October 16, 2021

பருவமழை தப்பி போகுதாமாமில்லே!

தமிழகத்துக்கு வடகிழக்கு பருவமழைதான் அதிக மழைப் பொழிவைக் கொடுக்கும். அக். 20-இல் தொடங்குவதாக இருந்தால் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருக்கும். ஆனால் இதுவரை அதற்கான சூழல் உருவாகவில்லை என்பதால் சீசன் தள்ளிப் போகலாம் என்று தெரிகிறது.

rain oct 18

இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன், “தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை இயல்பாக அக்டோபர் மாதம் 20–ந்தேதி தொடங்கும். அக்டோபர் 12–ந்தேதி முதல் அக்டோபர் மாதம் 28–ந்தேதி வரை தொடங்கினால் அது சராசரியானது ஆகும். அக்டோபர் 12–ந்தேதிக்கு முன்பாக பருவமழை தொடங்கினால் அதை சற்று முன்பாக தொடங்கியது என்று கூறலாம். அக்டோபர் மாதம் 28–ந்தேதிக்கு பின்னர் தொடங்கினால் பருவமழை சற்று தாமதம் என்று கூறலாம்.

வட கிழக்கு திசையில் இருந்து கடல் காற்று தரைக்காற்றாக வீசினால் அது வடகிழக்கு பருவமழையின் தொடக்கம் என்று கூறலாம். ஆந்திராவின் தெற்கு பகுதியிலும், தமிழ்நாட்டில் கடலோர பகுதிகளிலும் அநேக இடங்களில் மழை பெய்தால் வடகிழக்கு பருவமழை தொடக்கம் என்று கூறலாம். இந்த ஆண்டு 25–ந் தேதிக்கு பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது.

2010–ம் வருடம் அக்டோபர் 29–ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. 2011–ம் வருடம் அக்டோபர் 24–ந்தேதியும், 2012–ம் வருடம் அக்டோபர் 19–ந்தேதியும், 2013–ம் வருடம் அக்டோபர் 21–ந்தேதியும் தொடங்கி உள்ளது. 2014–ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18–ந்தேதியும், கடந்த வருடம்(2015) அக்டோபர் மாதம் 28–ந்தேதியும் தொடங்கி உள்ளது.

தமிழ்நாட்டில் இன்னும் 2 நாட்களில் தென்மேற்கு பருவமழை விலக்கி கொள்ளும். பெரும்பாலும் தென்மேற்கு பருவமழை விலக்கி கொள்ளும் அதே நாளில் வட கிழக்கு பருவமழை தொடங்கும். சில வருடங்களில் இரண்டு பருவமழை காலத்திற்கும் இடைவெளி இருக்கும்.அதுபோல இந்த வருடம் தென்மேற்கு பருவமழை முடிந்த பின்பு சற்று இடைவெளி விட்டுதான் வட கிழக்கு பருவமழை தொடங்கும். இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யும்”என்று தெரிவித்தார்.