தெருநாய்களை கொன்றால் தங்க நாணயம் பரிசு! – கேரளா ஸ்டூடன்ஸ் அறிவிப்பு

கேரளாவில் சமீபகாலமாக நாய்த் தொல்லை மிகவும் அதிகரித்துள்ளது. கடந்த 4 மாதங்களில் மட்டுமே 4 பேர் நாய்க்கடிக்குப் பலியாகி உள்ளனர். அதோடு 175 குழந்தைகள் உள்பட 701 பேர் நாய்க்கடிக்கு ஆளாகி சிகிச்சை பெற்றுள்ளனர்.

gold coin nov 1

வர்க்கலா பகுதியில் கடந்த 26-ம் தேதி ராகவன் என்ற 90 வயது முதியவர் நாய்களால் கடித்துக் குதறப்பட்டு இறந்தார். இந்த ஆண்டு மட்டும் கேரளா முழுவதும் 53 ஆயிரம் பேர் நாய்க்கடிக்குச் சிகிச்சை பெற்றுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் தெரு நாய்கள் தொல்லையை போக்கும் விதத்தில், தங்க நாணய பரிசுத் திட்டத்தை செயின்ட் தாமஸ் கல்லூரியின் முன்னாள் மாணவர் அமைப்பு அறிவித்துள்ளது. அதன்படி, இந்த அமைப்பின் உறுப்பினர்களாக இருக்கும் 1200 பேரிடமிருந்து பணம் வசூலித்து தங்க நாணயங்கள் வாங்கப்படும்.

எந்த பஞ்சாயத்தில் எந்த நகராட்சியில் அதிக எண் ணிக்கையில் தெரு நாய்கள் கொல்லப்பட்டுள்ளதோ அந்த பஞ்சாயத்து தலைவர், நகராட்சி தலைவருக்குத் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும். எவ்வளவு தொகை வசூலாகிறதோ, அத்தனைக்கும் தங்க நாணயங்கள் வாங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தங்க நாணயம் பரிசு பெறத் தகுதியான பஞ்சாயத்துகள், நகராட்சிகள், ஒவ்வொரு நாளும் கொல்லப்பட்ட நாய்களின் எண்ணிக்கை விவரத்தோடு விண்ணப்பிக்க வேண்டும் என முன்னாள் மாணவர் அமைப்பின் செயலாளர் ஜேம்ஸ் பம்பயக்கால் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் கடந்த 2013-ம் ஆண்டு 88,172 பேரும் 2014-ல் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 119 பேரும் நாய்க்கடிக்கு ஆளாகி உள்ளனர். 2015ல் இந்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 156 ஆக உள்ளது.