நிர்பயா நிதியத்தில் இருந்து ரூ.2,900 கோடி அனுமதி: சென்னை பயனடையும்?

நிர்பயா நிதியத்தில் இருந்து ரூ.2,900 கோடி அனுமதி: சென்னை  பயனடையும்?

பெண்களின் பாதுகாப்புக்காக ஒதுக் கப்படும், 1,000 கோடி ரூபாய், ‘நிர்பயா’ நிதி யிலிருந்து, தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, ஒரு பைசா கூட செலவு செய்யப்படாத நிலையில் அந்நிதியில் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான ரூ.2,900 கோடி மதிப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்மூலம் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட 8 நகரங்கள் பயன் அடையும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லியில், 2012 டிசம்பரில், மருத்துவ மாணவி ஒருவர், ஓடும் பேருந்தில், ஆறு பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்தார். இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, 2013 – 14ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த ‘நிர்பயா நிதி’ என்ற பெயரில்,1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக அறிவித்தது. ஆனால் அந்நிதியி லிருந்து எந்த பணிகளும் மேற்கொள்ளப்பட வில்லை.

பின்னர் நரேந்திர மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி,2014ல் நடந்த லோக்சபா தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்தது. இந்த அரசு, 2014 – 15, 2015 – 16 ஆண்டுகளில் தாக்கல் செய்த பட்ஜெட் களிலும், நிர்பயா நிதிக்கு, 1,000 கோடி ஒதுக்கப்படு வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அந்த நிதியிலிருந்து ஒரு பைசா கூட செலவழிக்கப் படவில்லை. பார்லிமென்டில் மத்திய அரசு தாக்கல் செய்த, 2015 – 16ம் ஆண்டுக்கான நிதியில், இரண்டு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

ரயில், பேருந்து போன்ற பொது போக்குவரத்தில், பெண்களின் பாதுகாப்பை வலுப் படுத்த மத்திய தரை வழி போக்குவரத்து துறை அமைச்சகத்தின் கீழ், 653 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு திட்டமும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ், 79.6 கோடி ரூபாயில், நிர்பயா திட்டமும் செயல் படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த திட்டங்கள் இன்னும் அறிவிக்கப்பட்ட நிலையில் தான் உள்ளன. அதனால், மூன்று நிதி ஆண்டுகளாக நிர்பயா நிதிக்கு ஒதுக்கப் பட்ட தொகை, எந்த செலவும் செய்யப் படாமல் அப்படியே உள்ளது. இதனிடையேதான் இந்த நிர்பயா நிதியம் மூலம் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான ரூ.2,919.55 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை செயலாளர் தலைமையிலான நிர்வாக குழு நேற்று அனுமதி வழங்கியது. இதன் மூலம் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத், லக்னோ ஆகிய 8 நகரங்கள் பயன் அடையும்.

டெல்லியில் ரூ.663.67 கோடியில் வீடியோ கண்காணிப்பு, குற்றவாளிகளின் முகங்களை அடையாளம் காணுதல் உள்ளிட்ட பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. மும்பையில் ரூ.252 கோடியில் வீடியோ கண்காணிப்பு உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதேபோல கொல்கத்தாவில் ரூ.181.32 கோடியில் மகளிர் போலீஸ் நிலையங்களை மேம்படுத்துவது உள்ளிட்ட திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. பெங்களூருவில் ரூ.667 கோடியில் மகளிர் போலீஸ் புறநகர் மையங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்பட உள்ளன. இதேபோல சென்னை, ஹைதராபாத், லக்னோ, அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களிலும் பெண்களின் பாதுகாப்புக்காக பல்வேறு திட்டங்கள் அமல் செய்யப்பட உள்ளன. அதே சமயம் கடந்த 2013 முதல் 2017 வரையிலான காலத்தில் நிர்பயா நிதியத்துக்கு மத்திய அரசு தரப்பில் ரூ.3,100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

டெயில் பீஸ்:

இதனிடையே கடந்த 2015ஆம் ஆண்டில் நம் தமிழகத்தில் மட்டுமே 421 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளன. 1,361 பாலியல் துன்புறுத்தல் வழக்குகளும், 909 பின்தொடரல் வழக்குகளும், 65 வரதட்சணை மரணங்கள் தொடர்பான வழக்குகளும் பதிவாகியுள்ளன. ஆனால் இதுவரை தமிழக அரசு, மத்திய அரசிடம் நிர்பயா திட்டத்தில் இருந்து நிதியை ஒதுக்கும்படி கேட்கவேயில்லை. இந்த நிதியை எவ்வாறு செலவிடுவது என்பது தொடர்பாக தனது கருத்துகளைக்கூட தமிழக அரசு தெரிவிக்கவில்லை என்பதுதான் கொடுமை.

Related Posts

error: Content is protected !!