ஆமா.. இனிமே தமிழ்நாடு முழுக்க ஆய்வு செய்வேன்! – இப்ப இன்னாங்கறே! – கவர்னர் அறிக்கை!

ஆமா.. இனிமே தமிழ்நாடு முழுக்க ஆய்வு செய்வேன்! – இப்ப இன்னாங்கறே! – கவர்னர் அறிக்கை!

கோவையில் சில நாட்களுக்கு முன்பு கவர்னர் அரசு அதிகாரிகளை அழைத்து வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்து கேள்வி கனைகளை தொடுத்துள்ளார். இதன் மூலம் மாநில சுயாட்சி உரிமைகளை இழந்து வருகிறோம் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்பட பல தலைவர்களும் அதிருப்தி தெரிவித்த நிலையில் கவர்னர் தரப்பில் இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், சட்டத்தின் அடிப்படையிலேயே அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது என்றும் இது தமிழகம் முழுக்க தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த அறிக்கையில், “சட்டத்தின் அடிப்படையிலேயே அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. நேரடி ஆய்வை பலர் பாராட்டியுள்ளனர், இதில் அரசியல் உள்நோக்கம் இல்லை. அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படையிலேயே செயல்பட்டிருக்கிறேன். இதில் அரசியல் உள்நோக்கம் எதுவும் கிடையாது.வளர்ச்சிப் பணியில் மாநில அரசுக்கு ஒத்துழைக்கவே ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.கட்டாயப்படுத்தியோ, வற்புறுத்தியோ எந்த கூட்டத்திற்கும் அதிகாரிகளை அழைக்கவில்லை

மேலும் அந்த அறிக்கையில்  “பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் அதன் அமலாக்கம் குறித்த முதல் கட்ட தகவல்களைப் பெறவே அந்தக்கூட்டம் மேற்கொள்ளப்பட்டது. கவர்னரின் இந்த முயற்சியை தமிழகத்தில் சில தரப்பினர் வரவேற்றுள்ளனர், ஆனால் வேறு பலதரப்பினரும் கவர்ன ரின் இந்த நடவடிக்கை அரசியல் சாசன சட்டப்பிரிவுகளிலோ, மரபிலோ இல்லாதது என்றும் இந்த நடவடிக்கை மூலம் மாநில கவர்னர் தனது அரசியலமைப்புச் சட்ட அதிகார எல்லைகளை மீறுகிறார் என்றும் அரசியல் சாசனச் சட்டப்பிரிவுகளுக்குட்பட்டே கவர்னர் நடவடிக்கை இருக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றனர்.

மேலும் துரதிர்ஷ்டவசமாக சில விமர்சகர்கள் கவர்னருக்கு அரசியல் உள்நோக்கம் உள்ளது என்றும் தமிழக அரசியல் சூழ்நிலைகளை கணக்கிலெடுத்துக் கொண்டு பார்க்கும் போது மத்திய அரசின் விருப்பத்துக்கேற்பவே கவர்னர் இத்தகைய ஆய்வுக்கூட்டங்களை நடத்தினார் என்றும் கருத்து தெரிவித்தனர். இத்தகைய விமர்சனங்கள் தவறானவை, முற்றிலும் தவறானவை, கற்பனை கலந்தவை.

மற்றபடி அரசியல் சட்ட விதிமுறைகளுக்கு பொருத்தமற்ற வகையில் கவர்னர் செயல்படுகிறார் என்று கூறுவது பற்றி, கவர்னராக பதவியேற்ற போதே இந்திய அரசியலமைப்புச் சட்ட விதிமுறைகளுக்கு ஏற்பவே நடப்பதாக தெளிவாகக் கூறிவிட்டார். கவர்னரின் இந்த அறிக்கையை ஊடகங்கள் பரவலாக வெளியிட்டன. கவர்னரும் தனது நடவடிக்கை அனைத்தும் அரசியல் சட்டத்துக்குட்பட்டது என்றும் அரசியல் சாசன சட்டத்தைக் காப்பதும் தன் கடமை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். தான் எந்த முடிவுகளை எடுத்தாலும் அது சிறிய அல்லது பெரிய விஷயமாக இருந்தாலும் அரசியல் பரிசீலனைகள் அதில் இடம்பெறாது. அனைத்து முடிவுகளும் தகுதியின் அடிப்படையிலேயே எடுக்கப்படும், மேலும் வளர்ச்சி நடவடிக்கைகளைப் பொறுத்தவரை மாநிலத்துக்கு தனது இதயபூர்வமான ஆதரவு அளிப்பார்  கவர்னர். நிறைய வளர்ச்சிப்பணிகள் நடைபெறுவதையும் தமிழகத்துக்கு இன்னும் நிதி வழங்கப்படுவதையும் அவர் உறுதி செய்வார்.

