January 30, 2023

உடைந்த ரம் பாட்டிலும், செஞ்சுரி சாதனையும். ..!

டெஸ்ட் மேட்ச் போட்டிகள் ஆரம்பித்து, இதுவரையில் 2417 மேட்சுகள் நடந்துள்ளன. இதில், குறைந்த பந்துகளில் 100 ரன்களைக் குவித்தவர்கள் என்று ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. இந்த 2417 போட்டிகளில் இதுவரையில் வெறும் 86 முறைதான் 100 பந்துகளுக்கு முன்பாக சதம் அடிக்கப்பட்டு உள்ளது. 44 பேட்ஸ்மேன்கள் இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்கள். இப்படி 100 பந்துகளுக்கு முன்பாக 100 ரன்களை அடித்த பேட்ஸ்மேன்களில் முதலிடத்தைப் பெறுபவர் வீரேந்த்ர செஹ்வாக். இதுவரையில் இவர் 7 முறை இப்படி 100 பந்துகளுக்கு முன்பாகவே சதமடித்துள்ளார். ஆனால், இந்தக் கட்டுரை இவரைப் பற்றியதில்லை. சமீபத்தில் ஏமாற்றுக்காரரான ப்ரெண்டம் மெக்கல்லம் 54 பந்துகளில் சதமடித்து இருந்தார். இந்த நிகழ்வுக்கு முன்பாக, அப்போதைய சாதனையாக இருந்தது 56 பந்துகளில் அடிக்கப்பட்ட சதம்தான். 1986ஆம் ஆண்டு ஒரு முறையும் 2014ஆம் ஆண்டு இரண்டாவது முறையும் இப்படி 56 பந்துகளில் டெஸ்ட் போட்டிகளில் சதம் அடிக்கப்பட்டது.

1986 – சர் ஐஸக் விவியன் அலெக்ஸாண்டர் ரிச்சர்ட்ஸ்
2014 – மிஸ்பா உல் ஹக்.

இதில் ஒரிஜினல் மாஸ்டர் பிளாஸ்டர் ஆன ரிச்சர்ட்ஸ் அடித்த சதம் பற்றியதுதான் இன்றைய கட்டுரை. ஏனென்றால், மிகச் சரியாக 32 ஆண்டுகளுக்கு முன்பாக இன்றுதான் இந்தச் சதம் அடிக்கப்பட்டது (ஏப்ரல் 15, 1986).

டேவிட் கோவர் தலைமையிலான இங்கிலாந்து அணி 1986ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகளை விளையாடியது. முதல் நான்கிலும் தோற்ற நிலையில், ஐந்தாவது போட்டியை கேப்டன் ரிச்சர்ட்ஸின் ஊர் (நாடு) ஆன்டீகாவில் எதிர்கொண்டது இங்கிலாந்து அணி.

முதலில் பேட்டிங் செய்து, மே இ தீவுகள் அணி 474 ரன்களைக் குவித்தது. அப்போதெல்லாம் ஒரு நாளைக்கு 90 ஓவர்களை வீசியாக வேண்டும் என்று கட்டாயமான விதிமுறை நடைமுறையில் இல்லாததால், இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய வந்தபோது இரண்டு நாள் முடிவடையும் நிலையில் இருந்தது. மே இ தீவுகள் அணி 134.3 ஓவர்களைத்தான் எதிர்கொண்டது என்பதும் குறிப்பிட வேண்டிய விஷயம்.

அதன் பின்னர், இங்கிலாந்து அணி பொறுமையாக ஆடி, 107.4 ஓவர்களில் 310 ரன்களைக் குவித்தபோது அவர்களுக்கு இந்தப் போட்டியை வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிக்கலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஏனென்றால், அவர்கள் வெறும் 164 ரன்கள்தான் பின் தங்கி இருந்தனர். போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் மதிய உணவு இடைவேளை ஆகி விட்டது. இன்னமும் ஒருநாள் போட்டிதான் மீதம் இருக்க, போட்டியில் தோற்க மாட்டோம் என்றே இங்கிலாந்து அணியினர் நம்பினார்கள். ஆனால், இங்கேதான் ரிச்சர்ட்ஸின் மேதைமையை அவர்கள் மறந்து விட்டார்கள்.

தேநீர் இடைவேளைக்கு அரை மணி நேரம் இருக்கும்போது, ரிச்சர்ட்ஸன் அவுட் ஆக, மைதானத்திற்குள் ஆட வருகிறார் ரிச்சர்ட்ஸ். தேநீர் இடைவேளைக்குச் செல்லும்போது அவர் 28 ரன்களுடன் நாட் அவுட் ஆக இருக்கிறார். அதன் பிறகு நடந்ததுதான் அதிரடி. தேநீர் இடைவேளைக்குப் பிறகு இங்கிலாந்தின் பந்துவீச்சாளர்கள் யாருமே பந்துவீச முன்வர மறுக்கிறார்கள். அப்போதைய உலக சாதனையான டென்னிஸ் லில்லியின் 355 விக்கெட்டுகளை முறியடிக்க இரண்டு விக்கெட்டுகளே தேவைப்பட்ட நிலையில் இயன் போத்தம் பந்து வீச முன்வருகிறார். அதைப்போலவே அவர் இன்னொரு பக்கத்தில் இருந்து பந்துவீச ஸ்பின்னர் ஜான் எம்புரியின் பேரை கேப்டன் கோவரிடம் பரிந்துரைக்கிறார்.

