நோட் இட்: ஆசியாவின் அமைதியை குலைக்கும் நிகழ்வுகள் தெரிகிறது!

நோட் இட்: ஆசியாவின் அமைதியை குலைக்கும் நிகழ்வுகள் தெரிகிறது!

ந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் நிறைவு பெற்றுவிட்டது. இந்த 2022–-ல் நாம் நடத்தி முடித்திட நிர்ணயித்த இலக்குகளை மீண்டும் கூர்ந்து கவனித்து நடைமுறை சிக்கல்களை உணர்ந்து செயல்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆண்டின் துவக்கத்தில் கொரோனா பரவல் அச்சத்தை ஏற்படுத்தினாலும், தடுப்பூசிகளின் பயனை உணர்ந்து அதை எல்லோரும் பெற்றுக்கொள்ள ஆரம்பித்ததால் சில நாட்களில் கொரோனா பெருந்தொற்றை வீழ்த்தி விடலாம் என்ற நம்பிக்கையுடன் புது வருடம் பிறந்தது.

அது உலகப் பொருளாதாரத்தை மீண்டு எழுந்து நிற்க வைக்கும் என்ற நம்பிக்கையும் தந்ததால் பங்கு சந்தையில் நம்பிக்கை தெரிந்தது. விலைவாசியும் குறிப்பாக கச்சா எண்ணெய் விலைகளும் குறைந்தே இருந்தது. ஆனால் பிப்ரவரி இறுதியில் ரஷ்யா – உக்ரைன், நாட்டோ நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியைக் கண்டதால் ரஷ்யா உக்ரைனில் ராணுவ நடவடிக்கைகளை துவக்கியது.

அதைத்தொடர்ந்து பொருளாதார முற்றுகை, ரஷ்யாவின் பொருளாதார சிக்கல்கள் எல்லாம் ஆரம்பத்தில் அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் மகிழ்ச்சியை தந்திருந்தாலும் நிலைமை உலக வர்த்தகத்தை புரட்டிப்போட பாதகமான பக்க விளைவுகளை சந்திக்க ஆரம்பித்தன. கச்சா எண்ணையை இனி ரஷ்யாவிடம் வாங்க டாலர் தர முடியாது, மாறாக ரஷ்ய பணமான ரூபிளில் தர வேண்டிய நிலை உருவானது. இந்தியா உட்பட பல ரஷ்யாவின் நட்பு நாடுகளுக்கு கிடைத்த சில வாய்ப்புகள் ஐரோப்பிய நாடுகளுக்கு பொறாமை தரும்!

அமெரிக்காவில் உணவு பணவீக்கம் அதிகரிக்க விலைவாசி உயர்வும் ஏற்பட்டது. நிலைமையை சமாளிக்க மத்திய ரிசர்வ் வங்கி உடனே கடன் வட்டி விகிதத்தை உயர்த்தியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து இந்தியா உட்பட பல வளரும் பொருளாதாரங்கள் கடன் வட்டிகளை உயர்த்த ஆரம்பித்தது. ஜூன் மாதத்தில் உலக பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை காண துவங்கியது. அதன் பயனாக பல நிறுவனங்களின் பங்கு மதிப்பு பல பில்லியன் டாலர்களை இழந்தது. முதலீட்டாளர்கள் தங்களது பங்கு முதலீடுகளை விட்டு விலக ஆரம்பித்தனர்.

