December 6, 2022

ஓ மை டாக் – விமர்சனம்!

சினிமாவின் பல வகைகள் இருக்கிறது. அதாவது கலைப்படம், காதல்,காப்பியம், பேய், மசாலா, வரலாறு, மற்றும் நகைச்சுவை, மெலோட்ராமா, திகில், ஆக்சன், கல்ட் என்று ஏகப்பட்ட வகைகள் இருக்கிறது. இவற்றில் அரிதாக இடம் பெறுவது குழந்தைகள் சினிமா. ஆனால் எழுத்தாளர் எஸ் ரா குறிப்பிட்டது போல், ‘குழந்தைகள் சினிமா என்பதை நாம் குழந்தைகள் நடிக்கும் சினிமா எனத் தவறாக புரிந்து கொண்டிருக்கிறோம், குழந்தைகள் சினிமாவில் குழந்தைகள் நடிக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை, அது குழந்தைகளின் மனஉலகை, விருப்பங்களை, கனவுகளைக் காட்சிபடுத்தியிருக்க வேண்டும், குழந்தைகளின் கண்களின் வழியே உலகம் எப்படி தென்படுகிறது என்பதை முதன்மைப் படுத்தியிருக்க வேண்டும்’. இந்த கருத்தை கவனத்தில் கொண்டு உருவானப் படமே ‘ஓ மை டாக்.’ அறிமுக இயக்குனர் சரோவ் சண்முகம் குழந்தைகளுக்கு ஏற்ற திரைப்படத்தை வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருப்பது படம் உருவாக்கம் நெடுகிலும் தெரிகிறது, அதிலும் நெக்ஸ்ட் ஜெனரேசன் மீது நிஜ அக்கறைக் கொண்ட சூர்யா – ஜோதிகா தம்பதியின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் படமென்பதே தனி அடையாளமாகி போய் இருக்கிறது..!

இப்படத்தின் கதை என்னவென்றால் மிடில் கிளாஸ் பேமிலியைச் சேர்ந்த நாயகன் அருண் விஜய், மனைவி மகிமா நம்பியார், தந்தை விஜயகுமார், மகன் அர்னவ் விஜய் ஆகியோருடன் ஊட்டியில் வாழ்ந்து வருகிறார். அருண் விஜய்யின் மகன் அர்னவ் விஜய் எப்போதும் சேட்டை செய்பவராக இருக்கிறார். அதே ஊட்டியில் ஏகப்பட்ட டாக் ஷோ-க்களில் தான் வளர்க்கும் நாய்களை கலக்க விட்டு வெற்றிகளை மட்டும் பெற்று கெத்தாக வரும் வினய் வளர்க்கும் நாய்களில் கண் தெரியாத நாய் ஒன்று பிறக்கிறது. அந்த நாய் குட்டியை கொலை செய்யுமாறு வினய் கூறுகிறார். ஆனால் எதிர்பாராத விதமாக அந்த கண் தெரியாத குட்டி நாய் அர்னவ் விஜய்யிடம் கிடைக்கிறது. அந்த குட்டி நாய்க்கு கண் ஆப்ரேஷன் எல்லாம் செய்து தானே அன்பாக வளர்க்க ஆரம்பிக்கிறார் அர்னவ். ஒரு கட்டத்தில் இண்டர்நேஷனல் டாக் ஷோ நடக்க இருக்கிறது. இந்த ஷோவில் அர்னவ் அடாப்ட் செய்து வளர்த்த நாய் பல சுற்றுகளில் முன்னேறுவதால் அந்த நாயை போட்டியில் கலந்துக் கொள்ளாமல் தடுக்க வினய் முயற்சி செய்கிறார். இறுதியில் அர்னவ்வின் நாய் டாக் ஷோவில் வெற்றி பெற்றதா?, வினய்யின் முயற்சி என்ன ஆனது? என்பதே ஓ மை டாக்

25 ஆண்டுகளுக்கும் மேல் கோலிவுட்டில் பயணம் செய்யும் அருண் விஜய், நடுத்தரக் குடும்ப தந்தை ரோலைப் புரிந்து சொந்த அப்பா விஜயகுமார் மற்றும் சொந்த மகன் அர்னவ்வுடன் கோபம் மற்றும் பாசம் என நிஜத்தில் தன் பங்களிப்பை வழங்கி இருக்கிறார். அவர் கேரக்டர் மூலம் தகுதிக்கு மீறி கல்வி செய்யும் அவலத்தை வெளிக்காட்டி இருக்கும் பாணி கவனிக்க வைக்கிறது. சிறுவன் அர்னவ் விஜய்க்கு முதல் படமிது என்றாலும் குடும்பத்தினரால் அடக்க முடியாத குறும்புகள், பள்ளியில் செய்யும் நமுட்டுச் சேட்டைகள், குட்டி நாய் ஒன்று கிடைத்தவுடன் அதனுடன் ஏற்படும் அந்நியோன்யம், முத்தாய்ப்பாக வில்லன் வினய் மனம் மாற வைக்கும் தூய அன்பு ஆகிய எல்லாவற்ரையும் புரிந்து சிறப்பாகச் செய்திருப்பது போல் தோன்றினாலும் ஏனோ மனசில் ஒட்ட தவறி விட்டான்,. மகிமா நம்பியார் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் விஜயகுமார்.

அரைகுறை தமிழ் பேசுவதே ஸ்டைலிஷ் என்றும் நம்பும் வினய்யின் வில்லன் நடிப்பு கொஞ்சமும் எடுபடவில்லை. அர்னவ்வின் நண்பர்களாக நடித்திருக்கும் சிறுவர்கள் அனைவரும் சிறப்பான பங்களிப்பை கொடுத்து இருக்கிறார்கள். அதிலும் சிம்பா எனும் நாய்க்குட்டி படம் நெடுக வருகிறது. பல இடங்களில் அந்த நாய்குட்டி அளவுக்குக் கூட பலர் நடிப்பை வழங்கவில்லை என்பதையும் உணர வைக்கிறது. .நிவாஸ் கே பிரசன்னாவின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. கோபிநாத்தின் ஒளிப்பதிவு ஊட்டியின் அழகை தன்னால் முடிந்த அளவு காட்டி அசத்தி இருக்கிறார்.

முன்னரே சொன்னது போல் குழந்தை & நாய் சென்டிமெண்டை வைத்து ஒரு ஃபேமிலி ட்ராமாவைக் கொடுத்து கவர முயன்று இருக்கிறார்கள்..

மொத்தத்தில் சுட்டெரிக்கும் இந்த கோடைக் காலத்தை வீட்டில் இருந்தபடியே பொழுது போக்க உதவும் படமே இந்த ஓ மை டாக்!

அமேஸான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் இப்படத்தைக் காணலாம்!

மார்க் 3 / 5