October 4, 2022

‘என்.ஜி.கே’ விமர்சனம்!

அரசியல் என்பது மனித வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத தத்துவம். சமுதாய வாழ்க்கையில், அமைதியை தருவதற்கும் பலர் கூடி வாழ்வதற்கும் பொருளியல், ஒழுங்கியல் முறைகளுக்கும் அரசியலே வழி வகுக்கிறது. அதே சமயம் . படித்தவர்கள், சிந்தனையாளர்கள் என அத்தனை பேரும் அரசியல் என்றாலே மூக்கை பிடித்து கொண்டு ”அரசியல் என்னும் சாக்கடை நாறுகிறதே” என ஒதுங்கி சென்றால் ஒரு பயனும் இல்லை. அந்த சாக்கடைக்குள் கால் வைத்து இறங்கி அதில் படிந்து கிடக்கும் அழுக்குகளை அப்புறப்படுத்தினால் ஒழிய நாற்றம் தீரப்போவது இல்லை என்று யாரோ சொன்ன சீரிய கருத்தை தன் பாணியில் சொல்ல முயன்றிருக்கிறார் செல்வராகவன்.

சூர்யா முதுகலைப் பட்டம் பெற்றவர். ஆனால் கை நிறைய சம்பளத்துடன் கிடைத்த பெரிய வேலையை விட்டு விட்டு தன் ஊரில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இதனால் பாதிக்கப்படும் உள்ளூர் வியாபாரிகள் சூர்யாவுக்கு மிரட்டல் கொடுத்து அதற்கு சரிப்பட்டு வராத சூர்யா & அவர் சார்ந்தோரின் நில புலன்களை நாசம் செய்து விடுகிறார்கள். இந்த பிரச்சனையை தீர்க்க சூர்யா தன் தொகுதி எம்எல்ஏ-வைப் போய் பார்த்து, மிரண்டு, மயங்கி அவரிடமே தொண்டனாக சேர்ந்து அரசியலை கற்றுக் தேர்ந்து சி .எம். ஆகி விடுகிறார் என்பதுதான் படத்தின் கதை.

சூர்யா எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் பற்களைக் கடித்தப்படி மிடுக்குக் காட்டி விரைப்பாக இருப்பதே நடிப்பு என்று நம்பி விடுவார், அப்பேர்பட்டவரை ஒரு கட்சியில் அடிமட்ட தொண்டனாக்கி அவரை கக்கூஸ் கழுவ வைத்து, ஃபிம்ப்- மாதிரி வேலையெல்லாம் செய்து முன்னேறுவது போல் காட்டியதெல்லாம் செல்வராகவன் பாலிடிக்ஸ். ஆனால் பல இடங்களில் தன் கை விரல்களை விட மிகைபட புடைக்க வைத்து ஓவர் ஆக்டிங் செய்து  எனெர்ஜியை வேஸ்ட் செய்துள்ளார் சூர்யா.

மனைவி ரோலில் வரும் சாய் பல்லவியின் மோப்ப சக்தி அபாரம்..பெரும்பாலான காட்சிகளில் சாய்பல்லவி செல்வராகவனாகவே தோன்றுகிறார். கார்பரேட் பி ஆர் – ஆக வரும் ரகுல் பிரீத்தி கேரக்டர் நைஸ்.  அதிலும் சூர்யாவிற்கும் ரகுல் பிரீத் சிங்கிற்கும் ரிலேசன்ஷிப்பை டீடெய்லாகச் சொல்லாமல் கடந்து விடுவது அருமை. மற்ற ஆர்டிஸ்ட்கள் எல்லோரும் முகம் தெரிந்தவர்கள்.. அவ்வளவே.

பிரவின் கே எல் படத் தொகுப்பில் ஏனோ உரிய கவனம் செலுத்தவில்லை என்பது அப்படமாக தெரிகிறது, அதி சமயம் சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு நீட்! யுவன் சங்கர் ராஜாவின் “நடக்குற வழியில நரிகள பார்த்தா …” , “அன்பே பேரன்பே …உள்ளிட்ட பாடல்கள் இசையும் பின்னணி இசையும் பெரும்பலம் .

சுமார் இரண்டு வருடங்களை முழுங்கி எடுத்து முடித்துள்ள செல்வராகவன்  இந்தப் படத்தில் சமீப கால அரசியல் போக்கு பலவற்றை பயன்படுத்தி தியேட்டரை கலகலக்க வைத்துள்ளார் . ஆனால் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம் என்று சகலரையும் முணுமுணுக்க வைத்து விட்டார் .

அதையும் செல்வராகவன் தன் ஹீரோ சூர்யா மூலமாக ‘கத்துக்கறோமுங்க’ என்ற ஒற்றைச் சொல்லால் சமாளித்து விடுவதும் சிறப்பு.

மார்க் 3 / 5