நியூயார்க் மாண்டரின் ஓரியண்டல் பங்குகளை வாங்கும் ரிலையன்ஸ்!

நியூயார்க்கில் உள்ள மாண்டரின் ஓரியண்டல் ஹோட்டலின் 73.37 சதவீத பங்குகளை, 98.15 மில்லியன் டாலர் முதலீட்டில் வாங்க உள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.2022ம் ஆண்டு மார்ச் இறுதிக்குள் பரிவர்த்தனைகள் முழுமை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்றுள்ள மாண்டரின் ஓரியண்டல் ஹோட்டல், 2018ம் ஆண்டில் 115 மில்லியன் டாலர் வருவாயையும் 2019ம் ஆண்டில் 113 மில்லியன் டாலரும் 2020ம் ஆண்டில் 15 மில்லியன் டாலரும் வருவாய் ஈட்டியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள மாண்டரின் ஓரியண்டல் ஹோட்டல், அந் நாட்டின் முன்னணி சொகுசு ஹோட்டல்களில் ஒன்றாகும். உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ள இந்த ஹோட்டல் கடந்த 2003ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. இந்த ஹோட்டலில் 248 அறைகள், நடன விடுதிகள், ஸ்பா மற்றும் மதுபானக் கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம் பெற்றுள்ளன. அமெரிக்காவின் பிரபல தலைவர்கள், ஹாலிவுட் நட்சத்திரங்கள் இந்த ஹோட்டலுக்கு அடிக்கடி வருவது வழக்கம் . சர்வதேச அளவிலான ‘போர்ப்ஸ் பைவ் ஸ்டார் ஹோட்டல்’, ‘போர்ப்ஸ் பைவ் ஸ்டார் ஸ்பா’ உள்ளிட்ட பல விருதுகளை இந்த ஹோட்டல் வென்றுள்ளது.

இந்த நிலையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், மாண்டரின் ஓரியண்டல் ஹோட்டலின் 73.37 சதவீத பங்குகளை வாங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த பங்குகளை 98.15 மில்லியன் டாலர் முதலீட்டில் வாங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.