October 16, 2021

அம்புட்டு பேருக்கும் வேலை வாய்ப்புக் கிடைக்க சான்ஸே இல்லை! – அமித் ஷா தகவல்

தற்போதைய நிலையில் 125 கோடி மக்களைக் கொண்ட இந்திய நாட்டில் அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்குவது சாத்தியம் இல்லாதது என பாரதீய ஜனதா கட்சித் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அமைந்து மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து பாஜக அரசின் மூன்றாண்டு சாதனைகள் குறித்து அக்கட்சி தலைவர்கள் பேசி வருகின்றனர். டெல்லியில் இன்று பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது“நாடு இதுவரை பார்த்ததிலேயே மிகவும் வலுவான வெளிப்படைத்தன்மை கொண்ட அரசாக நரேந்திர மோடி அரசு உள்ளது. இந்த அரசு மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட எழவில்லை.கடந்த மூன்று ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் மோடி அரசு சாதிய மற்றும் , குடும்ப ஆட்சி முறைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இந்தியா மிகப்பெரும் நாடு இந்த நாட்டின் குடிமக்களான 125 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு அளிப்பது சாத்தியம் இல்லாத ஒன்று. அதானால் வேலைவாய்ப்புக்கு புதிய வழிகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கிறோம். அதற்காக சுய வேலைவாய்ப்புத் திட்டங்களை உருவாக்கி வருகிறோம். சுய வேலைவாய்ப்புகளை அரசு உருவாக்க பாடுபடுகிறது. சுய தொழில் செய்வோரை நாங்கள் ஊக்குவித்து வருகிறோம். 8 கோடி பேருக்கு சுயவேலைவாய்ப்பை அரசு உருவாக்கி கொடுத்துள்ளது” என்றார்.

கடந்த சில தினங்களுக்கு முன் வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி மோடி அரசு இளைஞர்களை வஞ்சித்து விட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியிருந்த நிலையில், அமித்ஷா மேற்கண்டவாறு பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.