டெல்லி நிர்பயா வழக்கு ; நாலு பேருக்கு தூக்கு – சுப்ரீம் கோர்ட் உறுதி!

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ந்தேதி நிர்பயா என்ற மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். 6 பேர் கும்பல் அரங்கேற்றிய இந்த அதிர்ச்சி சம்பவம் நாடு முழுவதும் பெரும் போராட்டங்களுக்கு வித்திட்டது. இதில் தொடர்புடைய ராம்சிங் என்பவர் டெல்லி சிறையில் தற்கொலை செய்து கொண்ட நிலையில், மற்றொரு இளம் குற்றவாளி 3 ஆண்டு தண்டனைக்குப்பின் விடுவிக்கப்பட்டார். மீதமுள்ள 4 பேருக்கு விசாரணை கோர்ட்டு மரண தண்டனை விதித்தது. இதை டெல்லி ஐகோர்ட்டும் கடந்த 2014-ம் ஆண்டு உறுதி செய்தது.

nirbaya may 5

இந்த தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.பானுமதி, அசோக் பூஷன் ஆகியோரை கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. இதில் விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், குற்றவாளிகள் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் 4 பேரின் மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட் இன்று உறுதி செய்துள்ளது. தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் ஆர்.பானுமதி ஆகியோர் கொண்ட அமர்வு குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர் அப்போது நீதிபதிகள், “இந்த வழக்கு அரிதினும் அரிதானது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஏற்பட்ட கடுமையான காயங்களையும், இந்தக் குற்றம் நிகழ்த்தப்பட்ட கொடூரமான முறையையும் கருத்தில் கொண்டு கீழ் நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்கிறது. குற்றவாளிகளுக்கு கருணை காட்டுவது என்ற வாதத்துக்கே இடமில்லை. குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை இந்த நீதிமன்றம் உறுதி செய்கிறது” என்றனர்.

நீதிபதி தீபக் மிஸ்ரா கூறும்போது, “இந்த வழக்கில் சிசிடிவி ஆதாரம் வலுவான சாட்சியாக இருக்கிறது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் மரண வாக்குமூலம் கிரிமினல் சதியை உறுதிப்படுத்தியுள்ளது. எனவே கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்கிறோம்” என்றார்.

இத்தீர்ப்பு குறித்து நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி கூறும்போது, “எங்கள் வாழ்க்கையின் கடினமான காலகட்டத்தில் எங்களுக்குத் துணை நின்ற அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் மகளை இழந்துவிட்டாலும், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது ஆறுதலாக இருக்கிறது. இனி, எங்கள் மகளைப் போல் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கு நீதி கிடைக்க தொடர்ந்து போராடுவோம்” என்றார்.

நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியபோது நிர்பயாவின் பெற்றோர் ஆஷா தேவியும் பத்ரி சிங்கும் எழுந்து நின்று கைதட்டி தங்கள் வரவேற்ப்பைத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.