இப்படியாக, போத்தமும் எம்புரியும் இருமுனையில் இருந்து பந்து வீச தயாராகிறார்கள். ஆனால், அவர்களை எதிர்நோக்கி இருப்பதோ, ரிச்சர்ட்ஸ். முதல் 35 பந்துகளில் தனது அரை சதத்தை எட்டிய ரிச்சர்ட்ஸ், அதன் பிறகு இன்னமும் ஆக்ரோஷமாக அடித்து ஆட ஆரம்பித்தார். அதுவரையில் ஒன்பது ஓவர்களில் வெறும் 14 ரன்களைக் கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்திருந்த எம்புரியின் அடுத்த ஐந்து ஓவர்களில் 69 ரன்களைக் குவித்தார் ரிச்சர்ட்ஸ்.

பவுன்சராக வீசி, ரன்களை மட்டுப்படுத்தலாம் என்று நினைத்த போத்தமின் எண்ணமும் ஈடேறவில்லை. ஒருமுறை போத்தம் வீசிய பவுன்சரை ரிச்சர்ட்ஸ் சிக்சர் ஆக அடிக்க, அது பார்வையாளர்கள் மத்தியில் சென்று விழுந்தது. அங்கே இருந்த “ரம்” பாட்டிலை உடைத்தது. பின்னர் பந்து மறுபடியும் போத்தமிடம் வந்தபோது, அதில் மதுவின் வாசமும், உடைந்த பாட்டிலின் ஒரு சிறு துண்டும் இருப்பதைக் கண்டார் போத்தம். மொத்தம் 7 சிக்ஸர்களை விளாசிய ரிச்சர்ட்ஸின் இரண்டாவது அரை சதம் வெறும் 21 பந்துகளில் நிறைவு பெற்றது. அதற்கு முன்பாக, 1921ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் ஜாக் க்ரெகொரி தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 67 பந்துகளில் குவித்ததுதான் சாதனையாக இருந்தது. இந்த 65 ஆண்டுகால சாதனையை ரிச்சர்ட்ஸ் உடைத்த போது, அந்த “ரம்” பாட்டிலைப் போல இங்கிலாந்து அணியின் நம்பிக்கையும் நொறுங்கியது.

ஒருநாள் மட்டுமே உள்ளது. வெறும் 164 ரன்கள்தான் முன்னிலை. எளிதில் போட்டியை டிரா செய்துவிடலாம் என்ற நிலையை தனது அதிரடி ஆட்டத்தால் மாற்றினார் ரிச்சர்ட்ஸ். இப்போது 411 ரன்களை அடிந்தால், வெற்றி என்று புதிய இலக்கைக் கொடுத்தார். ரிச்சர்ட்ஸ்சின் அந்த அதிரடியால், மன உறுதியை இழந்திருந்த இங்கிலாந்து அணி, வெறும் 79 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 5-0 என்ற கணக்கில் தோற்றது.

ரிச்சர்ட்ஸ் எவ்வளவு ரன்களைக் குவித்தார் என்பது இங்கே கணக்கில்லை. அதை எப்படி அவர் குவித்தார் என்பதுதான் மிகவும் முக்கியம். “நீங்கள் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை” என்று ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுக்கும்படியாக ரிச்சர்ட்ஸ் விளையாடினார். போத்தம் வீசிய ஒரு பந்தை, ஆக்ரோஷமாக திருப்பி அடிக்க, அது போத்தமின் தலைக்கு கொஞ்சமே கொஞ்சம் மேலே சென்று சிக்ஸர் ஆனது. அவ்வளவு வேகமாக, பலத்துடன் Flat ஆக அடிக்கப்பட்ட சிக்ஸர் அது. இன்னொரு சிக்ஸரோ, மைதானத்திற்கு வெளியே சென்று, ஆன்டீகாவின் சிறைச்சாலைக்கு அருகில் விழுந்தது. இந்த சிறைச்சாலையில்தான் ரிச்சர்ட்ஸ்சின் அப்பா வார்டனாக பணிபுரிந்தார். போதாக்குறைக்கு அதுவரைக்கும் மிகவும் சிறப்பாக பந்து வீசிய எம்புரியின் ஒரு ஓவரில், ஒரு கையால் அவர் சிக்ஸர் அடித்தது, இங்கிலாந்து வீரர்களின் மன உறுதியை மொத்தமாக குலைத்தது என்றே சொல்லலாம்.

ஐந்து நாள் போட்டியின் மொத்தப் போக்கையும் ஆட்டத்தின் ஒரு செஷனில் மாற்றக்கூடிய திறன் வாய்ந்த வீரர்கள் மிக மிகக் குறைவே. அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ரிச்சர்ட்ஸ். அதை அவர் தொடர்ச்சியாக, ஹெல்மெட் போன்ற பாதுகாப்பு கவசங்கள் இல்லாமல் செய்து வந்ததால்தான் அவரை மாஸ்டர் பிளாஸ்டர் என்று அழைக்கிறோம்.

ரிச்சர்ட்ஸின் சாதனையை இன்னொரு கோணத்தில் பார்க்க வேண்டுமெனில், கிரிக்கெட் மைதானங்களின் சுற்றளவு குறைந்து, கிரிக்கெட் பேட்டுகளின் தரம் உயர்ந்த பிறகு, எவ்வளவு வேகமான மந்து வீச்சாளராக இருந்தாலும், அடி படாமல் தடுக்கும் ஹெல்மெட் போன்ற பாதுகாப்புக் கவசங்கள் மிகுந்த கடந்த 30 ஆண்டுகளில், இதுவரையில் மூன்றே மூன்று பேர்தான் ரிச்சர்ட்ஸைப் போல 60 பந்துகளுக்கும் குறைவாக சதமடித்து உள்ளார்கள்.

விஸ்வநாதன்