இந்திய பங்குச்சந்தையும் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்க துவங்கியது. முதல் பத்து நாட்களில் மட்டும் ரூ.15,000 கோடி அந்நிய செலவாணி முதலீடுகள் வெளியேறின. இந்நிலையில் இவ்வாண்டு தொடக்க முதலாக வெளியேறிய அந்நிய நேரடி முதலீடு ரூ.1.81 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளது. சர்வதேச அளவில் ஏற்பட்டிருக்கும் பணவீக்கம், பொருளாதார மந்தநிலை, விநியோக நெருக்கடி ஆகிய காரணிகளால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குகளை விற்றுவருவதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குகளை விற்று வெளியேறுவது தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகிறது.அடுத்த ஆறு மாதங்கள் எப்படி இருக்கும்? மேலும் வீழ்ச்சி அடைந்து விடுமா? நம்பிக்கை தரும் ஒரு செய்தி என்னவென்றால், நாடு முழுவதும் மின்சார உற்பத்தி அதிகரித்து இருப்பதால் மின்சார தட்டுப்பாடே கிடையாது! மின்சாரம் இருந்தால் வரும் நாட்களில் உற்பத்தி துறை தங்கு தடையின்றி செயல்பட முடியும். அது பொருளாதார வளர்ச்சியை முன்னோக்கி அழைத்துச் செல்ல உதவும்.

நாட்டோ நாடுகளின் உச்சி மாநாடு நடந்து கொண்டிருக்கிறது. ரஷ்யாவின் வலிமை குறைந்த பாடாக இல்லை என்பதை பார்க்கும்போது அவர்களுக்கு மேலும் போர் தொடர்வது அச்சத்தை தரலாம். நாட்டோவில் உள்ள அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சும் அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடுகளாகும்.

இதர நாட்டோ அங்கத்தினர் வேண்டினால் அணு ஆயுதங்களை ரஷ்யாவின் எல்லைப்புறத்தில் வைத்து தங்களை பாதுகாக்க கோரலாம். அப்படி ஒரு முயற்சி துவங்கினால் அது ரஷ்யாவை மேலும் உசுப்பிவிட்டு யுத்தத் தாக்குதலை அதிகரிக்க வைக்கும்.
நாட்டோ மாநாட்டில் போர் பதற்றத்தை தணிப்பது பற்றிய எண்ணம் வெளியிடப்படவே இல்லை. ஆனால் உக்ரைனில் உள்ளது போல் எங்களுக்கு உதவ வேண்டும் என்று பின்லாந்தும் கோர ஆரம்பித்துள்ளது.

ராணுவ செலவுகளை அதிகரிக்க முடிவு எடுத்துள்ளது. ஆனால் இன்றைய பொருளாதார சூழ்நிலையில் அதை செய்ய முடியாது என்று ஜெர்மனி உட்பட சில நாடுகள் கையை விரித்து விட்டது. அமெரிக்காவின் அழைப்பை ஏற்று நாட்டோ மாநாட்டில் தென்கொரியாவும் பங்கேற்று இருக்கிறது. அது ஜப்பானுக்கும், ஆஸ்திரேலியாவிற்கும் பிடிக்காத நிகழ்வாகும். வடகொரியாவும் பொறுத்துக் கொள்ளாது!

மெல்ல ஆசியாவின் அமைதியை குலைக்கும் நிகழ்வுகள் தெரிகிறது. இந்த ஜூன் மாதத்தில் பிரிக்ஸ் அமைப்பின் மாநாடும் சீனாவில் நடைபெற்றது. அதில் சீனா இந்தியா மீது வெளியிட்டுவரும் சீற்றத்தை குறைத்து விட்டது என்பதைக் கண்டோம். ஆக அடுத்த சில வாரங்களில் நல்ல மாற்றம் ஏற்பட்டு போர் பதட்டம் குறைந்து விடுமா? பொருளாதாரம் சீர்பெற்று விலைவாசிகள் கட்டுக்குள் வந்துவிடுமா? என்ற அச்சக் கேள்விகளுக்கு நல்ல விடையை பெற தயாராகுவோம். எது எப்படியோ, 2022 நிறைவுக்கு வர, 6 மாதங்களே நம் கையில் இருப்பதை உணர்ந்து புது வேகத்துடன் செயல்பட வல்லரசுகள் செயல்படவேண்டும் என்பதை மறந்து விடக்கூடாது.

ஆர். முத்துக்குமார்

error: Content is protected !!