December 7, 2022

திமுக ஆட்சியை விமர்சிக்க அவகாசம் கொடுப்பதா? – வழியில்லை ராசா!

புதிய அரசு – இப்போதுதான் ஆட்சிக்கே வந்துள்ளார்கள் – அவகாசம் தர வேண்டாமா ? அதற்குள் விமர்சிக்கலாமா ?”- என்று சில நண்பர்கள் கேட்கிறார்கள் . இவர்கள் எவரும் அரசு ஆட்சி அதிகாரத்துக்கே புத்தம் புதியவர்கள் அல்ல ! மேற்கண்ட வாதம் – ஒரு வேளை தப்பித்தவறி கமலஹாசன் கட்சியோ , விஜயகாந்த் கட்சியோ , சீமான் கட்சியோ ஆட்சிக்கு வந்திருந்தால் பொருந்தும் . ஆனால் திமுகவினர் அப்படி அல்ல ! இந்த அமைச்சரவையில் உள்ள பலரும் – புதுமுகங்கள் ஓரிருவர் நீங்கலாக ஏற்கனவே கருணாநிதி முதல்வராக இருந்தபோதே காபினெட் அமைச்சர்களாக இருந்தவர்கள்தான்.

ஸ்டாலின் அவர்களே கருணாநிதி அமைச்சரவையில் துணை முதல்வராகவும் – உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் இருந்தவர்தான். துரைமுருகன் நீண்ட அனுபவமும் – உண்மையிலேயே அவர் பலமுறை வகித்த பொதுப்பணித் துறை குறித்து விரல் நுனியில் விவரங்களை வைத்திருக்கும் திறமைசாலி எனப் பெயர் பெற்றவர் . இப்போது நீர்ப்பாசனம் என்ற துறை அவருக்கென்று தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது – அவருடைய அனுபவ ஞானத்துக்கு மிகவும் பொருத்தமானது . பொன்முடி என்ன நிர்வாகத்துக்குப் புதியவரா ? மேலும் ரகுபதி , KKSSR ராமச்சந்திரன் , செந்தில் பாலாஜி போன்றோரும் ஏற்கனவே அதிமுக அமைச்சர்களாக இருந்து அனுபவம் உடையவர்கள்தான் . எனவே இந்த அமைச்சரவையை முற்றிலும் புதிய கற்றுக் குட்டிகள் என்று – பேரறிஞா் அண்ணா தமது அமைச்சரவையைப் பற்றி 1967 ல் சொன்னது போல் – “காங்கிரஸ் கட்டி முடிக்கப் பட்ட கோபுரம் – நாங்கள் கொட்டிக் கிடக்கும் செங்கல்”- என்று கூற முடியாது .

மேலும் திமுகவுக்கு இருக்கும் மிகப் பெரிய பலம் அரசு ஊழியர்கள் – அதிகாரிகள் ! “ஈட்டிய விடுப்புக்கான சம்பளம் ஓராண்டு நிறுத்தம்”- என்று அரசு சமீபத்தில் அறிவித்தது ! எந்த அரசு ஊழியனாவது , அவர்களது சங்கம் ஏதாவது எதிர்ப்புக் காட்டியதா பாருங்கள் ! இதே போன ஆண்டு கொரோனா முதல் அலையில் – “அரசு ஊழியர்கள் கொரோனா ஒருங்கிணைப்புப் பணியில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும்” – என்று எடப்பாடியார் உத்தரவு போட்ட உடனே ஜாக்டோ ஜியோ சங்கம் நீதிமன்றத்துக்குப் போயிற்று ! “இது எங்கள் சர்வீஸ் கண்டிஷனில் இல்லை”- என்று மனு கொடுத்தது ! நீதி மன்றம் காரித் துப்பி மனுவைத் தள்ளுபடி செய்தது வேறு விஷயம் ! இன்றைக்குப் பாருங்கள் – ஈட்டிய விடுப்பை ஓராண்டுக்கு நிறுத்தி வைத்தாலும் பொத்திக் கொண்டு இருக்கிறார்கள் ! அவர்கள் சம்பளத்தையே இன்னும் ஆறு மாதத்துக்கு அரைச் சம்பளமாகக் குறைத்தாலும் – அரசு ஊழியர்களோ, அவர்கது சங்கமோ வாயைத் திறக்க மாட்டார்கள் ! அந்த அளவுக்கு அவர்களில் மிகப் பலர் திமுக அபிமானிகள்! போக்குவரத்து ஊழியர்களும் அப்படித்தான் !

