மழையே… மழையே.. வா..வா! – வட கிழக்கு மழையே வா.. வா!

மழையே… மழையே.. வா..வா! – வட கிழக்கு மழையே வா.. வா!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் வரை 3 மாதங்கள் பெய்வது வழக்கம். இந்த மழை மூலம் தமிழகத்தின் தண்ணீர் தேவை 70 சதவீதம் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பருவமழை தற்போது தொடங்கி உள்ளது. ஆனால் தமிழகத்தில் உள்ள முக்கியமான 15 அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் எதிர்பார்த்த அளவு நீர்மட்டம் உயரவில்லை. அதேபோன்று சென்னைக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், வீராணம் போன்ற ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் போதிய மழை பெய்யாததால் எதிர்பார்த்த அளவு நீர் மட்டம் உயரவில்லை.

rain nov 6

அதாவது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் சில நாட்கள் மட்டுமே தொடர்ந்து மழை பெய்தது. இதற்கிடையில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் திசை மாறியதால் கடந்த 3 நாட்களாக தமிழகத்தில் மழை குறைந்து, வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகளிடம் விசாரித்த போது, “மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, இரு நாட்களுக்கு முன்பு விசாகப்பட்டினத்துக்கு தென்கிழக்கே சுமார் 250 கி.மீ தூரத்தில் நிலை கொண்டு இருந்தது. இது பின்னர் வலுப்பெற்று, திசை மாறி வடகிழக்கு திசையில் பங்களாதேஷ் நோக்கி நகர்ந்தது. தற்போது மியான்மர் அருகே உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழந்து, மியான்மர் அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால், அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அரியலூர் மாவட்டம் திருமண்ணூரில் 3 செ.மீ, பெரம்பலூர் மாவட்டம் பாடலூர், திருவாரூர் மாவட்டம் பாண்டவையார், பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளத்தில் தலா 2 செ.மீ மழை பெய்துள்ளது. வெப்பநிலையைப் பொறுத்தவரை, அதிகபட்சமாக திருத்தணியில் 37 டிகிரி செல்சியஸ், சேலத்தில் 36 டிகிரி செல்சியஸ், மதுரை, வேலூர், தருமபுரி ஆகிய பகுதிகளில் 35 டிகிரி செல்சியஸ், சென்னையில் 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருந்தது.

இதனிடையே தமிழகத்தின் தென்மாவட்டங்களில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, மணிமுத்தாறு, பாபநாசம், வைகை மற்றும் அமராவதி, சோலையாறு போன்ற அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் இந்த அணைகளில் போதிய தண்ணீர் வருகிறது. இருந்தாலும் மேட்டூர், பவானிசாகர், அமராவதி, வைகை, பாபநாசம், மணிமுத்தாறு, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, கிருஷ்ணகிரி, சோலையாறு, பரம்பிக்குளம், திருமூர்த்தி ஆகிய அணைகளில் நீர் மட்டம் 50 அடிக்கும் கீழே தான் இருந்து வருகிறது. இதன் மூலம் அடுத்த 3 அல்லது 4 மாதங்களுக்கு முழுமையாக குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாது.

மேலும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11 ஆயிரத்து 57 மில்லியன் கன அடியாகும். இந்த ஏரிகள் உள்ள பகுதியிலும் குறைந்த அளவே மழை பெய்துள்ளதால் நீர்மட்டம் எதிர்பார்த்த அளவு உயரவில்லை. இருந்தாலும் சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக கிருஷ்ணா நீர் பெறப்பட்டு வருகிறது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் பட்சத்தில் அனைத்து அணைகளிலும் ஓரிரு நாட்களில் நீர்மட்டம் உயரும் என்று எதிர்பார்க்கிறோம். கிருஷ்ணா குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் கண்டலேறு நீர்தேக்கத்தில் இருந்து திறந்துவிடப்படும் நீர் மூலம் நிலமை ஓரளவு சமாளிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் முழுமையாக குடிநீர் தேவைக்கு வடகிழக்கு பருவமழையையே நம்பி இருக்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!