ஜப்பானில் புது பேரரசர் முடி சூட்டியதைத் தொடர்ந்து புது யுகம் தொடங்கியது!

ஜப்பானில் புது பேரரசர் முடி சூட்டியதைத் தொடர்ந்து  புது யுகம் தொடங்கியது!

ஜப்பானிய மன்னர்களுக்கு அரசியல் அதிகாரம் எதுவும் இல்லாதநிலையில், அவர்கள் தேசத்தின் அடையாளமாகப் பார்க்கப்படும் நிலையில் அந் நாட்டின் புதிய பேரரசராக,  இளவரசர் நாருஹிட்டோ முறைப்படி புதன்கிழமை முடி சூடினார்.

ஜப்பானின் 125-வது பேரரசராக இருந்தவரான,  அகிஹிட்டோ  செவ்வாய்க்கிழமை  பதவி விலகியதை அடுத்து  அவரின் மகனும் பட்டத்து இளவரசருமான நாருஹிட்டோ இப்போது  பொறுப்பேற்றிருக்கிறார். ஜப்பான் அரசகுடும்ப வரலாற்றில், கடந்த 200 வருடங்களில் அரச பதவியை துறந்த முதல் மன்னர் அகிஹிட்டோ.

85 வயதான  ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ வயோதிகம் மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக பதவி விலக விரும்புவதாக 2 ஆண்டுகளுக்கு முன் தெரிவித்திருந்தார். அதன்படி மன்னர் அகிஹிட்டோ 2019 ஏப்ரல் 30ம் தேதி பதவி விலகுவார் என்றும், மே 1ம் தேதி அவரது மகனும் பட்டத்து இளவரசருமான நாருஹிட்டோ (59) அடுத்த பேரரசராக முடிசூடுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

திட்டமிட்டப்படி  ஏப்ரல் 30ம் தேதியான செவ்வாய்க்கிழமை மன்னர் அகிஹிட்டோ பதவி விலகுவதற்கான சடங்குகளை டோக்கியோவில் உள்ள அரண்மனையில்துவக்கினார்கள். பாரம்பரிய உடை அணிந்த மன்னர் அகிஹிட்டோ பத்து நிமிடங்கள் நடைபெற்ற நிகழ்ச்சியின் இறுதியில் முறைப்படி பதவி விலகினார்.

மன்னராக  இறுதி உரையாற்றிய  அகிஹிட்டோ,  நாட்டு மக்களுக்கு தனது நன்றியை தெரிவித்து கொண்டார். ஜப்பான் மக்கள் மற்றும் உலக மக்களின் அமைதிக்காகவும் மகிழ்ச்சியான வாழ்வுக்கா கவும் இறைவனை பிராத்திப்பதாக கூறினார். அவர் பதவி விலகியதை அடுத்து, ஜப்பான் நாட்டின் 126-வது மன்னராக அகிஹிட்டோவின் மூத்த மகனும் பட்டத்து இளவரசருமான நாருஹிட்டோ புதன்கிழமை மன்னராக முடிசூட்டப்பட்டார்.

புது யுகம்

ஜப்பானில் ஒவ்வொரு அரசர் முடிசூடும் போதும் ஒரு புதிய யுகம் துவங்குவதாக கருதப்படுகிறது. அதன்படி புதிய மன்னராக நாருஹிட்டோ முடிசூடியிருக்கும் நிலையில் ‘ரெய்வா யுகம்’ துவங்கும். ரெய்வா என்பதற்கு அழகான இணக்கம் என்பது பொருள். இவருடைய பதவிக்காலம்  முழுவதும் ரெய்வா யுகமாக கருதப்படும்.

மன்னர் அகிஹிட்டோ பதவி விலகிய நிகழ்ச்சி மற்றும் பட்டத்து இளவரசர் நருஹிட்டோ முடிசூடிய நிகழ்ச்சி அனைத்தும் ஜப்பானில் நேரடியாக ஒளிப்பரப்பபட்டது.

மன்னர் அரண்மனையில் நடைபெற்ற முடிசூட்டு விழாவில், வீர வாள், ஆபரணங்கள், அரசு முத்திரை, பேரரசரின் தனிப்பட்ட முத்திரை உள்ளிட்ட பேரரசருக்கு உரிய உரிய புனிதப் பொருள்கள்  புதிய பேரரசர் நாருஹிட்டோவிடம் வழங்கப்பட்டன.

பெண்களுக்கு அனுமதி இல்லை

இதில்  ஜப்பான் பிரதமர் ஷொன்சோ அபே உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் ,அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிசூட்டு விழாவில் அரச குடும்பத்து பெண்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை. எனவே முடிசூட்டு விழாவில் ஜப்பான்  பெண்  அமைச்சர் ஒருவரைத்  தவிர, வேறு பெண்கள் கலந்து கொள்ள வில்லை.  புதிய பேரரசரின் மனைவி மசாகோவும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

மக்கள் மன்றத்தில் முடி சூடல்

புதிய  அரசர் முடிசூடும் நிகழ்ச்சி இன்றோடு முடிந்து விடவில்லை. வரும் அக்டோபர் 22-ம் தேதி பொதுமக்கள் முன்னிலையில் பிரம்மாண்டமான முடிசூடும் நிகழ்ச்சி நடைபெறும். அன்று நடைபெரும் முடிசூட்டு விழாவில் உலகத் தலைவர்கள் கலந்து கொள்வார்கள்.

ஜப்பானில் மன்னருக்கு அரசியல் அதிகாரம் இல்லாவிட்டாலும் தேசத்தின் கவுர சின்னமாக அரச குடும்பம் கருதப்படுகிறது.

ஜப்பானில் கடைசியாக 1817-ம் ஆண்டு, கொகக்கு என்ற மன்னர்தான் பதவி விலகி உள்ளார். அதன்பின்னர் கடந்த 200 ஆண்டுகளாக யாரும் பதவி விலகியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய பேரரசர் நாருஹிட்டோ

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில்  பயின்ற நாருஹிட்டோவுக்கு 59 வயதாகிறது.

அரச குடும்பத்தை மக்களுடன் நெருங்கி வரச் செய்யவதற்கு இவரது தந்தை மேற்கொண்ட முயற்சிகளின் வழியில் இவரும் தொடர்ந்து செயலாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரச குடும்பத்தை நவீனமயமாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இவர் வலியுறுத்தி வருகிறார்.

இவரது மனைவி மசாகோ.  இவர்களது ஒரே மகள் அய்கோவுக்கு 17 வயதாகிறது. இவர் பெண் என்பதால் அரச பீடத்துக்கு வரும் வாரிசு உரிமை இவருக்கு இல்லை.

மக்களுக்கு ஆதரவாக இருப்பேன்

முடிசூட்டு  விழாவுக்குப் பிறகு, நாட்டு மக்களுக்கு பேரரசர் நாருஹிட்டோ உரையாற்றினார்.  மக்களுக்கு ஆதரவாக, மக்களுடன் சேர்ந்து நி்ற்பேன் என்று அப்போது அவர் உறுதிஅளித்தார்.

மக்கள் சார்பில் பதிலளித்துப்  பேசிய ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, உலக நிலவரம் வெகு வேகமாக மாறிக் கொண்டிருக்கும் நேரத்தில், அமைதியும் நம்பிக்கையும் நிலவும் ஜப்பானின் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க உறுதியேற்கிறோம் என்று குறிப்பிட்டார்.

Related Posts

error: Content is protected !!