January 28, 2022

புத்தம் புதிய கருத்தடை மருந்து, மாத்திரை! – மத்திய அரசு அறிமுகம்!

நம் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் மக்கள் தொகையின் போக்கை கண்டு அரசு மிரண்டு போய் கிடக்கிறது. இந்நாட்டு மக்களும் அதற்கு மரியாதை தரும் விதமாக ஒரு குழந்தை வாழ்க்கைக்கு பழக்கப்பட்டு விட்டனர். அதனால் சீனாவில் இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள் என்ற அரசின் கோரிக்கையை கூட மக்கள் கண்டு கொள்ளவில்லை. ஆனால் பல நாடுகளில் குழந்தை பிறப்பு குறைந்து வருவதால் தங்கள் நாட்டின் மக்கள் தொகை குறைந்து விடுமோ என்று அரசுகள் அஞ்ச ஆரம்பித்து விட்டன. ஜப்பான் நாட்டில் ஒரு குழந்தை வாழ்க்கை முறை மட்டுமல்ல ஜப்பானியர்கள் பலருக்கு திருமண வாழ்க்கையில் ஆர்வம் இல்லை. அதனால் அங்கு பலர் திருமணம் செய்து கொள்வதில்லை. அதனால் ஜப்பான் அரசு குழந்தை பிறப்பை அதிகரிக்க பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்ணுக்கு மட்டுமல்ல அவளது கணவனுக்கும் மாத கணக்கில் விடுமுறை அளிக்கப்படுகிறது.

ஸ்பெயின் நாட்டிலும் குழந்தை பிறப்பு குறைந்து வருகிறது. மக்கள் திருமணம், குடும்ப வாழ்க்கையில் ஆர்வம் காட்டவில்லை என்று அரசு வேதனைப்பட்டது. எனவே மக்களிடையே திருமண வாழ்க்கையில் ஆர்வம் ஏற்படுத்தவும், குழந்தை பிறப்பை அதிகரிக்கவும் ‘பாலியல் விவகாரத் துறை’ என்ற தனி அமைச்சகமே ஏற்படுத்தியுள்ளது. அதற்கு 2016ம் ஆண்டு எடெல்மிரா பரெய்ரா என்ற பெண்ணை அமைச்சராக நியமித்துள்ளார். பெண்களை அணுக வசதியாக பெண் அமைச்சராம். இதேபோல் நார்வே நாட்டிலும் குழந்தை பெற்றுக் கொள்ள வலியுறுத்துகிறது. பல்வேறு சலுைககளுடன் அந்த குழந்தைகளுக்கான கல்விச் செலவு வசதிகளை அரசே ஏற்கும் என்று அறிவித்துள்ளது.

மேலும் போர்ச்சுகல் நாட்டில் உள்ள அல்கொடிம் என்ற கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளில் மக்கள் தொகை வெகுவாக குறைந்து விட்டதாம். குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆர்வம் குறைந்தது மட்டுமல்ல. பிழைப்பு தேடி பலரும் வெளியூர்களுக்கு சென்று விட்டதும் கிராமத்தில் ஆட்கள் குறைய காரணம். அதனால் குழந்தை பெறுபவர்களுக்கு கிராம நிர்வாகம் தலா 5000யூரோ (ரூ.3.5லட்சம்) பரிசுப் பணம் தருகிறது. இப்படி ஜனத்தொகை குறைந்த பல நாடுகளில் குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்ணுக்கும், ஆணுக்கும் தலா 6மாதங்கள் பிரசவ விடுமுறை, குழந்தை வளர்ந்ததும் பள்ளி, கல்லூரி கட்டணங்கள், உடனடியாக பெரிய குடியிருப்பு ஒதுக்கீடு, பரிசுப்பணம் என பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளன. இந்நிலையில் நம் நாட்டில் புதிய கருத்தடை  மருந்துகளான ‘அந்தரா’ எனும் ஊசி மூலம் செலுத்தப்படும் மருந்தையும், ‘சஹாயா’ எனும் மாத்திரையையும் நேற்று (செப்டம்பர் 5) மத்திய உடல்நலம் மற்றும் குடும்ப நலத்துறை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

ஆம்.. கருத்தடை என்பது ஒரு பெண் கரு தரித்தலை செயற்பாடுகள், சாதனங்கள், மருந்துகள் மூலம் தடுக்கும் முறையாகும். குடும்பக் கட்டுப்பாட்டில் கருத்தடை முக்கிய பங்கு வகிக்கிறது. கருத்தடைக்கான பல வழிமுறைகள் இருக்கின்றன. இருப்பினும், மத்திய அரசு புதிதாக இரண்டு கருத்தடை சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போது மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, ஹரியானா, மேற்கு வங்கம், ஒடிசா, டெல்லி மற்றும் கோவா ஆகிய பத்து மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளிலும் இந்தக் கருத்தடை சாதனங்கள் இலவசமாகக் கிடைக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவை, பாதுகாப்பாகவும் மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். அதாவது, அந்தரா மருந்து மூன்று மாதங்களுக்கும், சஹாயா மருந்து ஒரு வாரத்துக்கும் பயனளிக்கக் கூடியவை. இது தம்பதியினர் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதைத் திட்டமிட உதவும்.

மத்திய அரசின் முன்முயற்சியான மிஷன் பரிவார் விக்கஸ் என்ற திட்டத்தின்கீழ் இந்த கருத்தரிப்பு சாதனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 44 சதவிகித மக்கள் தொகை கொண்ட 146 மாவட்டங்களில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டில் மொத்த கருவுறுதல் விகிதத்தை 2.1 ஆக குறைப்பதே மிஷன் பரிவார் விகாஸ் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதுகுறித்து அனைத்து மாநிலங்களிலும் உள்ள சுகாதாரப் பயிற்சியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது என அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது