November 27, 2021

இந்திய அளவில் இரண்டாம் பிடித்த தமிழ்நாடு ;நிதி ஆயோக் பட்டியல் விபரம்!

ந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறையின் நிலை குறித்து நிதி ஆயோக் கணக்கிட்டு தரவரிசை ஒன்றை வெளியிட்டு வருகிறது. இதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை 23 காரணிகளை கொண்டு மதிப்பீடு செய்யப்படுகின்றன. இந்தத் தர வரிசையை நிதி ஆயோக், மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்பநல அமைச்சகம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் தயாரிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று வெளியான பட்டியலில் அனைத்து துறைகளிலும் ஒருங்கிணைந்த வளர்ச்சியில் கேரளா முதலிடத்திலும், தமிழ்நாடு மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்கள் இரண்டாம் இடத்திலும் இருப்பதாக நிதி ஆயோக் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 65 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மத்திய திட்டக்குழு கலைக்கப்பட்டு, அதற்கு மாற்றாக நிதி ஆயோக் எனப்படும் இந்தியாவை மாற்றுவதற்கான தேசிய நிறுவனம் அமைக்கப்பட்டு அதன் மூலமாக நாட்டில் பொது சுகாதாரம் வறுமை ஒழிப்பு, அனைவருக்கும் குடிநீர், பாலின சமநிலை உள்ளிட்ட 16 தலைப்புகளில் 115 பணிகளில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களின் பட்டியலை நிதி ஆயோக் அமைப்பு ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளுக்கான பட்டியலை நிதி ஆயோக் அமைப்பு இன்று வெளியிட்டுள்ளது. அதில் ஒட்டுமொத்த செயல்பாடுகளை பொருத்தவரை கேரள மாநிலம் 75 மதிப்பெண்களுடன் முதலிடத்திலும், இமாச்சல் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களும் 74 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

ஆந்திரா, கோவா, கர்நாடகா, உத்தராகண்ட், சிக்கிம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களை இந்த பட்டியலில் பிடித்திருக்கிறது. உத்தர பிரதேசம், அஸ்ஸாம், ஜார்க்கண்ட், பீகார் ஆகிய மாநிலங்களில் கடைசி இடங்களில் உள்ளது. இதில் பீகார் மாநிலம்தான் மிக மோசமாக வெறும் 52 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

வறுமை ஒழிப்பை பொருத்தவரை, தமிழ்நாடு மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்கள் சிறப்பாக செயல்படுபவையாக உள்ளது. பொது சுகாதாரத்தில் கடந்த ஆண்டு 6வது இடத்தில் இருந்த குஜராத், இந்த ஆண்டு முதல் இடத்திற்கு முன்னேறியுள்ள சூழலில் நம் தமிழகம் இரண்டாம் இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது.

கல்வியறிவு சிறப்புடன் செயல்படும் மாநிலமாக கேரளா இடம் பிடித்த நிலையில், பாலின சமநிலையை சட்டீஸ்கர் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள சிறப்பாக கையாள்வதாக சுட்டிக்காட்டியுள்ளது. சுத்தமான குடிநீர் வழங்குவதில் கோவா மற்றும் லக்ஷதீவு சிறப்பாக செயல்படுவதாகவும், சுத்தமான எரிசக்தியை பொருத்தவரை ஆந்திரா – கோவா – ஹரியானா – தமிழ்நாடு – தெலங்கானா உள்ளிட்ட நாட்டின் பல மாநிலங்களில் சிறப்பாக செயல்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சியில் இமாச்சல் பிரதேசம் மற்றும் சண்டிகர் ஆகிய மாநிலங்கள் சிறப்பாக செயல்படுவதாகவும், உள்கட்டமைப்பை மேம்படுத்த குஜராத் மற்றும் டெல்லி ஆகியவை சிறப்பாக செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.