ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பரப்புரை சுவாரஸ்யங்கள்!- வீடியோ

ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பரப்புரை சுவாரஸ்யங்கள்!- வீடியோ

நடைபெறவுள்ள தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், அ.தி.மு.க.சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கட்சியின் ஒருங்கிணைப்பாளர், தமிழ் நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கடந்த மார்ச் 17 அன்று தனது தேர்தல் பரப்புரையை துவங்கியவர் நேற்று மார்ச் 21 அன்று தனது தொகுதியான போடிநாயக்கனுர் சட்டமன்ற தொகுதியில் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

பிரச்சாரத்தில் திமுகவை கடுமையாக விமர்சித்த ஓ. பன்னீர்செல்வம், கடந்த திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட வாக்குகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை என்றும் தற்போதைய திமுக தேர்தல் அறிக்கையினை கள்ள நோட்டு என தாக்கினார்.

மேலும், திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு படுமோசமான நிலையில் இருந்த காரணத்தால் தான் வெறும் ரூ. 45,000 கோடி ரூபாய் மதிப்பிலான தொழிற்சாலைகள் மட்டுமே துவங்கப்பட்டதாகவும் தற்போது அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கும் காரணத்தால் ரூ. 6,85,000 கோடி மதிப்பிலான தொழிற்சாலைகள் நிறுவப்பட்டு புதிதாக 19 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாக கூறினார்.

இந்த பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது இளைஞர்கள் சிலர் தங்களுக்கு விளையாட மைதானம் வேண்டும் என வைத்த கோரிக்கைக்கு புன்சிரிப்போடு தனது சொந்த பணத்தில் அவர்களுக்கு மைதானம் ஒன்று உருவாக்கி தரப்படும் என உறுதியளித்தார்.அதை கேட்டதும் ஆரவாரம் எழுப்பிய இளைஞர்களுக்கு, சமயம் பார்த்து காரியத்தை முடித்துக் கொள்கிறீர்களே என கிண்டலாகவும் பேசி கூட்டத்தில் சிரிப்பலையை உண்டாக்கினார்.

பின்னர், முக்கியமான அறிவிப்பாக, சீலையம்பட்டி பூக்களுக்கு சந்தையில் நல்ல மதிப்பு இருக்கும் காரணத்தால், பூக்களில் இருந்து வாசனை திரவியம் தயார் செய்யும் தொழிற்சாலை ஒன்று உருவாக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். மேலும் மக்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றித்தரப்படும் என்று உறுதியளித்து சென்றார்.

பட்டியலின மக்களுக்காக அதிமுக செய்த சாதனைகளை பட்டியலிட்ட திரு. ஓ. பன்னீர்செல்வம், அவர்களின் நலனுக்காக தேர்தல் அறிக்கையில் அதிமுக வரையறுத்திருக்கும் புதிய திட்டங்கள் குறித்து விவரித்தார். கோட்டூர் மக்களின் நீண்ட நாள் கனவான ஜல்லிக்கட்டு விழா நிச்சயம் அடுத்த ஆண்டு நடைபெற வழிசெய்யப்படும் என கூறிய அவர், அவரே வந்து ஜல்லிக்கட்டு விழாவை துவக்கி வைப்பதாக கூறி அமர்க்களப்படுத்தினார்.

துவக்கி வைத்தது போலவே களத்தில் இறங்கி காளையை பிடிக்க சொன்னால் தன்னால் முடியாது என்று நகைச்சுவை பொங்க பேசிய துணை முதலமைச்சர், சிறு வயதில் தானும் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டதை நினைவு கூர்ந்தார்.

மேலும், ஏழை எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு திருமண நிதியுதவியை ரூ. 25,000லிருந்து ரூ. 35,000 ஆக உயர்த்தப்படும் எனவும் வாக்குறுதி அளித்தார்.

error: Content is protected !!