March 25, 2023

தமிழகத்தில் வரும் மார்ச் 10ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்!

போலியோவை இந்தியாவை விட்டு நாம் துரத்தி ஏழு ஆண்டுகள் கடந்தோடி விட்டன. ஆனாலும் நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஆப்பிரிக்க நாடான நைஜீரியா வில் போலியோ நோய் இன்னும் உயிர்ப்புடன் இருந்ததால், நாடு விட்டு நாடு விமானங்கள் மூலம் பயணம் செய்பவர்களால் அந்த கிருமிகள் நமக்கு கடத்தப்பட வாய்ப்பு இருப்பதாலும் நாம் இன்னும் வருடம் ஒருமுறை தரும் Pulse Polio Immunisation சொட்டு மருந்து தரும் நாட்களை கடைபிடித்து வருகிறோம்.

இதையொட்டி தமிழகத்தில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் 2019, மார்ச் மாதம் 10ந் தேதி நடைபெற உள்ளது. 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

இம் முகாம் பற்றி தமிழக அரசின் செய்தித் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:

தமிழ்நாட்டில் 43,051 சொட்டு மருந்து மையங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் / அரசு மருத்துவமனைகள்/அங்கன்வாடி மையங்கள்/ சத்துணவு மையங்கள்/ பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்களில் பிரத்தியேகமாக நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

பொதுமக்கள் கவனத்தில் வைத்துக்கொள்ளவேண்டிய தகவல்கள்:

1. சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும்.

2. அனைத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் 10-03-2019 (ஞாயிற்றுக்கிழமை) அன்று போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட வேண்டும்.

3. தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாட்களில் மீண்டும் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும்.

4. புதிதாக பிறந்த குழந்தைகளுக்கும் (New Borns) முகாம் நாட்களில் சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும்.

5. சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படுகிறது. இது விடுபடும் குழந்தைகளைக் கண்டறிய உதவுகிறது.

6. முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்க தனியார் மருத்துவர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

7. இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

பயணம் மேற்கொள்ளும் மற்றும் தொலைதூர பகுதி வாழ் குழந்தைகளுக்கு சிறப்பு ஏற்பாடு:

தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நாளில் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், சோதனைச் சாவடிகளில் / சுங்கச் சாவடிகளில், விமான நிலையங்களில் 1652 பயணவழி மையங்கள் (Transit Booth) நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

1000 நடமாடும் குழுக்கள் மூலமாக தொலை தூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

சொட்டு மருந்து முகாமில் ஈடுபடும் பணியாளர்கள்

10-03-2019 அன்று போலியோ சொட்டு மருந்து முகாமில் சுமார் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுகிறார்கள். யுனிசெஃப், உலக சுகாதார நிறுவனம் மற்றும் பன்னாட்டு ரோட்டரி சங்கங்கள் போலியோ ஒழிப்பு திட்டத்திற்கு உறுதுணையாக உள்ளன.

தமிழ்நாடு போலியோ இல்லாத 15-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

போலியோ சொட்டு மருந்து முகாம்கள் தமிழ்நாட்டில் சிறப்பாக நடைபெறுவதால் தமிழ் நாடு 15-வது வருடமாக போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளது. இந்த நிலையை தக்க வைத்துக் கொள்ளவும், குழந்தைகளை போலியோ வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதும் மிகவும் இன்றியமையாததாகும். பெற்றோர்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

“இந்த பூமியிலிருந்து போலியோ நோயை முற்றிலும் ஒழிக்க அனைவரும் கைகோர்த்து செயல்படுவோம்”

இவ்வாறு, தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.