October 22, 2021

தமிழகத்தில் நிபா வைரஸ் நோய் வரவில்லை- சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

நாட்டில் அவ்வ்ப்போது புதிய வகை நோய் பரவி கொத்து கொத்தாக ஜனங்களை பலியாக்குவது தெரிந்த விஷயம் தான். அந்த வகையில் எய்ட்ஸ், ஸ்வைன் ஃபுளூ, பறவைக் காய்ச்சல் போன்ற நோய்களைத் தொடர்ந்து தற்போது நிபா என்ற வைரஸ் மூலம் கேரளாவில் ஒருவகையான மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. கோழிக்கோடு மாவட்டத்தில் இந்த வைரஸ் காய்ச்சல் தாக்கியதில் 10 பேர் பலி ஆகி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் நிபா வைரஸ் தொற்று இல்லை என தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் நிபா வைரஸ் தொற்று ஏற்படாதவாறு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

நம் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு கடந்த ஆண்டு 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அப்போதே இந்த காய்ச்சல் நோய் எல்லாம் கேரளத்திலிருந்துதான் தமிழகத்துக்கு பரவியதாக கூறப்பட்டது. இந்நிலையில் வௌவால் மூலம் பரவும் நிபா என்ற வைரஸ் காய்ச்சல் கேரளத்தில் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் முகமது ஸாலிஹ், அவரின்சகோதரர் முகமது ஸாபித் மற்றும் இவர்களின்உறவினர் மரியம் ஆகியோர் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்தனர்.அவர்களைப் பரிசோதித்த டாக்டர்கள் நிபா வைரஸ் தாக்கியதால் இறந்திருப்பதை உறுதி செய்தனர். மரணமடைந்த முகமது ஸாலிஹ் சகோதரர்களின் தந்தை மூஸக்கையும் நிஃபா வைரஸ் காய்ச்சல் தொற்றியுள்ளது.

டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்கள் அருகில் இருப்பவர்களிடம் தொற்றாது. ஆனால், நிஃபா வைரஸ் தாக்கியவர் களின் அருகில் இருப்பவர்களை எளிதில் தாக்குகிறது. நிஃபா காய்ச்சலால் இறந்த முகமது ஸாபித்தை பராமரித்த நர்ஸ் லினியும் அதே நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். இந்த நிபா வைரஸ் மேலும் பரவக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை காரணமாக மரணமடைந்த லினியின் உடல் அவரின்உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. மேலும் மலப்புறம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் நிபா வைரஸ் காரணமாக இதுவரை 10 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஒரு செவிலியரும் அடக்கம் என்று தகவல்.

இது குறித்து விசாரித்த போது பழங்களை உண்டு வாழும் ஒருவகையான வவ்வால் மூலம் இந்த நிபா வைரஸ் பரவுவதாக கூறப்படுகிறது. அதாவது பழம் திண்ணி வவ்வால்கள், மர நரிகள் போன்ற காட்டு உயிரினங்களில் வாழும் ஒரு வைரஸே ‘நிபா’வைரஸ் ஆகும். இது ஹெபினா வைரஸ் என்ற இனத்தில், பேரமிக்ஸோவிரிடே குடும்பத்தைச் சார்ந்தது. ‘நிபா’வைரஸ் வசிக்கும் காட்டு உயிரினங்கள் நகரத்திற்கு வரும் போது, அங்குள்ள மனிதர்களின் ஆடு, நாய், பூனை, குதிரை போன்ற வளர்ப்புப் பிராணிகளுக்கு அவற்றின் கழிவுகளில் இருந்து இது பரவுகிறது. பின்னர் வளர்ப்புப் பிராணிகளிடம் இருந்து மனிதர்களுக்கும் பரவுகிறது.

கடந்த 1998, 99 ஆம் ஆண்டுகளில் மலேசியா, சிங்கப்பூரில் இந்த வைரஸ் தொற்று முதன்முறையாகக் கண்டறியப்பட்டது. மலேசியாவின் ‘நிபா’ கிராமத்தில் முதல் பாதிப்பு கண்டறியப்பட்டதால்தான் இதற்கு ‘நிபா’ வைரஸ் என்ற பெயரே வந்தது. மலேசிய காடு அழிப்பே அதன் காரணமாகக் கூறப்பட்டது. எளிதில் தொற்றும் ‘நிபா’ வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு 20 ஆண்டுகள் ஆனாலும், இன்னும் ‘நிபா’வைரஸ் பாதிப்புக்கு மருந்து இல்லை. தடுப்பூசியும் இல்லை. அதனால் நோய் பரவுவதைத் தடுக்க பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பது அவசியம். காய்ச்சல், தலைவலி, மயக்கம் என்று ஆரம்பித்து தாக்கிய சில நாட்களிலேயே கோமா, மரணம் என ஆளைக் கொள்ளும் கொடூர வைரஸ் ‘நிபா’.நிபாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் பிழைக்க 30% வாய்ப்புகள் மட்டுமே உள்ளதாக உலகச் சுகாதார நிறுவன ஆய்வுகள் கூறுகின்றன.

இந்நிலையில் இந்த வைரசால் பாதிக்கப்பட்ட ரத்த மாதிரிகள், மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் வெளிவந்த பிறகே இந்த காய்ச்சல் குறித்த மேலும் பல விவரங்கள் தெரியவரும் என கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் இதனிடையே வௌவால் கடித்த பழங்களைச் சாப்பிடக் கூடாது எனவும்மாம்பழங்களை நன்கு கழுவி சாப்பிட வேண்டும் எனவும் டாக்டர்கள் எச்சரித்துள்ள  நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் நிபா வைரஸ் தொற்று இல்லை என தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் நிபா வைரஸ் தொற்று ஏற்படாதவாறு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்..