August 2, 2021

நிவர் புயல் : லேட்டஸ்ட் அப்டேட் ரிப்போர்ட்! – வீடியோ

நிவர் புயலானது புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கே 350 கி.மீ. தொலைவில் நிலை கொண்டு உள்ளது. நாளை மாலை அதி தீவிர புயலாக நிவர் கரையை கடக்கும் என்று வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ள நிலையில் 5 வெள்ள நிவாரண குழுக்கள் மற்றும் ஒரு டைவிங் குழு சென்னையில் தயாராக உள்ளது. மேலும், நாகப்பட்டினம், ராமேஸ் வரம் மற்றும் ஐ.என்.எஸ். பருந்து கடற்படை தளம் ஆகிய பகுதிகளில் கடற்படைப் பிரிவை சேர்ந்த வெள்ள நிவாரணக் குழு தயாராக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விசாகப்பட்டினத்தில் கடற்படையை சேர்ந்த கப்பல் ஐ.என்.எஸ் ஜோதி தேவைக்கேற்ப உதவிகளைச் செய்ய அனுப்பி வைக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிவர் புயலின் நகர்வுத் தன்மை குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர், “ நிவர் புயலானது சென்னையில் இருந்து 420 கி.மீ தொலைவிலும் புதுவையில் இருந்து 370 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. பல மணி நேரமாக ஒரே இடத்தில் நிலை கொண்டிருந்த நிவர் புயல் தற்போது மணிக்கு 5 கி.மீ வேகத்தில் நகருகிறது. வடக்கு-வடமேற்கு நோக்கி தற்போது நகர்ந்து வரும் நிவர் புயல், அதன் பின் வடமேற்கு திசையில் நகரும். அடுத்த 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறும். தமிழகம், புதுவை, ஆந்திரப்பிரதேசத்தில் கடல் கொந்தளிப்பாக காணப்படும். கடல் கொந்தளிப்பாக இருப்பதால் வழக்கத்தை விட அலைகள் 14 அடி உயரம் எழும்பும். கஜா புயலைவிட நிவர் புயல் தாக்கம் சற்றுக் குறைவாக இருக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை மிக கனமழை பெய்யும்”என்று அவர் கூறியுள்ளார்.

இதை அடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. சென்னையில் நள்ளிரவு முதல் தொடர்ந்து பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. கொட்டித் தீர்க்கும் கனமழையும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை எக்மோரில் உள்ள கட்டுப்பாட்டு அலுவலகத்தில் சென்று தமிழக முதல்வர் ஆய்வு நடத்தியுள்ளார். மேலும் அரசு அதிகாரிகளுடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனையிலும் ஈடுபட்டுள்ளார்.

புயல் கரையை கடக்கும் உள்ள காரணத்தினால் நாளை தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் புயலை எதிர்கொள்ள தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டு உள்ளன. பாதிப்புக்கு உள்ளாகும் அல்லது அபாயகரமான இடங்கள் என கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர்.