August 16, 2022

டி.வி.யில் விரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய செயலி !- டிராய் அறிமுகம்!

மக்களின் பொழுதுபோக்கை முழுக்க வணிகமாக்கி காசு பார்க்கும் தொழிலான டிடிஎச் மற்றும் கேபிள் டிவியில் இனி வாடிக்கையாளர்கள் விரும்பிய சேனல்களை தேர்வு செய்ய உதவும் புதிய செயலியை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அறிமுகப்படுத்தியுள்ளது.

BARC என்னும் டிவி காண்போர் பற்றிய தகவல்களை ஆய்வு செய்யும் அமைப்பின் தகவல்படி 50% மக்கள் 30 சேனல்களுக்கு மேல் பார்ப்பதில்லை. ஆனால், 300-க்கும் மேலான சேனல்களுக்கான கட்டணத்தை வசூலித்து வருகிறார்களாம். இதையடுத்து தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் பிறப்பித்திருக்கும் ஆணைப்படி கேபிள் மற்றும் டிடிஹெச் (DTH) சேவை களின் விலைகளில் வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் மாற்றங்கள் வரவுள்ளன. இந்த மாற்றத்தின் மூலம் மொத்தமாக ஒரு விலை கொடுப்பதற்கு பதிலாக, வேண்டிய டிவி சேனல்களுக்கு மட்டும் பணம் கட்டினால் போதும் என்கிறது டிராய்.

இதற்காக டிராய் உருவாக்கியிருக்கும் பிரத்யேக வலைத்தளத்தில் 5 வழிமுறைகளை கடந்து அவரவர் விரும்பும் சேனல்களை தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் இந்த சேவையை கொண்டு விரும்பிய சேனல்களுக்கான கட்டணங்களையும் அறிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக கேபிள் டிவி ஒளிபரப்பு தொடர்பாக டிராய் நிறுவனம் புதிய கொள்கை விதிமுறையை அறிவித்தது. இதன்படி, கேபிள் டிவி வழங்கும் அனைத்து சேனல்களை பார்ப்பதற்கு பதிலாக, குறிப்பிட்ட சேனலை மட்டும் பணம் கொடுத்து பொதுமக்கள் பார்த்தால் போதும் என கூறப்பட்டு இருந்தது. இந்த புதிய விதிமுறை தங்களை பாதிப்பதாகவும், இதன்மூலம் பெரிய நிறுவனங்கள் மட்டுமே பலனடைய முடியும் என்றும் கேபிள்டிவி ஆப்பரேட்டர்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய அரசின் புதிய கேபிள் கட்டண முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இன்று கேபிள் டி.வி. ஒளிபரப்பு நிறுத்தப்படும் என்று கேபிள் டி.வி. பொதுநல சங்கம் அறிவித்தது. மத்திய அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் முழு ஒளிபரப்பு நிறுத்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் மத்திய அரசு இந்த கோரிக்கைக்கு செவிசாய்க்காவிட்டால் பொதுமக்கள் மற்றும் தொழில் சங்கங்களை இணைத்து பிப் 10-ம் தேதி சென்னையில் கவர்னர் மாளிகை நோக்கி பேரணி நடத்தி முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கேபிள் டி.வி. பொதுநல சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆக, தற்போது நாம் செய்ய வேண்டியது நம் கேபிள் மற்றும் டிடிஹெச்களில் பெறும் 300 சேனல்களில் பாதிக்கும் மேலான சேனல்களை நாம் எதையெல்லாம் பார்த்திருக்கிறோம். எதையெல்லாம் ஒரு முறை கூட கண்டத்தில்லை என்பதை கண்டறிய வேண்டும். இதன் பின்னர், வேண்டிய சேனல்களை மட்டும் சரியாகத் தேர்ந்தெடுத்தால் முன்பிருந்த கேபிள் தொகையிலோ சற்று கூடுதல் விலையிலோ உங்கள் மாத சந்தாவை முடித்துக்கொள்ள வாய்ப்புகளுண்டு. எது வேண்டும் எது வேண்டாம் என்பதில் தெளிவாக இருப்பது இதில் மிகமுக்கியம். விளையாட்டுச் சேனல்களைத் தேவைப்படும் மாதம் மட்டும் அவற்றை உங்கள் திட்டத்தில் சேர்த்துக்கொள்ள முடியும். இருப்பினும் விலைகளை மேலும் குறைக்கலாம் என்பதுதான் லோக்கல் கேபிள் ஆபரேட் டர்களின் வேண்டுகோள். ஆனால், எப்படியும் விலை அதிகமாக இருந்தால் பார்வை யாளர்கள் குறைந்துவிடுவர். சேனல்களுக்கு விளம்பரங்களில் வரும் வருமானம் குறைந்துவிடும். எனவே எப்படியும் சேனல்களின் விலை நாள் போக்கில் குறைந்து சரியான விலைக்கு வந்து விடும் என்கிறது ஒரு தரப்பு. அதனால் இது வாடிக்கையாளர்களுக்கு நல்லதுதான் என்கின்றனர். இதனால் சாதாரண கேபிள் விலை கூடும் என்றாலும் அதே நேரத்தில் தனியார் டிடிஹெச் சேவைகளின் விலை குறையும். புதிய விலைத்திட்டத்தின்படி ஒவ்வொரு சேனலின் MRP விலையையும், இலவச சேனல்களின் பட்டியலையும் டிராய் தளத்தில் காணலாம்.

MRP விலைப்பட்டியல்:

https://main.trai.gov.in/sites/default/files/PayChannels18122018_0.pdf

இலவச சேனல்கள் பட்டியல்:

https://main.trai.gov.in/sites/default/files/List_FTA_channel.pdf

மேலும் காம்போ (Bouquet plans) பேக்குகளையும் ஸ்டார், சன் போன்ற அனைத்து பிரபல டிவி நிறுவனங்கள் தருகின்றன. இதன் உத்தேச பட்டியலையும் டிராய் தளத்தில் காணலாம்.