October 16, 2021

வந்துட்டுதய்யா.. வடகிழக்கு பருவ மழை வந்திட்டுச்சு!

கிட்டத்தட்ட தீபாவளி பண்டிகை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில் வருவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு பருவ சூழ்நிலை காரணங்களால் வடகிழக்கு பருவமழை சற்று தாமதமாகவே தொடங்கும் என வாணிலை ஆய்வு மையம் தெரிவித்து வந்தது. காலம் காலமாக தீபாவளி பண்டிகையை மழையோடு கொண்டாடி மக்கள் வர்ணபகவான் கருணையால் நேற்று மழையில் குழந்தைகள், பெரியோர்கள் என அனைவரும் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.மாலை நேரங்களில் கோவில், திரையரங்குகள், சுற்றுலா தளங்கள், கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்கு குடும்பத்துடன் சென்று உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

rain oct 30

அதே சமயம் இந்த ஆண்டு,தென் மேற்கு பருவமழை, வழக்க மான தேதியை விட, ஏழு நாட்கள் தாமதமாக, ஜூன், 8ல், கேரளாவில் துவங்கியது. செப்., 28க்குப் பின், மழை பெய்யவில்லை; தென் மேற்கில் இருந்து காற்று மட்டும் வீசியது. தென் மேற்கு பருவமழை, 97 சதவீதம் என்ற, வழக்கமான அளவிற்கு மட்டுமே பெய்தது. இருப்பினும், தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளாவில், 50 சதவீதம் கூட மழை பெய்ய வில்லை. இது, தமிழகத்திற்கு ஏமாற்றத்தை அளித்தது.இந்தநிலையில் தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் நேற்று இரவு சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. இதனால் விவசாயிகள், பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்க சாதகமான சூழல் உருவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று இரவு முதல் மிதமான மழை பெய்ய தொடங்கியுள்ளது. சென்னையில் நேற்றிரவு மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், சேத்துப்பட்டு, எழும்பூர், சென்ட்ரல், அண்ணா நகர் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் மழை பெய்தது. சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்றததை காண முடிந்தது.

மழைக்காலம் தொடங்கி விட்டதால், நகரில் சாலையில் மழை நீர் தேங்குவதை தடுக்கவும், மழை நீரால் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்.

வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன். இது குறித்து செய்தியாளர்களுக்கு அவர் இன்று அளித்த பேட்டியில்,  “ஈரப்பதம் மிகுந்த காற்று பரவி தென்னிந்திய பகுதிகளில் மழை பெய்துள்ள நிலையில் இன்று அக்.,30ம் தேதி வடகிழக்கு பரவமழை தொடங்கியுள்ளது. அடுத்து இரு தினங்களில் தமிழகத்தில் பரவலாக மிதமான மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை இடைவெளிவிட்டு மிதமான மழை பெய்யும் “என கூறியுள்ளார். மேலும், இந்த ஆண்டு பருவ மழை சராசரியாகவோ அல்லது அதை விட குறைவாகவோ இருக்கும், 39 சென்டி மீட்டர் முதல் 44 சென்டி மீட்டர் வரை மழைப் பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பாலசந்திரன் கூறியுள்ளார்

முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட முன் கணிப்பு அறிக்கையில், ‘வடகிழக்கு பருவமழை காலத்தில், சராசரியாக, 43.8 செ.மீ., மழை பெய்யும். இதில், இந்த ஆண்டு, 90 முதல், 100 சதவீதம் வரை பெய்யலாம்’ என, கூறப்பட்டு உள்ளது.

இதனிடையே கடந்த ஆண்டு, வட கிழக்கு பருவமழை, நாடு முழுவதும் இயல்பான அளவில், 111 சதவீதமும்; தமிழகத்தில், 112 சதவீதமும் பெய்யும் என, இந்திய வானிலை மையம் கணித்தது. ஆனால், நாடு முழுவதும், 132 சதவீதம்; தமிழகத்தில், 152 சதவீதம் என, கூடுதலாக மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.