December 2, 2021

கான்ஸ்டபிள்கள் டூட்டி டைம்-லே செல்போன் யூஸ் பண்ண தடை! – டிஜிபி ஆர்டர்!!

நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு பணியில் இருக்கும்போது, காவலர்கள் செல்போனை பயன்படுத்துவதால் பணியில் கவனக்குறைவு ஏற்படுவதாகவும், காவலர்கள் வாட்ஸ் ஆப்பில் அதிக நேரத்தை காவலர்கள் செலவழிப்பதாக வந்த புகாரை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்கள் செல்போன் பயன்படுத்துவதற்கு தடைவிதித்து டிஜிபி அலுவலகத்தில் இருந்து காவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

டி டாக் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் காக்கி சீருடையில் இருக்கும் போலீஸ் துணை கமிஷனர் ஒருவர், பாடல் பாடுவது போன்றும்,வசனங்கள் பேசுவது போன்றும் இரண்டு வீடியோக்கள் நேற்று வைரலாகின. இதைத் தொடர்ந்து இது குறித்து காவல்துறை வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் முணுமுணுக்கப்பட்டது. `மக்களுக்காக 24 மணி நேரமும் சேவை செய்யவேண்டிய அதிகாரிகள் இப்படிச் செய்யலாமா?’ எனப் பொதுமக்கள் பலர் கருத்து தெரிவித்துவந்தனர். இதேபோன்று சில அதிகாரிகள், பணி நேரத்தின்போது செல்போனை அதிகமாகப் பயன்படுத்திவருகின்றனர் என்ற குற்றச்சாட்டும் அதிகம் எழுந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில்தான், பாதுகாப்புப் பணியில் உள்ள போலீஸார் செல்போன் பயன்படுத்தக் கூடாது என டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து டிஜிபி அனுப்பிய சுற்றறிக்கையில் “சப் – இன்ஸ்பெக்டர் அந்தஸ்துக்கு பணிக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே பணி நிமித்தமாக செல்போன் பயன்படுத்தலாம். பாதுகாப்புப் பணியின்போது காவலர்கள் அதிக நேரத்தை செல்போனிலே செயல்படுத்துவதாகப் புகார் எழுந்ததை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு – விவிஐபி, கோயில், திருவிழாக்கள், உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பாதுகாப்புப் பணியில் உள்ளவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. அனைத்து காவல் நிலையத்திலும் உள்ள உயர் அதிகாரிகள், அவர்களுக்குக் கீழ் உள்ள காவலர்களுக்கு இதை அறிவுறுத்த வேண்டும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.