October 22, 2021

நிர்மலா தேவி வழக்கு விசாரணைக்குத் தடை!- ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி

தமிழக கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக அருப்புக் கோட்டை பேராசிரியை நிர்மலா தேவிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு ஐகோர்ட் மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நடக்கும்வழக்கில் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பலருக்கு தொடர்பிருப்பதாகவும், அவர்கள் பெயர்கள் வழக்கில் சேர்க்கப்படவில்லை என்றும் மனுதாரர் தெரிவித்திருந்தார். நிர்மலாதேவி யாருக்காக மாணவிகளிடம் அவ்வாறு பேசினார் என்பது குறித்து விசாரணை நடத்தப்படவில்லை என்று மனு வில் கூறப்பட்டிருந்தது. உயரதிகாரிகள் எனும் ஒற்றை வார்த்தையில் சுருக்கிவிடும் காவல்துறை அவர்கள் யார் என விசாரிக்கவில்லை என்றும், உயர்கல்வித்துறை அமைச்சர், செயலர், பல்கலைக்கழக வேந்தர், துணைவேந்தர், பதிவாளர் என அனைவரும் உயரதிகாரிகள் பட்டியலில் வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சி.பி.சி.ஐ.டி. போலீசார் நியாயமாக விசாரிக்காமல் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் எனவே வழக்கை சிபிஐக்கு மாற்றவும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கவும் கோரப்பட்டிருந்தது.

வழக்கை முறையாக விசாரிக்காமல் மூவரை மட்டுமே விசாரித்து சி.பி.சி.ஐ.டி. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பதாக தெரிவித்த நீதிபதிகள், கொலைக் குற்றவாளிகளுக்கு கூட ஜாமீன் வழங்கப்படும் நிலையில் நிர்மலா தேவி ஜாமீனை எதிர்ப்பது ஏன்? என்றும், அவர் சூப்பர் குற்றவாளியா ? என்றும் கேள்வி எழுப்பினர்.

அவருக்கு ஜாமீன் வழங்க அச்சமா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் எதிர்ப்பை பார்க்கும் போது பெரிய இடத்து தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுவது இயற்கை என்றனர்.

வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள் தமிழக அரசு, சி.பி.ஐ., சி.பி.சி.ஐ.டி., நிர்மலாதேவி உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 18-க்கு ஒத்திவைத்தனர்.