தன்னுடைய செயல்பாடுகள் சட்டபூர்வமானதா, சரியானதா என்பதை ஆளுநர் அறிந்திருந்தாலும், கவர்னர் புரோஹித் தன்னுடைய நடவடிக்கையை முறையாக ஆய்வு செய்ய முன்னணி சட்ட நிபுணரை கலந்தாலோசித்து சட்ட அறிவுரை பெறுகிறார். அதாவது தன் நடவடிக்கைகளின் சட்டபூர்வ மற்றும் அரசமைப்புச் சட்டபூர்வத் தன்மையை மதிப்பீடு செய்ய சட்ட நிபுணர் அறிவுரையை அவர் நாடுகிறார். இத்தகைய விரவான கருத்துகள் ஆலோசனைகளின் பின்னனியிலேயே கோவை மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தியது எந்த விதத்திலும் சட்டவிரோதமோ, அரசியல்சட்டத்துக்கு அப்பாற்பட்டதோ இல்லை என்பதை உறுதி செய்கிறார். கூட்டத்துக்காக ஆட்சியதிகாரத் துறைகளை எந்த விதத்திலும் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி வற்புறுத்தவில்லை. அனைத்தும் முறைப்படியே மேற்கொள்ளப்பட்டுள்ளது, இதனால்தான் கோவை மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப்பணிகள், நடைமுறைகள் குறித்து ஆளுநருக்கு ஒரு பார்வை ஏற்பட்டுள்ளது.

அஸாம் மாநில கவர்னராக இருந்த போதும் இவர் இதே போன்ற ஆய்வுக்கூட்டங்களை நடத்தி பாராட்டு பெற்றுள்ளார். இத்தகைய கூட்டங்களை நடத்துகையில் கவர்னர் எந்த சட்டங்களையும் மீறியதில்லை. இந்தக் கூட்டங்கள் மூலம்தான் அவருக்கு மாநில மக்கள் எதிர்கொள்ளும் வளர்ச்சித் தேவைகள், பிரச்சினைகள் பற்றி தெரிந்து கொண்டு மத்திய அரசின் கவனத்துக்கு இதனைக் கொண்டு செல்ல முடியும். இதனைத் தொடர்ந்து மாநில வளர்ச்சிக்குத் தேவையான நிதியை மத்திய அரசிடமிருந்து கேட்டுப் பெற முடியும். எனவே தமிழக மக்கள் நலன்களுக்காக அவர் மேலும் இத்தகைய பணிகளில் ஈடுபடுவார். ஆளுநரின் நடவடிக்கையை தமிழக அமைச்சரவை யில் இருக்கும் அமைச்சர்கள் பலர் பாராட்டியுள்ளனர். எந்த இடத்திலும் அரசியலமைப்புச் சட்டம் ஆளுநரை இத்தகைய நடவடிக்கைகளிலிருந்து தடுக்கவில்லை. மாநில அரசின் அதிகாரத்தைப் பறிப்பதல்ல இந்த நடவடிக்கைகள். நல்லாட்சிக்காக மாநில அரசுக்கு மேலும் ஆதரவளிக்கக் கூடிய செயலே. மக்களின் நன்மைகளுக்காக அவர்கள் வாழ்க்கைத்தரம் உயர்வதற்காக ஆளுநர் மக்களுடன் தொடர்புகொள்ள நம் அரசமைப்புச் சட்டத்தில் தடை ஏதுமில்லை.

எனவே  கவர்னர் தனது பதவிப்பிரமாணத்தில் உறுதி அளித்தது போல் அரசமைப்புச் சட்டத்தை உணர்வுபூர்வமாகவும் எழுத்துபூர்வமாகவும் நல்லுணர்வுடன் புரிந்து செயல்படுவதை ஏற்றுக் கொண்டுள்ளார். ஆளுநர் மாளிகையின் கவுரவத்தைக் காப்பாற்றுவார். வரும் காலங்களில் தமிழகம் புகழின் உச்சியைத் தொட வேண்டும் என்று கடவுளை அவர் பிரார்த்திக்கிறார்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!