புவது இதுவே கடைசி முறையாக அமையும். ஒரு வாரக் காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்க ஆளுநர் தவறும் பட்சத்தில், உச்சநீதிமன்றத்தையும், மக்கள் மன்றத்தையும் அணுக திமுக தலைமையில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை திட்டமிட்டுள்ளன.இந்த முறை, ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க தகுந்த உத்தரவை பிறப்பிப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.”இவ்வாறு, மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஆளுநரைச் சந்தித்தவர்கள் குழுவில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், ஜெ. அன்பழகன், தா.மோ. அன்பரசன். பொன்முடி, எ.வ. வேலு, காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் சட்டமன்ற தலைவர் கே.ஆர். ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அபு பக்கர் ஆகியோரும் இருந்தனர்.

error: Content is protected !!