November 29, 2021

தமிழகம் முழுவதும் புதிய வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு!

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்வதற்காக வரும் 4, 5, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாமும் நடத்தப்படவுள்ளது.

சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்களார் பட்டியலை பெருநகர மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டார். புதிய வரைவு வாக்காளர்கள் பட்டியல்படி, சென்னை மாவட்டத்தில் 38 லட்சத்து 88 ஆயிரத்து 673 வாக்காளர்கள் உள்ளதாகவும், 32 ஆயிரத்து 362 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.அதிகபட்சமாக, வேளச்சேரி தொகுதியில் 3 லட்சத்து 3 ஆயிரத்து 909 வாக்காளர்கள் உள்ளனர் என்றும், குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில், ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 620 வாக்காளர்கள் உள்ளனர் என்று ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.

சென்னையில் மொத்தமாக 38 லட்சத்து 88 ஆயிரத்து 673 பேர் வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

ஆண் வாக்காளர்கள் 19 லட்சத்து 15 ஆயிரத்து 718 பேர்,

பெண் வாக்காளர்கள் 19 லட்சத்து 71 ஆயிரத்து 966 பேர்,

மூன்றாம் பாலித்தவர்கள் 989 பேர்.

வேளாச்சேரி தொகுதி

16 சட்டமன்ற தொகுதிகளில் வேளச்சேரி அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக உள்ளது.

வேளச்சேரி தொகுதியில் 3 லட்சத்து 3 ஆயிரத்து 909 வாக்காளர்கள் உள்ளனர். குறைவான வாக்காளர்களை கொண்ட சட்டமன்ற தொகுதியாக துறைமுகம் தொகுதி உள்ளது. அங்கு, 1 லட்சத்து 69 ஆயிரத்து 620 பேர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது வெளியிட்ட வாக்காளர் பட்டியலை ஒப்பிடும்போது, 32,362 பேர் சென்னையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இரட்டைபதிவு, இறப்பு என 9, 745 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க படிவம் 6, பெயர்களை நீக்கம் செய்திட படிவம் 7 , பட்டியலில் உள்ள விவரங்களில் திருத்தம் செய்திட படிவம் 8, அதே சட்டப்பேரவைத் தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்திட படிவம் 8A பூர்த்தி செய்து அளிக்கலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.23.12.2019 முதல் 22.01.2020 வரை வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களிலும் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி உதவி ஆணையர் அலுவலகங்களிலும் அலுவலக வேலை நாட்களில் மனுக்களைப் பெற்று பூர்த்தி செய்து அளித்திடலாம்.

மேலும் 4.1.2020, 5.1.2020, 11.1.2020 மற்றும் 12.1.2020 ஆகிய 4 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை களிலும் வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களிலும் உரிய படிவங்கள் பெற்று பூர்த்தி செய்து அளித்திடலாம்.பெறப்படும் படிவங்கள் மீது உரிய விசாரணைகள் மேற்கொண்டு இறுதி வாக்காளர் பட்டியல் 14.02.2020 அன்று வெளியிடப்படும்.