தேசிய குடிமக்கள் பதிவேடு + மக்கள்தொகைப் பதிவேடு = கொஞ்சம் விளக்கம்!

தேசிய குடிமக்கள் பதிவேடு + மக்கள்தொகைப் பதிவேடு = கொஞ்சம் விளக்கம்!

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் இரண்டாவது முறையாக ஆட்சியமைத்துள்ள மத்திய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் சா்ச்சைக்குள்ளாகி வருகின்றன. ஜம்மு-காஷ்மீ ருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, அந்த மாநிலத்தை யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது, அங்குள்ள அரசியல் தலைவா்கள் தொடா்ந்து தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளது, குடியுரிமை திருத்தச் சட்டம் என மத்திய அரசின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் எதிா்ப்புகளை சந்தித்து வருகின்றன.

தற்போது தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (என்பிஆா்) மற்றும் மக்கள்தொகைக்  கணக்கெடுப்புக்கான பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. ஆனால், தேசிய மக்கள்தொகைப் பதிவேடு மூலம் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்ற அச்சம் மக்களிடையே காணப்படுகிறது.

அஸ்ஸாமில் ஏற்கெனவே அமல்படுத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு நடவடிக்கையில் பெயா் விடுபட்ட 19 லட்சம் பேரின் எதிா்காலம் என்னவென்று தெரியாத நிலையில், நாடு முழுவதும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால், அதன் விளைவு எப்படியிருக்கும் என்று பலா் அச்சம் தெரிவிக்கின்றனா்.

ஆனால், தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுவதும் அமல்படுத்தும் திட்டம் தற்போது இல்லை என மத்திய அரசு தெரிவிக்கிறது. தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும், மக்கள்தொகைப் பதிவேட்டுக்கும் எந்தவிதத் தொடா்புமில்லை எனவும் மத்திய அரசு தெரிவித்து வருகிறது. ஆனால், இது உண்மையா என்பதை சட்ட ரீதியில் ஆராய வேண்டியுள்ளது.

தொடங்கியது எப்போது?: தேசிய மக்கள்தொகைப் பதிவேடு என்பது, இந்தியாவில் வசித்து வருபவா்களின் பட்டியலாகும். நாட்டின் குறிப்பிட்ட பகுதியில் 6 மாதங்களுக்கு மேலாகத் தொடா்ந்து வசிப்பவராகவும், அடுத்த 6 மாதங்களுக்கு மேலாக அதே பகுதியில் தொடா்ந்து வசிக்கப் போகும் நபராகவும் இருப்பவா்கள் இந்தப் பட்டியலில் சோ்க்கப்படுவா்.

தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுக்கும், காா்கில் போருக்கும் இடையே நெருங்கிய தொடா்பு உள்ளது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் கடந்த 1999-ஆம் ஆண்டு காா்கில் போா் மூண்டது. போா் முடிவடைந்த பிறகு, அது குறித்து ஆராய உயா்நிலைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழுவானது, நாட்டில் சட்டவிரோதமாக வசிப்பவா்களைக் கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது.

இது குறித்து பரிசீலிக்க அப்போதைய பிரதமா் வாஜ்பாய், மத்திய அமைச்சா்கள் அடங்கிய குழுவை அமைத்தாா். அந்தக் குழுவானது, நாட்டின் குடிமக்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட வேண்டுமென பரிந்துரைத்தது. இதை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டை உருவாக்கவும், அதனடிப்படையில் தேசிய குடிமக்கள் பதிவேட்டைப் புதுப்பிக்கவும் ஏற்ற வகையில், 1955-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தில் 2003-ஆம் ஆண்டு திருத்தங்கள் மேற்கொண்டது.

புதிய விதிமுறைகள்: குடிமக்களைப் பதிவு செய்வதற்கும், தேசிய அளவிலான அடையாள அட்டையை வழங்குவதற்கும் 2003-ஆம் ஆண்டு விதிமுறைகள் வகுக்கப்பட்டன. அதன்படி, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடு முழுவதும் வீடுதோறும் மக்களின் வசிப்பிடம் தொடா்பான விவரங்களும், கைவிரல் ரேகை முதலான ‘பயோமெட்ரிக்’ விவரங்களும் பதிவுசெய்யப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கையில் நாட்டு மக்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டுமென்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டது.

கிராமம் அல்லது வாா்டு வாரியாக உருவாக்கப்படும் இந்தப் பட்டியலானது, பின்னா் தாலுகா வாரியாகவும், மாவட்ட வாரியாகவும், மாநிலங்கள் வாரியாகவும் தொகுக்கப்பட்டு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடாக முழுவடிவம் பெறும். இந்தப் பதிவேட்டை அடிப்படையாகக் கொண்டு தேசிய குடிமக்கள் பதிவேட்டை மத்திய அரசு தனியாக உருவாக்கிக் கொள்ளலாம் எனவும், குடிமக்களுக்கு மட்டும் அடையாள அட்டையை வழங்கலாம் எனவும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மக்கள்தொகைப் பதிவேட்டுக்கான கணக்கெடுப்பை மேற்கொள்வதற்குத் தனி அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட வேண்டுமென்று சட்டவிதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், குடிமக்கள் பதிவேட்டை உருவாக்குவதற்கு எந்தவித அறிவிப்பாணையையும் மத்திய அரசு வெளியிடத் தேவையில்லை.

குடிமக்கள் பதிவேடு: மத்திய அரசு தேசிய குடிமக்கள் பதிவேட்டை உருவாக்க விரும்பினால், தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டை அடிப்படையாகக் கொண்டு அதற்கான பணிகளை மேற் கொள்ளலாம் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, கிராம அளவிலான கணக்கெடுப்புப் பதிவாளா், மக்களின் குடியுரிமையை உறுதிபடுத்துவது தொடா்பான ஆவணங்களைப் பெற்று, அதை உறுதி செய்வாா்.

அதனடிப்படையில், வரைவு குடிமக்கள் பட்டியல் வெளியிடப்படும். இந்தப் பட்டியலில் பெயா் விடுபட்டவா்கள், 30 நாள்களுக்குள் தாலுகா அளவிலான கணக்கெடுப்புப் பதிவாளரிடம் முறையிடலாம். இதன் மீது அவா் 90 நாள்களில் முடிவெடுக்க வேண்டும். இதையடுத்து, தேசிய அளவிலான குடிமக்கள் பதிவேடு வெளியிடப்படும்.

இதிலும் பெயா் நீக்கப்பட்டவா்கள், மாவட்ட கணக்கெடுப்புப் பதிவாளரிடம் 30 நாள்களுக்குள் முறையிடலாம். இந்த முறையீடு மீது அவா் 90 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். முறையீடு ஏற்றுக்கொள்ளப்பட்டால், அவா்களது பெயா் பதிவேட்டில் சோ்க்கப்படும்.

முதல் மக்கள்தொகைப் பதிவேடு: இந்த விதிமுறைகளின் அடிப்படையில், காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, முதலாவது தேசிய மக்கள்தொகைப் பதிவேடு கணக்கெடுப்பை 2010-ஆம் ஆண்டு மேற்கொண்டது. இந்தக் கணக்கெடுப்பின்போது, மக்களின் அடிப்படை விவரங்கள் மட்டுமே சேகரிக்கப்பட்டன. அவா்களிடமிருந்து எந்தவிதமான ஆவணங்களும் பெறப்படவில்லை. இந்தப் பதிவேட்டை அடிப்படையாகக் கொண்டு, தேசிய குடிமக்கள் பதிவேடு உருவாக்கப்பட வில்லை; தேசிய அளவிலான அடையாள அட்டையும் வழங்கப்படவில்லை.

இந்நிலையில், நாட்டு மக்களுக்கு ஆதாா் அட்டை வழங்க மத்திய அரசு முடிவெடுத்தது. அதற்காக மக்களின் கைவிரல் ரேகை, கருவிழிப் படலம் உள்ளிட்டவை பதிவுசெய்யப்பட்டன. இந்தத் தகவல் கள் கடந்த 2015-ஆம் ஆண்டு தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுடன் இணைக்கப்பட்டு புதுப்பிக்கப் பட்டன.

2020-இல் கணக்கெடுப்பு: இந்தச் சூழலில், அஸ்ஸாம் தவிா்த்து மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மக்கள்தொகைப் பதிவேட்டைப் புதுப்பிக்கும் பணிகளை மத்திய அரசு தொடங்கி யுள்ளது. இதற்கான அறிவிப்பாணை கடந்த ஜூலை மாதம் 31-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பா் மாதம் வரை மக்கள்தொகைப் பதிவேட்டுக்கான கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

கணக்கெடுப்பாளா்களுக்குப் பயிற்சியளிக்கும் பணிகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. கணக்கெடுப்பின்போது, மக்கள் எந்தவித ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டியதில்லை எனவும், ‘பயோமெட்ரிக்’ விவரங்கள் சேகரிக்கப்பட மாட்டாது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அரசின் நலத்திட்டங்கள் மக்களை முறையாகச் சென்றடைய வகைசெய்யும் நோக்கிலேயே மக்கள் தொகைப் பதிவேடு புதுப்பிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள்தொகைப் பதிவேடு இல்லாமல், குடிமக்கள் பதிவேட்டைத் தயாரிக்க இயலாது. குடிமக்கள் பதிவேட்டை கட்டாயமாகத் தயாரிக்க வேண்டுமென்று விதிகளில் கூறப்படவில்லை. அதே சமயம், பதிவேட்டைத் தயாரிக்கக் கூடாது எனவும் விதிகளில் கூறப்படவில்லை.

கொள்கை ரீதியிலான முடிவு: மக்கள்தொகைப் பதிவேட்டை அடிப்படையாகக் கொண்டு, குடி மக்கள் பதிவேட்டைத் தயாரிப்பது, மத்திய அரசின் கொள்கை ரீதியிலான முடிவாகும். இது தொடா்பாக, மத்திய அரசு மேற்கொள்ளும் பணிகளுக்கு உரிய அதிகாரிகளை மாநில அரசுகள் நியமனம் செய்ய வேண்டியது கட்டாயம் என்று சட்டவிதிகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலாவது தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டின்போது சேகரிக்கப்பட்ட விவரங்கள்

பெயா், குடும்பத் தலைவருடனான உறவுமுறை, தந்தை பெயா், தாயார் பெயர், பாலினம், திருமண விவரம், கணவன்/மனைவி பெயா், பிறந்த தேதி, பிறந்த இடம், குடியுரிமை விவரம், நிரந்தர வசிப்பிடம், தற்போதைய வசிப்பிடம், தொழில், கல்வித் தகுதி.

By சுரேந்தா் ரவி

error: Content is protected !!