நிலையான வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முதலிடம்: நிதி ஆயோக் அறிக்கை!

சிறந்த நிர்வாக கட்டமைப்பு காரணமாக, வறுமை ஒழிப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாடு அரசு வெற்றிபெற்றுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய விடுதலைக்கு பிறகு மாநிலங்களில் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக 1950 ஆம் ஆண்டில் ஒன்றிய திட்டக்குழு அமைக்கப்பட்டது. இந்தத் திட்டக் குழுவின் முதல் தலைவராக அப்போதைய பிரதமர் நேரு இருந்தார். இந்நிலையில் 2014 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, ஒன்றிய திட்டக் குழுவை கலைத்துவிட்டு, 2015 ஆண்டில் நிதி ஆயோக் என்ற புதிய அமைப்பை ஏற்படுத்தியது.

நிதி ஆயோக் மற்றும் கொள்கை வளர்ச்சி திட்ட குழுவின் நிலையான வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்தியதன் மூலம், வறுமை ஒழிப்பு நடவடிக்கையில், தமிழ்நாடு முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் தமிழ்நாடு 86 மதிப்பெண்கள் பெற்றுள்ள நிலையில், பரப்பளவு மற்றும் இயற்கை வளங்கள் அதிகம் கொண்ட பெரிய மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திரா, தமிழ்நாட்டை விட 3 மதிப்பெண்கள் குறைவாக பெற்று பின் தங்கியுள்ளன.

சிறந்த நிர்வாக கட்டமைப்பை தமிழ்நாடு பெற்றுள்ளதால், திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முடிவதாக கேரள மாநிலத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் விஜயானந்த் தெரிவித்துள்ளார். இந்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பஞ்சாயத்துராஜ் அமைச்சகங்களில் உயர் பொறுப்புகளை வகித்த அவர், தமிழ்நாடு அரசு திட்டங்களை செயல்படுத்துவதை தாம் உன்னிப்பாக கவனித்தாகவும், குறிப்பாக மாவட்ட அளவில் நிர்வாக கட்டமைப்பு சிறப்பாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, வளர்சித் திட்டங்கள் சரியான பயனாளிகளை விரைவாக சென்றடைவதாகவும் கேரள மாநிலத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் விஜயானந்த் கூறியுள்ளார். இதே கருத்துகளை முன்னாள் தமிழ்நாடு நிதித்துறை செயலாளர் கே.சண்முகம், காந்தி கிராம நிறுவனத்தின் பேராசிரியர் ரகுபதி உள்ளிட்டோர் அழுத்தமாக பதிவு செய்துள்ளனர்.கடந்த ஆண்டு இந்தப் பட்டியலில், இந்தியளவில் கேரளா முதலிடத்தையும் தமிழ்நாடு இரண்டாவது இடத்தையும் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது..