September 18, 2021

கடல்லே கலந்துட்ட ஆயிலை அகற்றும் பணி ரொம்ப கஷ்டம்! – மிலிட்டரி ஆபீசர் பேட்டி

சென்னையை அடுத்த எண்ணூர் காமராஜர் துறை முகத்தில் கடந்த 27-ந் தேதி நள்ளிரவு எரிவாயுவை இறக்கிவிட்டு ஈரான் நாட்டு சரக்கு கப்பல் ஒன்று அங்கிருந்து வெளியேறியது.அப்போது, மும்பையில் இருந்து டீசல் ஏற்றிக்கொண்டு எண்ணூர் துறைமுகத்தை நோக்கி வந்த ‘டான் காஞ்சீபுரம்’ என்ற சரக்கு கப்பல் மீது ஈரான் சரக்கு கப்பல் (பி.டபிள்யூ. மேப்பில்) பயங்கரமாக மோதியது.துறைமுகத்தில் இருந்து சிறிது தொலைவில் நடந்த இந்த விபத்தில் ‘டான் காஞ்சீபுரம்’ கப்பல் சேதம் அடைந்து, அதில் இருந்த டீசல் கடலில் கொட்டியது. இந்த டீசல் சென்னையையொட்டி உள்ள கடற்பரப்பில் மிதக்கிறது. திருவொற்றியூர் பாரதியார் நகர் அருகே அதிகப்படியான டீசல் படிந்து இருக்கிறது. இதனால் கடலில் உள்ள ஆமைகள் மற்றும் மீன்கள் இறந்து கரை ஒதுங்குகின்றன.

ennore feb 4

அலைகளால் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கும் டீசல் படிமத்தை அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. திருவொற்றியூர் பாரதியார் நகரில் கடலோர காவல்படையின் சுற்றுச்சூழல் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஊரக வளர்ச்சி துறையினரும், பெருநகர சென்னை மாநகராட்சி பணியாளர்களும் படிந் திருக்கும் டீசலை வாளிகள் மூலம் அகற்றி வருகின்றனர்.

இதுதவிர ஏராளமான தன்னார்வலர்களும் களத்தில் இறங்கி டீசல் படிமத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த பணியை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி ஆய்வு செய்துவருகிறார். கடற்பரப்பில் டீசல் படிமம் மிதக்கும் இடத்தை சுற்றிலும் ‘பூம்’ எனப்படும் ரப்பர் மிதவை தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் கடற்கரை மணற்பரப்பில் படிந்திருக்கும் டீசலும் மூட்டை, மூட்டையாக அகற்றப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து எண்ணூர் காமராஜர் துறைமுக பொது மேலாளர் அருண்குமார் குப்தா, மீஞ்சூர் போலீசில் புகார் செய்தார்.அதன்பேரில் விபத்துக்குள்ளான இரு கப்பல்கள் மீதும், கடல்நீரை மாசுபடுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் 5 வழக்குகளை போலீசார் பதிவு செய்து உள்ளனர்.இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக இரு கப்பல்களின் கேப்டன்களுக்கும் சம்மன் அனுப்பியுள்ள போலீசார், விபத்து குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறும் அவர்களை கேட்டுக்கொண்டு உள்ளனர்.

இந்த நிலையில், கடலில் படிந்திருக்கும் டீசலை அகற்றுவதற்காக நடைபெறும் பணிகள் குறித்து விளக்குவதற்காக கப்பல்கள் மோதிக்கொண்ட இடத்துக்கு நேற்று நிருபர்களை ‘வரத்’ எனும் கப்பல் மூலம் கடலோர காவல்படை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.

சிறிது நேரத்தில் ‘ஹெலிகாப்டர்’ மூலம் கடலோர காவல்படையின் தென் பிராந்திய ஐ.ஜி ராஜன் பர்கோத்ரா அந்த கப்பலில் வந்து இறங்கினார். அவர், விபத்து குறித்தும், கடலில் டீசல் படலம் மிதப்பது குறித்தும் நிருபர்களிடம் விளக்கி கூறினார்.அப்போது அவர்,”எண்ணூர் துறைமுகம் அருகே இரு கப்பல்கள் மோதிக்கொண்ட சம்பவம் பற்றிய தகவல் கிடைத்தவுடன் நாங்கள் நடவடிக்கைகளில் இறங்கிவிட்டோம். கடலோர காவல்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் கடலில் டீசல் பரவிய இடம் உடனடியாக ஆய்வு செய்யப்பட்டது.கடற்பரப்பில் அதிக அடர்த்தி உள்ள எண்ணெய் மிதக்குமானால் அதனை உடனடியாக அகற்றிவிடலாம். ஆனால் தற்போது கடலில் படிந்துள்ள டீசல் அடர்த்தி குறைந்ததாகும். எனவே தான் அதனை அகற்றும் பணி பெரும் சவாலாக அமைந்து உள்ளது. டீசல் படிமத்தை அகற்ற நாங்கள் உபயோகிக்கும் ‘ஆயில் ஸ்பிலிட் டிஸ்பரன்ட்’ ரசாயனம், 10 மீட்டர் ஆழமான கடல் பகுதியில் மட்டுமே பயன்படுத்தக்கூடியது. எனவே தான் கரையோரம் இதனை பயன்படுத்த முடியவில்லை.கடலில் சுமார் 34 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் டீசல் படலம் மிதப்பதாக கணிக்கப்பட்டு உள்ளது.