எடப்பாடியார் அரசு என்றால் – ஸ்ட்ரைக் அறிவித்த நேரத்துக்கு சில மணி நேரம் முன்பே பஸ்களை நடுரோட்டில் ஆங்காங்கே நிறுத்திவிட்டுப் பயணிகளைப் பாதி வழியில் இறக்கிவிட்டு நடக்க விடுவார்கள்! இப்போது அவர்களின் கூட்டணி அரசு – இன்னும் இரண்டு வருடத்துக்கு ஊதிய உயர்வு , ஓய்வூதியப் பலன் எதுவும் பேசக் கூடாது என்று ஸ்டாலின் உத்தரவிட்டாலும் அதை அப்படியே கேட்பார்கள் ! தமிழக அரசுக்கு – ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு வாய்த்தது போல ஒத்துழைப்பும், புரிதலும் கொண்ட அரசு ஊழியர்கள் , அவர்களது சங்க அமைப்புக்கள் வேறு எந்த மாநில அரசுக்கும் கிடையாது !

மேலும் சென்ற ஆண்டு – கொரோனா முதல் அலையிலேயே – அப்போதிருந்த எடப்பாடியார் தலைமையிலான அரசு ……அந்த அரசுக்கு சந்தித்த முதல் அனுபவம் அது ! அதில் பட்ட சிரமங்களை ஆராய்ந்து , ஒவ்வொரு முயற்சியாக எடுத்து , அதில் ஏற்பட்ட அனுபவங்களைக் கொண்டு அடுத்த முயற்சியில் அந்தப் பிழைகளைத் திருத்தி ….. இப்படி முயன்று முயன்று படிப்படியாக டெவலப் செய்து – கொரானா நோய் எதிர்ப்பு செயல்பாட்டைப் பொருத்தவரை – ஒரு நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்கிக் கொடுத்து விட்டுத்தான் போயுள்ளது அதிமுக அரசு !

இவர்கள் அந்த நிர்வாகக் கட்டமைப்பை மேலும் விரிவாக்கலாம் – அல்லது அதில் ஏதேனும் குறைகள் இப்போதைய அனுபவத்தின் அடிப்படையில் தென்பட்டால் – அவற்றைக் களைந்து அந்த நிர்வாகக் கட்டமைப்பை மேலும் சிறப்பாக ஆக்கலாம் !

ஆனால் ஒரு நிர்வாகக் கட்டமைப்பு – கொரோனா மேனேஜ்மென்டில் – ஏற்கெனவே உள்ளது !

புதியதாக ஒன்றை உருவாக்க வேண்டிய சிரமம் இவர்களுக்கு இல்லாமல்தான் செய்து வைத்துவிட்டுப் போயுள்ளது முந்தைய அரசு !

ஆக … ஆக….

1) ஏற்கெனவே அனுபவம் வாய்ந்த சீனியர் அமைச்சர்கள்

2) எந்தவித முணுமுணுப்பும் காட்டாமல் – சம்பள நிறுத்தம் உட்பட எதுவானாலும் – கழகத் தலைவர் காலால் இட்ட வேலையைத் தலையால் ஏற்று முடிக்கும் விஸ்வாசம் மிக்க அரசு ஊழியர்கள் , அவர்களது சங்கங்கள்

3) ஏற்கெனவே முந்தைய அரசு ஏற்படுத்தி விட்டுச் சென்றுள்ள – முதல் கொரானா அலையைத் தொடர்ந்து ஏற்படுத்திச் சென்றுள்ள – ADMINISTRATIVE MECHANISM ….!

இப்படி இத்தனை வசதிகளையும் வைத்துக் கொண்டு ….. புதிய அரசை விமர்சிக்க அவகாசம் கொடுங்கள் என்று எதிர்பார்ப்பது சரியில்லை!ஜனநாயகத்தில் விமர்சனங்களையும் எதிர் கொண்டுதான் – அவற்றில் ஏற்பவற்றை ஏற்று , தள்ள வேண்டியதைத் தள்ளி – அரசு செயல்பட வேண்டும்! ஆனால் – ‘தள்ள வேண்டியதைத் தள்ளினால்தான்’- எந்த வேலையும் நடக்கிறது என்ற பெயரைத்தான் எந்த அரசும் வாங்கிவிடக் கூடாது .

நிலவளம் ரெங்கராஜன்