பாலி டெக்னிக் காலேஜில் அரியர் பாடங்களில் தேர்ச்சி பெற உயர்கல்வித்துறை சிறப்பு வாய்ப்பு!

தமிழ்நாடு முழுவதுமுள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில், 1984ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை பயின்று, அரியர் வைத்திருக்கும் முன்னாள் மாணவர்கள், அரியர் பாடங்களில் தேர்ச்சி பெற உயர்கல்வித்துறை சிறப்பு வாய்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

பாலிடெக்னிக் கல்லூரிகளில் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகளை பயிலும் மாணவர்கள் அரியர் வைத்தால், படிப்பை முடித்த அடுத்த 4 செமஸ்டர்களில் மட்டுமே அரியர் தேர்வுகளை எழுத அனுமதிக்கப்படுவார்கள். அந்த 4 செமஸ்டர்களிலும் அரியர் வைத்த பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை எனில் அவர்களின் படிப்பே ரத்து செய்யப்படும்.

இந்நிலையில் அரியர் எழுதும் வாய்ப்புகளில் தேர்ச்சி பெறாத முன்னாள் மாணவர்களுக்கு மீண்டும் ஒருமுறை அரியர் தேர்வு எழுத உயர்கல்வித்துறை சிறப்பு வாய்ப்பை அறிவித்துள்ளது. அதன்படி 1984ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை பயின்று, அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் இந்த சிறப்பு வாய்ப்பை பயன்படுத்தி பாடங்களில் தேர்ச்சி பெறுமாறும் கூறப்பட்டுள்ளது.

தேர்வெழுத விரும்பும் மாணவர்கள் வரும் 20ம் தேதிக்குள் தேர்வுக்கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும், அதன்பின்னர் 29ம் தேதி வரை அபராதத்துடன் கூடிய தேர்வுக்கட்டணத்தை செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.