கடலில் 2 கப்பல்கள் மோதிக்கொண்ட சம்பவம் குறித்து எண்ணூர் காமராஜர் துறைமுக கேப்டன் சுபாஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் குழு விசாரித்து வருகின்றனர். இதுதவிர மும்பை கடலோர காவல்படை இயக்குனரக அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர். கடந்த 30-ந் தேதி மும்பையில் இருந்து அதிகாரிகள் குழுவினர் வந்து கப்பல்கள் மோதிக்கொண்ட இடத்தை ஆய்வு செய்துவிட்டு சென்றனர்.தற்போது நிலவும் சூழ்நிலையில் கடலில் 2 கப்பல்கள் மோதிக்கொண்ட சம்பவத்தில் உண்மை நிலை தெளிவாக தெரியவில்லை. ஆய்வு நடந்துகொண்டிருக்கும் போது, ஆய்வறிக்கை வராத சூழ்நிலையில் இது குறித்து மேலும் பேசமுடியாது.

சென்னையை ஒட்டிய கடற்கரையோரங்களில் படிந்திருக்கும் டீசலை அகற்றும் பணியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அரசின் பல்வேறு துறைகளின் பணியாளர்கள், தன்னார்வ நிறுவன ஊழியர்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்த பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். திருவொற்றியூர் பகுதியில் இருந்து 80 டன் அளவில் டீசல் படிமம் அகற்றப்பட்டு உள்ளது. இதுதவிர உறிஞ்சும் எந்திரங்கள் மூலம் கடல்நீருடன் காணப்பட்ட 54 டன் டீசல் படிமம் உறிஞ்சி எடுக்கப்பட்டு உள்ளது. இதில் 20 முதல் 30 சதவீதம் மட்டுமே டீசல் படிமம் இருக்கிறது. இதுதவிர மெரினா போன்ற கடற்கரை மணற்பரப்பில் படிந்திருந்த டீசல் கலந்த மணலையும் அப்புறப்படுத்தி இருக்கிறோம். அந்தவகையில் இதுவரை ஏறக்குறைய 200 டன் டீசல் படிமம் அகற்றப்பட்டு இருக்கிறது. இந்த பணியில் அனைத்து எண்ணெய் நிறுவனங்களும் ஈடுபடுத்தப்பட உள்ளன. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பிரதிநிதிகள் குழு சுற்றுச்சூழலுக்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் இந்த பணியினை கையாள உள்ளனர். குறிப்பாக பாக்டீரியா தாக்கம் அதிகம் இல்லாத வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

90 சதவீத டீசல் படிமம் வடசென்னை கடல் பகுதியிலேயே உள்ளது. மெரினா, எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் வெறும் 10 சதவீதம்தான் உள்ளது. எண்ணூர்-மகாபலிபுரம் இடையேயான 72 கி.மீ. தொலைவில், 12 கி.மீ. பரப்புக்கு டீசல் படிமம் கடல் நீரில் மிதக்கிறது. ராமகிருஷ்ணா நகர் குப்பம் கடற்கரை பகுதியில் இதன் தாக்கத்தை அதிகம் காண முடிகிறது. மெரினா கடற்கரையில் நாளைக்குள் (அதாவது இன்று) டீசல் படிமம் முழுவதுமாக அகற்றப்பட்டு விடும். கடலில் மிதக்கும் டீசல் எண்ணெய் படலம் 3 நாட்களுக்குள் அகற்றப்படும். மொத்தத்தில் இன்னும் 10 நாட்களுக்குள் கடலில் படிந்துள்ள டீசல் முழுமையாக அகற்றப்பட்டு விடும் என்று நம்புகிறோம்.

கடல்நீரின் மேற்பரப்பில் தான் டீசல் படிமம் மிதக்கிறது. எனவே ஆழ்கடலில் உள்ள மீன்களுக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. மீனவர்கள் தாராளமாக கடலில் மீன்பிடிக்க செல்லலாம். மீன்களை சாப்பிடுவதில் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆமை, கடல் பாம்பு உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் அவ்வப்போது கடலின் மேற்பரப்புக்கு வருவதால் இந்த டீசல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து உள்ளன. இதனை தடுக்கவும், கடல்வாழ் உயிரின பாதுகாப்புக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.விபத்துக்கு உள்ளான கப்பல்களில் எந்த கப்பலின் மீது அதிக தவறு இருப்பதாக கண்டறியப்படுகிறதோ, அதன் அடிப்படையில் இழப்பீடு தீர்மானம் செய்யப்படும்.”இவ்வாறு ராஜன் பர்கோத்ரா கூறினார்.

பசுமை தீர்ப்பாயம் நோட்டீசு

இந்த நிலையில் சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்திலும் சேலையூரைச் சேர்ந்த சரவணன் தட்சிணாமூர்த்தி என்பவர் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.அதில், கப்பல்கள் மோதியதில் எவ்வளவு எண்ணெய் கடலுக்குள் கொட்டியுள்ளது, அதனால் எவ்வளவு சேதம் என்பதை அளவிட குழு அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். எண்ணெய் படலத்தை முழுமையாக அகற்ற மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம், கப்பல் போக்குவரத்து துறை, கடலோர பாதுகாப்பு படைக்கு உத்தரவிட வேண்டும். அந்த 2 கப்பல் நிறுவனங்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவும், இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.தீர்ப்பாயத்தின் உறுப்பினர்கள் நீதிபதி பி.ஜோதிமணி, பி.எஸ்.ராவ் ஆகியோர் மத்திய, மாநில அரசுகள், கப்பல் நிறுவனங்கள், காமராஜர் துறைமுகம் ஆகியவை பதிலளிக்கும்படி நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர். விசாரணை 20-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.