April 2, 2023

பிரிட்டன் & அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று ஆராய்ச்சியாளர்களுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு!

ஆக்ஸிஜன் மற்றும் உடல் செல் குறித்து ஆய்வு மேற்கொண்ட பிரிட்டன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று ஆராய்ச்சியாளர்களுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

வேதியியல், இயற்பியல், மருத்துவம், அமைதி மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் மனித சமுதாயத்திற்கு தலைசிறந்த பங்களிப்பை வழங்குவோருக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள ராயல் ஸ்வீடிஸ் அறிவியல் கழகம் மூலம், நோபல் பரிசு அறிவிக்கப்படுகிறது.

அந்த வகையில், நடப்பு ஆண்டிற்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் கெலின் (william kaelin), கிரெக் செமென்சா (Gregg semenze) மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த பீட்டர் ராட்க்ளிஃப் ஆகிய மூவருக்கும், இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

இதில் ஆய்வாளர் காலின் அமெரிக்காவில் உள்ள ஹவார்ட் ஹக்ஸ் மருத்துவக் கல்விந நிறுவனத்தில் காலின் பணியாற்றி வருகிறார். ஜான் ஹோப்கின்ஸ் செல் பொறியியல் நிறுவனத்தில் நுரையீரல் தொடர்பான ஆய்வு திட்டத்தில் செமன்சா இயக்குநராக பணியாற்றி வருகிறார். லண்டனில் உள்ள பிரான்சிஸ் கிரிக் கல்வி மையத்தில் மருத்துவ ஆய்வு பிரிவு இயக்குநராக ராட்கிளிஃப் இருந்து வருகிறார்.

மனித செல்கள், ஆக்சிஜன் அளவுக்கு ஏற்ப எவ்வாறு தகவமைத்துக் கொள்கின்றன என்பது குறித்த ஆராய்ச்சிக்காக அவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. ஆக்சிஜன் அளவு குறையும் போதும், அதிகரிக்கும் போதும் செல்கள் எவ்வாறு தகவமைத்துக் கொள்கின்றன என்பது பற்றி அவர்கள் ஆராய்ந்தனர். செல்கள் மற்றும் திசுக்கள் சார்ந்த புற்றுநோய் சிகிச்சைக்கு இந்த ஆராய்ச்சி உதவும் என்று கூறப்படுகிறது. பரிசுத் தொகையான ஆறரை கோடி ரூபாய் மூன்று பேருக்கும் பகிர்ந்து வழங்கப்படுகிறது. டிசம்பர் 10ம் தேதி ஸ்டாக்ஹோமில் நடக்கும் நிகழ்ச்சியில் இவர்களுக்கு முறைப்படி நோபல் பரிசு வழங்கப்படும்.