September 28, 2022

எந்தப் பயனும் இல்லாத நிதியமைச்சரின் 4ம் நாள் அறிவிப்புகள் – முழு விபரம்!

நாட்டு மக்களை முடக்கி போட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை மீட்டெடுக்க 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதார திட்டங்கள் அறிவிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். அதன்படி கடந்த 3 தினங்களாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சிறு குறு வணிகர்களுக்கான நிதி சலுகைகள், புலம்பெயர்ந்த தொழிலாளர் களுக்கான நலதிட்டங்கள் மற்றும் விவசாயம் தொடர்பான பொருளாதார திட்டங்களையும் அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று நான்காவது கட்டமாக நிலக்கரி, கனிமம், பாதுகாப்பு, மின்துறை, விண்வெளி உள்ளிட்டத் துறைகளில் தனியார் பங்களிப்பு தொடர்பான முக்கிய அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ளார். இதை அடுத்து பல தரப்பிலும் ‘கொரோனா என்பது பக்காவாக திட்டமிடப்பட்ட ஒரு சதி’ என்று இத்தனை நாளும் சிலர் கூறி வந்தது நிஜம் என்றுதான் தோன்றுகிறது… வெறும் பீதியைக் கிளப்பி, அதையே சாக்காக வைத்து, தங்கள் மோசடித் திட்டங்கள் அனைத்தையும், கேள்விமுறையே இல்லாமல் நிறைவேற்ற ஆரம்பித்துவிட்டார்கள்.இந்திய அரசியல் வரலாற்றில் இத்தனை பகிரங்கமாக, நாட்டின் வளங்களை, பலங்களை, ரகசியங்களை தனியாருக்கு தாரைவார்த்த அரசு வேறு எதுவும் இல்லை! அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்திய அரசு (பி) லிமிட் என்ற பலகை பாராளுமன்றத்துக்கு முன் தொங்கினாலும் அதிர்ச்சியடைய இனி ஒன்றுமில்லை… என்றெல்லாம் அதிருப்தி குரல்கள் ஒலிக்க ஆரம்பித்து விட்டன!

குறிப்பாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ‘ஏழைக் குடும்பங்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், நாள் கூலி தொழிலாளர்கள், சுய வேலை செய்பவர்கள், வேலையிழந்த தொழிலாளர்கள், கீழ்த்தட்டில் உள்ள நடுத்தர மக்கள் ஆகியோருக்கு எந்தப் பயனும் இல்லாத நிதியமைச்சரின் அறிவிப்புகளை நான்கு நாட்களாகக் கேட்டோம்’ என்று தெரிவித்துள்ளார்

இதனிடையே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களிடம், ‘எதிர்பாராத வைரஸ் தாக்கத்தல் உருவாகி இருக்கும் சூழல் மற்றும் போட்டிகளை சமாளித்து சுயசார்பு இந்தியாவை உருவாக்க மத்திய அரசு உழைத்து வருகிறது. பல துறைகளில் கொள்கை ரீதியிலான மாற்றம் தேவைப்படுகிறது. அதாவது சர்வதேச அளவில் பொருளாதாரத்தை மேம்படுத்த சவால்களை சந்திக்க நேரிடும்.

ஏற்கனவே சிறு, குறு தொழில்துறையினர் விவசாயிகளுக்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. பிறநாடுகளுடன் போட்டியிட நாம் தயாராக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்துகிறார். தன்னிறைவான பொருளாதாரத்தை உருவாக்குவதே பிரதமர் வகுத்திருக்கும் திட்டத்தின அடிப்படை. பிரதமர் கூறிய தற்சார்பு இந்தியா திட்டத்துக்கு நாம் தயாராக வேண்டும்.

இதை ஒட்டிநிலக்கரி, தாது, மின் விநியோகம் அனு சக்தி உள்ளிட்ட 8 துறைகளில் கொள்கை சீர்த்திருத்தம் செய்யப்படும். ஒவ்வொரு அமைச்சகத்திலும் இனி ”திட்ட மேம்பாட்டு பிரிவு” புதிதாக உருவாக்கப்படும். தொழில் பூங்காக்களை உருவாக்குவதற்காக 5 லட்சம் ஹெக்டேர் நிலம் கையிருப்பில் உள்ளது. நாடு முழுக்க உள்ள தொழில் பூங்காக்கள் தரவரிசைப் படுத்தப்படும்.

