March 27, 2023

ஜெயலலிதாவின் அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாற்று பட டைட்டில் ‘தலைவி”!

செல்வி ஜெயலலிதாவின் அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாற்று படம் ‘தலைவி” விஜய் இயக்கத்தில் உருவாகிறது. மறைந்த முதல்வர். ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகும் அவரது வாழ்க்கை வரலாற்று படத்தின் தலைப்பு ‘தலைவி’ என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் தான் ஜெயலலிதாவின் “அதிகாரப்பூர்வ” வாழ்க்கை வரலாற்று படம் எனக் குறிக்கப்படலாம், ஏனெனில் ஜெயலலிதா அண்ணன் மகன்  தீபக்-கிடம் இருந்து NOCயை பெற்று இந்த படத்தை உருவாக்குவதுக் குறிப்பிடத்தக்கது.

“இந்தத் திரைப்படத்தின் ஒரு அங்கமாக இருப்பதால் மகிழ்ச்சியில் இருக்கும் இயக்குனர் விஜய் கூறும்போது, “தலைவி  என்ற தலைப்புக்கு அவரை விட யார் பொருத்தமாக இருக்க முடியும் “தலைவர்கள் பிறப்பதில்லை, உருவாகிறார்கள்” என்ற ஒரு புகழ்பெற்ற மேற்கோள் உள்ளது. ஜெயலலிதா மேடம் அத்தகைய தத்துவத்திற்கும் அப்பாற்பட்டவர், அவர் பிறப்பிலேயே அத்தகைய தலைமைப் பண்புகளை பெற்றவர். அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, அனுபவம் மற்றும் புத்தி சாலித்தனம் ஆகியவை ஒரு தலைவரை உருவாக்கும் குணங்கள் என்றால், அவர் பிறப்பிலேயே அந்த குணங்களை பெற்றவர். இந்த குணாதிசயங்களால் தான் நாம் அனைவரும் அவரை ‘அம்மா’ என்று வணங்குகிறோம். இத்தகைய உயர்ந்த தலைவரின் தைரியமே என்னை மிகவும் கவர்ந்தது. அதனால் தான் இந்த படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தவுடனேயே எந்த யோசனையும் இல்லாமல் ஒப்புக் கொண்டேன். மிக நேர்மையான ஒரு வரலாற்று படமாக இதை கொடுக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது, அதற்காக கடுமையாக உழைத்து வருகிறேன்.

இந்த ‘தலைவி’ தலைப்பை வெளியிட அவரது பிறந்த நாளை விட மிகச்சரியான தருணம் ஏதும் இல்லை. எங்களுக்கு இந்த படத்தை உருவாக்க தடையில்லா சான்று கொடுத்த ஜெயலலிதா  அண்ணன் மகன் தீபக்-க்கு நன்றி. இந்த படத்துக்கான கதை ஐடியாவை கொண்டு வந்ததோடு, இன்றும் எனக்கு ஆதரவாக இருந்து வருகிறார் விப்ரி மீடியா தயாரிப்பாளர் விஷ்ணுவர்தன் இந்தூரி. அர்த்தமுள்ள மற்றும் நேர்மையான வாழ்க்கை வரலாற்று படங்களை கொடுக்கும் அவரது நோக்கம் எனக்கு நிறைய உத்வேகம் கிடைத்துள்ளது.

இந்த தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை ரசிகர்கள் பொக்கிஷமாக நீண்ட காலத்துக்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார்கள். பாகுபலி எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத் இந்த படத்தில் இணை கதாசிரிய ராக இணைகிறார் என அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். அவரின் பங்களிப்பு இந்த படத்துக்கு கூடுதல் மதிப்பை சேர்க்கும். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். என் படங்களில் மிகச்சிறந்த ஹிட் பாடல்களை கொடுத்த ஜிவி பிரகாஷ் குமார் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். மதன் கார்க்கி பாடல்கள் எழுதுகிறார். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரம் விரைவில் அறிவிக்கப்படும்” என்றார்.

அதிகாரப்பூர்வ அனுமதியுடன், ‘தலைவி’ என்ற மிகப் பொருத்தமான தலைப்புடன் எடுக்கப்படும் இந்த வாழ்க்கை வரலாற்று படம் ஒரு காவியமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.