October 19, 2021

திருவண்ணாமலையில் ஒரு புரட்சி

மலைகள், தமிழர்களுக்கு அறிவையும் அறிவு கனிந்த ஞானத்தையுமே எப்போதும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது. அறிவையும் ஞானத்தையும் மலைகளாக உருவகப் படுத்திக்கொண்டே இருக்கிறது, தமிழ்ச் சிந்தனை. ஆகப் பெரும் உயரம், அளக்கலாகா அகலம், நிமிர்ந்த தலையை வளைத்துக் கொடுத்து சமரசம் பண்ணிக் கொள்ளாத பெருமிதம், எத்தனை தூரம் இருந்தும் மலை காணப்படுமாறு இருத்தல் போல, தம் புகழால் உலகம் அறியப்படுமாறு இருக்கும் புகழ்ப் பெருமை, என்று மனித விழுமியங்களுக்கு உதாரணமாக இருப்பது மலை. மலைகளின் நகரம் திருவண்ணாமலை. மலைகள் தம் கரங்களை அகல விரித்து அக் கரங்களுக்குள் ஒரு ஊரைக் காத்துக்கொண்டிருக்கும் வியப்பு திருவண்ணாமலை. தமிழ் மரபில், ஆசான்கள் எனப்படும் ஆசியரியர்களுக்கு உதாரணம் சொல்லப்படுவது மலைளைத்தான்.

edi oct 18

‘மாணவனே! உன் ஆசிரியர் எப்படிப்பட்டவர் தெரியுமா? அந்த மலை மாதிரி நிரந்தரமானவர். வியப்பை ஏற்படுத்துபவர். பெருமையும் புகழும் மிக்க, அசைக்க முடியாதவர். எங்கிருப்பவரும் மலையைக் காணுமாறு இருக்கிறது மலை. அது மாதிரி உன் ஆசானும் எட்டுத் திக்கிலும் புகழ் கொண்டவர். அவர் உயர்வை நேசி.’ என்றே, மாணவர்களுக்கு அக்காலத்து இலக்கண ஆசிரியர்கள் அறிவுரை கூறுவார்கள். அத்துடன் நிறுத்திக்கொள்வதில்லை அப்பெரியோர்கள். கூடவே இப்படியும் சொல்வார்கள்.

‘மாணவனே! உன் ஆசிரியர்ப் பெருமகன் மாதிரி, அவரை விடவும் நீ பெரிய அறிஞனாக, உலகம் போற்றும் உத்தமனாக, எந்நாளும் உலகம் தலை நிமிர்ந்து உன்னைப் பார்க்கும் விதமாக, இந்த மலைபோல நீயும் விளங்குவாயாக’ ஆசிரியரையும் மாணவரையும் மலைபோல நம்பி ஒரு சமுதாயம் சொல்லி வைத்த இலக்கணம் இது:

இந்த இலக்கணத்துக்கு ஒரு இலக்கியமாக, வாழும் சாட்சியாக ஒரு நிகழ்ச்சி, கடந்த விஜயதசமி அன்று (11.10.16) திருவண்ணாமலையில் மிக அழகான பண்பாட்டு எழுச்சியாக ஒரு வரலாற்றை ஏற்படுத்தியது.இதை முன்னின்று சாதித்தவர், திருவண்ணாமலையில் கல்லூரிக் கல்விக் கலாச்சாரத்தில் பல முன் முயற்சிகளை எடுத்துப் பின்தங்கிய மாவட்டம் என்று சொல்லப்பட்ட திருவண்ணாமலையை, ஒரு முன்னேறிய மாவட்டமாக மாற்றிக்கொண்டிருக்கும் எஸ்.கே.பி. கல்விக் குழுமத்தின் முதல்வரும் முன்னவரும் ஆன திரு.எஸ்.கே.பி.கருணா அவர்கள் ஆவார். எஸ் கே பி வனிதா இன்டர்நேஷனல் ஸ்கூல், எஸ் கே பி வனிதா வித்யாலயா மெட்ரிகுலேஷன் ஸ்கூல் என்ற பெயர்களில் இரண்டு பள்ளிகள் அன்று தொடங்கப்பட்டன.

இவை எப்படிப்பட்ட பள்ளிக்கூடம்.?

குழந்தைகளை, வெறும் பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வுக்கு தயார் படுத்தி வெற்றியைத் தந்து அனுப்பிவைக்கும் பள்ளியாக மட்டு இப்பள்ளிகள் இருக்காது.மாறாக வழக்கமான கல்வியையும் தந்து, அதோடு மாணவர்களை அவர்களுக்குப் பிடித்த, அவர்கள் விரும்புகிற ஏதேனும் கலைப் பயிற்சியையும் இப் பள்ளிகள் தரப் போகின்றன. அதாவது மாணவர்கள் இசையில், நடனத்தில், கதையில், ஓவியத்தில், பேச்சில், விளையாட்டில் என்று அவர்கள் உடலும், உள்ளமும், ஆத்மாவும் எந்தத் திசையில் ஈடுபட்டாலும் அத்திசையிலேயே அவர்களைப் பயிற்சி தந்து மேல் நிலைக்குக் கொண்டுவர எஸ் கே பி குழுமம் பள்ளிகள் முன்வந்து, அதற்காகவே தொடங்கப்பட்டிருக்கின்றன.

