O2- விமர்சனம்!

O2- விமர்சனம்!

சினிமா என்பது பொழுதுபோக்குதான் என்றாலும் முன்னொரு காலத்தில் இந்த சினிமா-வைக் காட்டிதான் சுதந்திர உணர்வை தூண்டினார்கள்.. அதுபோல் சினிமா மூலம் காதல், அன்பு, கோபம், நகைச்சுவை என்ற சகல சமாச்சரங்களையும் பார்வையாளர் கிடையே கடத்தி விட முடியும்.,. அதை எல்லாம் மனதில் கொண்டு இந்த சினிமா மூலம் நாட்டிற்கு தேவையான சில சேதிகளை சொல்ல முற்படுவது வாடிக்கை.. அப்படி ஒரு சேதி சொல்லும் படமே ஓ 2.

கட்டிய கணவன் சுவாச பிரச்னைக் காரணமாக காலமான நிலையில் தன் ஐந்து வயது சிறுவனுடன் வாழ்க்கை நடத்தி வருகிறார் நயன்தாரா. அதே சமயம் அவரது மகனுக்கும் அதே சுவாச தொடர்பான பிரச்சனை இருந்ததால் சிலிண்டர் ஒன்றின் துணையுடனேயே அவன் உயிர் வாழ வேண்டி இருக்கிறது. அதற்கான ஆப்ரேஷன் ஒன்றிற்காக கோவையில் இருந்து கொச்சிக்கு பஸ்ஸில் பயணப்படுகிறார் அவர். அவருடன் அதே பஸ்ஸில் பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சுயநல பிரச்சனை இருக்கிறது. அந்த பஸ் வழியில் ஒரு நிலச்சரிவில் பஸ் மாட்டிக்கொண்டு புதைந்து போக உள்ளே இருப்பவர்கள் சுவாசிக்கப் போராடிய தான் இதன் கதை.

இதில் நயன்தாராவின் நடிப்பு பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. வாழ்க்கையின் சகல முனைகளிலும் அவருக்கு பிரச்சினை தொற்றிக்கொள்ளும் வேடத்தில் அதை எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதை எல்ஸ்போஸ் செய்வதில் மிளிர்கிறார். மகனுக்கு வைத்திருக்கும் ஆக்சிஜன் சிலிண்டரையும் பிறர் சுயநலத்துக்காக இழக்க நேர்கையில் ஒரு தாயின் போராட்டம் எப்படி இருக்கும் என்பதை உக்கிரத்துடன் காட்டியிருக்கிறார். ஆனாலும் அவரது நடிப்புக்கு இன்னும் தீனி சேர்த்திருக்கலாம் என்றும் எண்ண வைத்திருக்கிறார்,

நயன்தாராவின் மகனாக யு டியூப் புகழ் ரித்விக். அந்த சிறுவன் மீது அனுதாபம் ஏற்படும் ஒரு கதாபாத்திரம். முதல் படம் என்று சொல்ல முடியாதபடி நடித்து தனிக் கவனம் பெறுகிறார் ரித்விக். அதிலும் நாயகி நயன்தாராவை விட ஒரு படி மேலே போய் நம்மை கவர்ந்து இருக்கிறார் என்பதுதான் ஹைலைட்.

படத்தின் பெரிய பலம் கேமராமேனின் உழைப்பு தான். ஒரு பஸுக்குள் சுருங்கி நிற்கும் கதையை கூடுமான வரை வெவ்வேறு லைட் செட்டிங், வெவ்வேறு கோணங்கள் என காட்டியிருக்கிறார். பின்னணி இசையும் ஒரு நல்ல திரில்லருக்கான மூட்-ஐ கொடுக்கிறது
எடிட்டிங் சிறப்பு

படம் தொடங்கிய 20 நிமிடங்களில் துவங்கும் த்ரில்லிங்கை க்ளைமாக்ஸ் வரை கொஞ்சமும் குறையாமல் கொண்டு சென்றுள்ளார் டைரக்டர். அதிலும் தாய் பாசம் என்பதை தாண்டி, ஆரம்ப பேராவில் சொன்னது ஆக்சிஜன் தேவையின் அவசியத்தையும், இயற்கையை காக்க வேண்டியதன் அவசியத்தை சொல்லி இருக்கிறார். நாம் இயற்கையை காப்பாற்றினால் அதுவும் நம்மை காக்கும். நாம் அழித்தால், அதுவும் நம்மை அழிக்கும் என்பதை இரண்டு மணி நேர படமாக சொல்லி இருக்கிறார்

வழக்கம் போல் சில லாஜிக் மீறல் இருந்தாலும் எடுத்துக் கொண்ட சப்ஜெட்டுக்காவே இந்த ஓ2 படமும் பேசப்படுமென்றே ஆவல்

மொத்தத்தில் இந்த ஓ 2- ஓ கே ரகம்

மார்க் 2.75/5

error: Content is protected !!