April 12, 2021

செப்டம்பர் 15ல் இருந்து மக்களவைக் கூட்டத் தொடர்: ஆனால் நோ கொஸ்டின் ஹவர்!

மக்களவை கூட்டத் தொடர் செப்டம்பர் 15-ம் தேதி முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை தினமும் மாலையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இத்தொடரில் கேள்வி நேரமோ, தனி நபர் தீர்மானமோ கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வழக்கமாக ஜூலை இறுதியில் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு, நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், இந்த தொடர் தள்ளிப்போனது. எனினும் பட்ஜெட் தொடர் முடிந்து சுமார் 6 மாதங்கள் ஆகும் நிலையில் மழைக்கால தொடரை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி வருகிற 14-ந் தேதி முதல் இந்த தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில் மக்களவை கூட்டத்தொடர் செப்டம்பர் 15-ம் தேதி முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை தினமும் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முதல் நாளான செப்டம்பர் 14-ல் மட்டும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மக்களவை கூட்டம் நடைபெறும் என்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் மக்களவை செயல்பாடுகள் குறித்து அதன் செயலாளர் அறிவித்துள்ளார்.

வழக்கமாக பாராளுமன்ற கூட்டத் தொடரின் ஒவ்வொரு நாளும் கேள்வி நேரம் ஒதுக்கப்பட்டு விவாதிக்கப்படும். ஆனால் இந்த கூட்டத்தொடர் முழுவதும் கேள்வி நேரம், தனி நபர் தீர்மானம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஜீரோ ஹவர் மற்றும் பட்டியலிடப்பட்ட மற்ற அவை நடவடிக்கைகள் அனைத்தும் நடைபெறும் என மாநிலங்களவை செயலகம் தெரிவித்துள்ளது.

மழைக்கால கூட்டத்தொடரில் கொரோனா கால கட்டுப்பாடுகளை எவ்வாறு பின்பற்றுவது என்பது தொடர்பாக மக்களவை சபாநாயகரும், மாநிலங்களவை தலைவரும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, உரிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளனர்.