வெறும் பள்ளிகள் படிப்பாளிகளை உருவாக்கும். எஸ் கே பி பள்ளிகள் படிப்போடு, பட்டத்தோடு மேன்மையான மனிதர்களையும் உருவாக்கும்.கலையும் இலக்கியமும் அன்பை, உறவை, சமூக உணர்வை, முன்னோர்கள் பெற்றோர்கள் மேல் மரியாதையை மாணவர்களாகிய இளம் மனிதர்களுக்கு கற்றுக் கொடுக்கும். மனிதர்களாக வாழ்வதன் மேன்மையை அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும்.

கல்விக் கூடம், செய்யக் கூடிய அதிகப் பட்சப் பணி, தொண்டு இதுவாகத்தான் இருக்கும்.

அதை எஸ் கே பி பண்ணிகள் சாதிக்கும்.

இதுவே இப்பள்ளிகளின் தோற்றக் காரணம்.

இது அபூர்வம் அல்லவா?

கடந்த 11.10.16 அன்று காலை நிகழ்ச்சி, ‘முதல் எழுத்து ஏடு தொடங்குதல்’ நிகழ்ச்சியாகத் தொடங்கியது.

தமிழின் மிகச் சிறந்த கவிஞர்களுள் ஒருவரான டாக்டர் சுமதி என்கிற தமிழச்சி தங்கபாண்டியன், புகழ்பெற்ற கர்நாடக இசைப்பாடகர் நித்யஸ்ரீ மகாதேவன், எழுத்தாளர் பிரபஞ்சன் ஆகியோர், வந்திருந்த நூற்றுக் கணக்கான குழந்தைகளை, ஒவ்வொருவராகத் தம் மடியில் அமரவைத்து அவர்கள் கைப்பிடித்து ‘அ’ என்ற நம் மொழியின் முதல் எழுத்தை, உயிர் எழுத்தை, பரப்பிய நெல்மணிகள் மேல் எழுத வைத்துக் குழந்தைகளின் கல்வியைத் தொடங்கி வைத்தார்கள்.

பெற்றோர்கள் இதில் காட்டிய உற்சாகம் அபிரிமிதமானது. மிகவும் மகிழ்ச்சி தந்த வரலாற்றுத் தருணம் அது. மட்டுமல்ல, தமிழ்க் கலாச்சாரத்தின் மறைந்து வரும் அற்புத நிகழ்வை மீட்டுக்கொணரும் முக்கியமான நிகழ்ச்சியும் அது. பின்னர், சம்பிரதாயமான தொடக்க விழா நிகழ்ந்தது. பள்ளிகளின் தாளாளர் எஸ் கே பி கருணா, பள்ளித் தோற்றத்துக்கான காரணத்தை மிக விரிவாக முன்வைத்தார்.

ஒரு மாற்றுச் சிந்தனை, மாற்றுப் பள்ளி கால் கொள்ள வேண்டிய அவசியத்தை மிகத் தெளிவாக அவர் முன் வைத்தார்.மறைந்து வரும் மானுடம் ஒளி பெற்று மீளக் கல்விப் புலத்தில் ஆற்ற வேண்டிய பணி எது என்பதை எடுத்துரைத்தார்.மிக அழகான பாடல்களை மரியாதைக்குரிய கலைஞர் நித்யஸ்ரீ பாட, மிக அர்த்தம் பொருந்திய ஆழமான கல்வி, பண்பாடு சார்ந்த உரையைத் தமிழச்சி தங்கபாண்டியன் வழங்கினார்.

எஸ் கே பி நிறுவனம், கல்வி மற்றும் கலாச்சாரப் புலத்தில் ஒரு பெரிய பாய்ச்சலை நிகழ்த்தி இருக்கிறது. அதாவது ஒரு புதிய வரலாற்றை நட்டு, நீரூற்றி இருக்கிறது. அது செழித்து வளரும். வளர வேண்டும்.

அந்த வளர்ச்சியே சரியான தமிழனை, சரியான இந்தியனை, சரியான உலக மனிதனை உருவாக்கும் அஸ்திவாரம் என்பதில் இரண்டு கருத்துக்கள் இருக்க முடியாது.எனக்கு நம்பிக்கை இருக்கிறது. யுத்த களத்தில்கூட புல் முளைத்திருக்கிறது. ஏன்? அதுவே இயற்கை நியதியும் நீதியும்.

– பிரபஞ்சன்