ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை திறக்க அனுமதி! – ஆனால் உற்பத்திக்கு நோ பர்மிஷன்!

ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை திறக்க அனுமதி! – ஆனால் உற்பத்திக்கு நோ பர்மிஷன்!

தூத்துக்குடி ஆட்சியரால் மூடி சீல் வைக்கப்பட்ட ஸ்டெர்லைட் காப்பர் ஆலையின் நிர்வாக பணி களை மேற்கொள்ள வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று உத்தரவிட்டது. அதே சமயம் ஆலையில் உற்பத்தியை துவக்க அனுமதி அளிக்க முடியாது என தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்தது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் காப்பர் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த மே 22ம் தேதி நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதை தொடர்ந்து கடந்த மே மாதம் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடியது. ஆலை நிரந்தரமாக மூடப்படுவதாக அரசாணையும் வெளியிடப்பட்டது. தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து, மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிடக் கோரி வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது.

அதேசமயம் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கை விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் கிடையாது. எனவே வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஏ.கே. கோயல் தலைமையிலான அமர்வு முன் இந்த 2 மனுக்களும் இன்று விசாரணைக்கு வந்தன.

வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்ற தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் வேதாந்தா நிறுவனத்தின் மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்வு ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள நிர்வாக பணிகளை மேற்கொள்ள வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியது. அதேசமயம் ஆலையின் உற்பத்தி பிரிவை பயன்படுத்த பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளிக்க மறுத்துவிட்டது.

இந்த உத்தரவு சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதை மாவட்ட ஆட்சியர் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.மேலும் ஸ்டெர்லைட் ஆலையால் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள மாசு குறித்து 10 நாட்களுக்குள் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. விசாரணை முடிவில் இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 20ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்

error: Content is protected !!