மிஸ்டர் ராகுல் .. நீங்கள் இம்புட்டு மட்டமான ஆசாமியா? மனோகர் பரிக்கர் அப்செட்!

மிஸ்டர் ராகுல் .. நீங்கள் இம்புட்டு மட்டமான ஆசாமியா? மனோகர் பரிக்கர் அப்செட்!

என் உடல் நலம் விசாரிக்க வந்திருந்த ராகுல் காந்தியுடனான சந்திப்பின் போது ரபேல் ஒப்பந்தம் குறித்து எதுவும் பேசவில்லை என்று கோவா முதல்வர் மனோகர் பரிக்கர் இன்று ராகுல் காந்திக்கு அனுப்பிய கடிதத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று கோவா முதல்வர் மனோகர் பரிக்கரை சட்டப்பேரவை வளாகத்தில் சந்தித்து பேசினார். அப்போது கோவா சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சந்திரகாந்த் காவ்லேகர் உடன் இருந்தார்.

இந்த சந்திப்பு குறித்து ட்விட்டரில் ராகுல் காந்தி ‘இது அரசியல் ரீதியான சந்திப்பு அல்ல. மனோகர் பரிக்கரின் உடல்நிலையை விசாரிக்க சென்றேன்’ என கூறினார்.

ஆனால் பின் கொச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள் முன்பு உரையாற்றிய போது ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் தொடர்பான புதிய ஒப்பந்தத்தில் தனக்கு எந்த பங்கும் இல்லை என்று மனோகர் பரிக்கர் திட்டவட்டமாக கூறியதாக ராகுல் காந்தி தெரிவித்தார். இந்நிலையில் ரபேல் விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி கூறிய இந்த தகவல் பொய்யானது என்று கோவா முதல்வர் மனோகர் பரிக்கர் இன்று தெரிவித்தார்.

மனோகர் பரிக்கர் இது தொடர்பாக ராகுல் காந்திக்கு அனுப்பிய கடிதத்தில், “நேற்று முன்னறிவிப்பு எதுவும் இன்றி திடீரென்று என்னை வந்து சந்தித்து என் உடல்நலன் குறித்து விசாரித்து சென்றீர்கள். என் உடல்நலம் குறித்து விசாரிக்கவே நேற்று நீங்கள் என்னை சந்திக்க வந்ததாக நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் ஊடகங்களில் வெளியான செய்தியை பார்த்தப் பின்பு உங்கள் சந்திப்பின் பின்னணியில் அரசியல் ஆதாயம் இருப்பதை அறிந்து வருத்தமடைந்தேன்.

என்னை நீங்கள் சந்தித்த 5 நிமிடங்களில் ரபேல் ஒப்பந்தம் குறித்து நாம் இருவரும் எதுவும் பேசவில்லை. இந்நிலையில் உண்மைக்கு மாறான தகவலை மலிவான அரசியல் ஆதாயங்க ளுக்காக கூறியுள்ளீர்கள்..ரபேல் போர்விமானங்களின் கொள்முதல் விதிமுறைகளின் படி தான் நடந்தது என்பதை நான் தொடர்ந்து நான் கூறி வருகிறேன். ஆனால் அரசியல் ஆதாயத்துக்காக நான் கூறாத விஷயத்தை உங்களிடம் சொன்னதாக கூறி தரம் தாழ்ந்து நடந்துகொள்வீர்கள் என நினைக்கவில்லை.

உங்களின் இந்த செயல் எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. இனியாவது உண்மையை வெளிப்படையாக கூறுவீர்கள் என நம்புகிறேன். இனி இதுபோன்ற உள்நோக்கத்துடன் உடல்நலன் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்” என்று மனோகர் பரிக்கர் கடிதத்தில் கூறியுள்ளார்.

இதனிடையே ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக ராகுல் காந்தி பொய் கூறியதற்கு பாஜக தலைவர் அமித் ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்ட செய்தியில் ‘‘அன்புள்ள ராகுல் காந்தி அவர்களே, நோயை எதிர்த்து போராடி கொண்டிருக்கும் ஒருவரின் பெயரில் நீங்கள் பொய் கூறியதன் மூலம் நீங்கள் உணர்ச்சியற்றவர் என்பதை நிரூபித்து விட்டீர்கள்.. இந்திய மக்கள் உங்களின் இந்த செயலை கண்டு அருவருப்பு அடைந்துள்ளனர். மனோகர் பரிக்கர் எப்போதும் போல் உண்மையை வெளிப்படுத்தியுள்ளார்’’ என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்

error: Content is protected !!