சுரங்கத் துறையை மேம்படுத்த அதிநவீன தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படும். கனிமச் சுரங்கங்களின் குத்தகையை பிற நிறுவனங்களுக்கு மாற்றிக் கொள்வதற்கு அனுமதி. நிலக்கரி இறக்குமதியை குறைத்து உள்நாட்டு உற்பத்தியை பெருக்கி தன்னிறைவு பெறுவதே நமது இலக்கு.

500 கனிமச் சுரங்கங்கள் வெளிப்படையான முறையில் ஏலம் விடப்படும் அலுமினியம் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் பாக்சைட் & நிலக்கரிச் சுரங்கங்கள் ஒன்றாக ஏலம் விடப்படும். கனிம வளங்களை கண்டறிய தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்படும். நிலக்கரியை வெட்டி எடுப்பதற்காக கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50,000 கோடி நிதி ஒதுக்கீடு. வணிக ரீதியாக நிலக்கரி எடுப்பதற்கு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி. முதல் கட்டமாக 50 சுரங்கங்கள் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படுகின்றன.

கொஞ்சம் விரிவாக சொல்வதானால்

நிலக்கரித்துறை கட்டமைப்பை மேம்படுத்த 50,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

நிலக்கரி சுரங்கத்தில் இருந்து எடுத்துச் செல்லும் போக்குவரத்தை மேம்படுத்த 18,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

நாடு முழுவதும் 500 கனிமவள சுரங்கங்கள் வெளிப்படையாக ஏலம் விடப்படும்.

அலுமினிய துறையை மேம்படுத்த பாக்சைடு மற்றும் நிலக்கரி சுரங்கங்களுடன் இணைந்து ஏலம் விடப்படும்.

கனிமத்துறையில் தனியார் முதலீடுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வர்த்தக ரீதியாக வருவாய் தரும் சுரங்கப்பணிகளில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்கு முன்பே இலக்கை எட்டும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

பாதுகாப்புத்துறை தொடர்பான அறிவிப்புகள்:

ராணுவத்தளவாட உற்பத்தியில் அந்நிய முதலீடு 49% இருந்து 74% ஆக உயர்த்தப்படும்.

ராணுவத் தளவாட உற்பத்தியில் மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ராணுவ தளவாட உற்பத்தி ஆலைகளை இணைத்து தனி அமைப்பு உருவாக்கப்படும்.

சில குறிப்பிட்ட வகை ஆயுதங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுகிறது.

ராணுவ உற்பத்தி தொழிற்சாலைகள் பெருநிறுவனங்களாக மாற்றப்படும்.

விமானத்துறை தொடர்பான அறிவிப்புகள்:

விமானப் போக்குவரத்து செலவீனங்களை 1000 கோடி ரூபாய் வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

விமான நிலையங்களை மேம்படுத்த 2300 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

நாட்டில் மேலும் 6 விமான நிலையங்கள் தனியார் மயமாக்கப்படும்.

தனியார் பங்களிப்புடன் சர்வதேச தரத்தில் கூடுதல் விமானநிலையங்கள் ஏற்படுத்தப்படும்

விமான பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு மையமாக இந்தியா திகழ நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தியாவில் விமான பராமரிப்பு கட்டணம் விரைவில் குறைக்கப்படும்.

ராக்கெட் ஏவுதல், செயற்கைகோள் தயாரிப்பு போன்ற விண்வெளித்துறை செயல்பாடுகளில் தனியாருக்கு அனுமதி அளிக்கப்படும்.

இந்தியாவின் விண்வெளிப் பாதை பயன்பாட்டை எளிதாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படும்.

யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும்.

சேவையில் குறைபாடு இருந்தால் மின் வினியோக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.