November 29, 2021

சுப்ரீம் கோர்ட்டில் மூன்று பெண் நீதிபதிகள் உட்பட 9 நீதிபதிகளும் பதவியேற்பு!

சுப்ரீம்கோர்ட்டில் தற்போது 10 நீதிபதி பதவியிடங்கள் காலியாக உள்ள நிலையில், 3 பெண்கள் உள்பட 9 பேரை புதிய நீதிபதிகளாக நியமிக்குமாறு தலைமை நீதிபதி எம்.வி.ரமணா தலைமையிலான கொலீஜியம் இந்திய அரசுக்குக் கடந்த வாரம் பரிந்துரைத்திருந்தது. அந்தப் பரிந்துரையை ஏற்ற இந்திய சட்டத் துறை அமைச்சகம், புதிய நீதிபதிகளின் நியமனத்தை உறுதி செய்து அதிகாரபூா்வ அறிவிக்கையை வியாழக்கிழமை வெளியிட்டது. அவர்களது நியமனக் கடிதத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்டார். இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் உள்ள அரங்கில், இன்று காலை 10.00 மணி அளவில் தலைமை நீதிபதி எம்.வி.ரமணா 3 பெண் நீதிபதிகள் உள்பட புதிய நீதிபதிகள் 9 பேருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

அதன்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த சென்னை ஐகோர்ட் நீதிபதியாக இருந்த எம்.எம்.சுந்தரேஷ், கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த அபய் ஸ்ரீநிவாஸ் ஒகா, குஜராத் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த விக்ரம் நாத், சிக்கிம் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த ஜிதேந்திர குமார் மகேஷ்வரி, கேரள ஐகோர்ட் நீதிபதி சி.டி.ரவிக்குமார் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டின் புதிய நீதிபதிகளாக பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர். மேலும்‌, சுப்ரீம் கோர்ட் வழக்குரைஞர்கள்‌ சங்கத்திலிருந்து நேரடி நியமன அடிப்படையில்‌ நியமிக்கப்பட்ட மூத்த வழக்குரைஞரும்‌ முன்னாள்‌ அரசு கூடுதல்‌ தலைமை வழக்குரைஞருமான பி.எஸ்‌.நரசிம்மாவும் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார்.

இன்று 3 பெண் நீதிபதிகளும் புதிய நீதிபதிகளாக இன்று பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களில் கா்நாடக ஐகோர்ட் நீதிபதியாக இருந்த பி.வி. நாகரத்னா, தெலங்கானா ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த ஹிமா கோலி, குஜராத் ஐகோர்ட் நீதிபதியாக இருந்த பெலா எம்.திரிவேதி ஆகியோரும் அடங்குவர்.

சுப்ரீம் கோர்ட்டில் தற்போது இந்திரா பானா்ஜி மட்டுமே பெண் நீதிபதியாக உள்ள நிலையில், புதிதாக மூன்று பெண் நீதிபதிகள் பதவி ஏற்றதை அடுத்து, சுப்ரீம் கோர்ட் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 4-ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 3 பெண் நீதிபதிகள் உள்ளிட்ட 9 நீதிபதிகள் ஒரே நேரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் பதவி ஏற்பது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது. மேலும் சுப்ரீம் கோர்ட்டில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்து. தற்போது ஒரு நீதிபதி பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது..