September 18, 2021

சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டம்!-

அண்டை நாடான சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வெகு கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. சீனப் புத்தாண்டு முறை சந்திரமுறை புத்தாண்டு என அழைக்கப்படுகிறது. அதாவது சந்திரன் நாள்காட்டி முறையை பயன்படுத்துகிறார்கள். 12 ராசிகளின் அடிப்படையில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை எலி, குரங்கு, ஆடு, குதிரை என புத்தாண்டு அடையாளப்படுத்தப்படுகிறது. அவ்வகையில், இன்று பிறந்த 2017-ம் புத்தாண்டை சீன மக்கள் சேவல் ஆண்டாக கொண்டாடி வருகின்றனர். அத்துடன் அறுவடை காலம் முடிந்து இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாகவும் சீன மக்கள் புத்தாண்டை கொண்டாடுவதால் ஒருவாரத்துக்கு பொது விடுமுறை அளிக்கப்படுவது இங்கு வழக்கமாக உள்ளது.

china jan 28

சிம்பிளாக சொல்வதானால் சீனர்களுக்கு சீனப்புத்தாண்டே மிகப்பெரிய பண்டிகை. அதனால் நாம் நம் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதை இந்திய புத்தாண்டு என்பது போல் நினைப்பார்கள். தீபாவளி என்றால் அவர்களைப் பொருத்து இந்திய புத்தாண்டு. ஆண்டுமுழுவதும் சீனர்கள் காத்திருப்பது இந்த புத்தாண்டு விழாவிற்குத்தான். சீனப்புத்தாண்டின் முதல் நாள் போது சீனர்கள் குளிக்க மாட்டார்களாம், அதிர்ஷ்ட தேவதை அழுக்கோடு சென்று விடும் என்ற நம்பிக்கை போல இருக்கிறது. சாமிக்கு நிறையவே பயப்ப்படுவார்கள். சூதாட்டம், லாட்டரி போன்றவற்றில் மிகுந்து செலவளிப்பார்கள். புத்தாண்டுக்கு முன்பே பழைய சாமான்களை எடுத்து வெளியில் போட்டுவிட்டு புதிதாக வாங்கிக் கொள்வார்கள்.

சீனப்புத்தாண்டின் மற்றொரு சிறப்பு அம்சம், சீனப்புத்தாண்டை மதச்சார்பற்று அனைத்து சீனர்களும் கொண்டாடுவார்கள். வாழ்த்துகளை பரிமாரிக் கொள்வதும் சிவப்பு பையில் ( ரெட் பாகெட்) புதிய பணத்தாள்களைப் போட்டு பரிசளிக்கும் வழக்கம் முதன்மையாக கடைபிடிக்கப்படுகிறது. அலுவலகம் போன்ற இடங்களில் மேலாளர்களுக்கு ஆரஞ்சு பழங்களை பரிசளிப்பார்கள்.

இப்புத்தாண்டின் போது ‘சீனா டவுன்’ எனப்படும் சீனர்களின் பொருள்கள் விற்கும் இடங்கள் அவை எந்த நாட்டில் இருந்தாலும் நன்றாக அலங்காரம் செய்து வைத்திருப்பார்கள்.இந்த விடுமுறையை பயன்படுத்தி, உற்றார், உறவினர்கள், நண்பர்களை சந்திக்க வெளியூர்களுக்கு சென்றும், பிரசித்தி பெற்ற சுற்றுலா தளங்களை பார்வையிட்டும் சீன மக்கள் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது வழக்கம்.

அவ்வகையில் இன்று பிறந்த சேவல் ஆண்டையொட்டி, நண்பர்கள், உறவினர்களுக்கு தடபுடலான விருந்து அளித்தும், ஆடல், பாடல் என மகிழ்ச்சியுடனும் மக்கள் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறி வருகின்றனர்.தலைநகர் பீஜிங் உள்ளிட்ட நாட்டின் முக்கிய பகுதிகளில் உள்ள கடை வீதிகள் மின் அலங்காரத்தில் ஜொலிக்கின்றன. வாழ்த்து அட்டைகள், இனிப்பு வகைகள், மது மற்றும் பட்டாசு விற்பனை அமோக நடைபெற்று வருகிறது.

சீனாவின் பிரபல சமூக வலைத்தளமான ‘வீய்போ’ மூலமாகவும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்கின்றனர். புத்தாண்டையொட்டி, புத்தாடைகளுடன் எடுத்துகொண்ட ‘செல்பி’ புகைப்படங்கள் அதிகமாக பதிவிடப்படுகின்றன.