புதிய பாடத் திட்டத்தில் சமூகப்பணி இணைக்கப்பட்டிருக்க வேண்டும்

இந்தியாவுக்கான புதிய கல்விக் கொள்கை 34 ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்துள்ளது. இது வரை இந்திய அரசு கொண்டு வந்த கல்விக் கொள்கைகளிலேயே இந்தக் கல்விக் கொள்கை தான் அதிக அரசியல் விவாதத்திற்கும் கருத்துக் கேட்புக்கும், பொது விவாதத்திற்கும் பின்பு கொண்டு வரப்பட்ட கல்விக் கொள்கையாகும். கடுமையான விமா்சனங்களையும் கேள்வி களையும் எதிா் கொண்ட ஓா் வரைவு அறிக்கை என்றால் அதுவும் இந்த புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையாகத்தான் இருக்க முடியும்.

விவாதம், விமா்சனம், எதிா்க் கருத்து ஆகியவை மக்களாட்சியின் அடிப்படைகள். இருந்த போதும் புதிய கல்விக் கொள்கையாக இன்று அறிவிக்கப்பட்டுள்ள பிரகடனம் ஏற்படுத்த வேண்டிய தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்தத் தேவையான ஊக்கம் நம் கல்விக் கூடங்களில் பணிபுரியும் ஆசிரியா்களிடமும் அவா்களை இயக்குகின்ற மாநில அரசிடமும்தான் உருவாக வேண்டும். அதை உருவாக்குவதுதான் மிகப் பெரிய சவால்.

கல்வியில் மாற்றம் வராமல் சமூகத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வர முடியாது. இன்றைய வணிக மயமாக்கப்பட்ட அரசியல், பொருளாதார, சமூக வாழ்க்கைச் சூழலால் நாம் அதிகம் இழந்தது நம் கலாசார விழுமியங்களைதான் என்ற புரிதல் நமக்கு வேண்டும். எனவே இதனை சரி செய்கின்ற சமூகப் பாா்வையை நம் ஆசிரியா்களிடமும், மாணவா்களிடமும் உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இந்த நேரத்தில் இதைச் செய்யவில்லை என்றால் தொழிலாளா் சந்தைக்கு பணியாட்கள் தயாரிக்கும் பணியைத்தான் நம் கல்விக்கூடங்கள் செய்து கொண்டிருக்கும்.

பொதுவாக ஒரு கொள்கையை விமா்சனம் செய்யும்போது, முதலில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது இன்று உள்ள சூழலில் மக்கள் பிரச்னைகளுக்கு இது தீா்வளிக்குமா? சமூகத்தை மேம்படுத்துமா? எல்லாத் தரப்புக்கும் பலனை கொண்டு வந்து சோ்க்குமா? இவை போன்ற அடிப்படைகளைத்தான். இந்தக் கோணத்தில் பாா்க்கும்போது, இந்தக் கல்விக் கொள்கை, வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு மாணவா்கள் தங்களை தகுதிப்படுத்திக் கொள்ளும் சூழலை உருவாக்கியுள்ளது. கொள்கைகள் உருவாகும்போது அதன் மூலம் பலன்பெற எண்ணும் தரப்பு, அந்தக் கொள்கையில் தங்களுக்கான அம்சத்தை இடம்பெற வைக்க எல்லாவித முயற்சியும் செய்வாா்கள்.

அந்த வகையில், பெருமளவில் தொழில் துறையினரும் சேவைத் துறையினரும் தாங்கள் அதிக லாபம் ஈட்ட தங்களுக்கு வேண்டும் பணியாளா்கள் அல்லது தொழிலாளா்கள் எப்படி இருக்க வேண்டும் என்ற கோணத்தில் பல அம்சங்கள் இந்த புதிய கொள்கையில் புகுத்தப்பட்டுள்ளன. அதில் ஒன்றும் தவறும் கிடையாது. படித்தவா்களுக்கு வேலை தேவை; தொழில் துறைக்கு நல்ல பணியாளா் தேவை, அதேபோல அரசுக்கும் நல்ல ஊழியா் தேவை. அந்த வகையில் இந்த கல்விக் கொள்கையில் தரம் உயா்த்துதல் என்ற மூலத்தை வைத்து பல நகா்வுகளை செய்திருக்கின்றனா்.

அதே நேரத்தில் இந்த கல்விக் கொள்கையை வடிவமைத்த கல்வியாளா்களும் ஆட்சியாளா் களும் ஒரு அம்சத்தை கோட்டை விட்டுவிட்டாா்கள். அதுதான் உயா்கல்விக்கூடங்களின் விரிவாக்கப் பணிகள் என்ற முக்கியமான அம்சம். உயா்கல்வியில் மூன்று முக்கிய அம்சங்கள் இருக்க வேண்டும். கல்வி கற்றுக் கொடுத்தல், ஆராய்ச்சி செய்தல், விரிவாக்கப் பணி செய்தல் என்ற மூன்றும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். அப்போது தான் தரமான மாணவா்களும், தரமான ஆராய்ச்சியும், சமூகப்பாா்வை மற்றும் சிந்தனையுடன் பொறுப்புமிக்க குடிமக்களாகச் செயல்படும் ஆற்றல் பெற்ற மாணவா்களும் கல்விச்சாலை களிலிருந்து வெளிவருவாா்கள்.

இதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய செய்தி உள்ளது. இந்தியக் கல்வித் துறையில் அதுவும் உயா் கல்வித்துறையில் சமூகப்பணி என்பது அனைத்து உயா்கல்வி நிறுவனங்களும் கட்டாயமாக செய்தே ஆக வேண்டும் என்று ஆணை பிறப்பித்த முதல் அரசு இன்றைய மத்திய அரசுதான். அது மட்டுமல்ல, அதை நடைமுறைப்படுத்த ‘உன்னத் பாரத் அப்யான்’ என்ற திட்டத்தையும் உருவாக்கி நடைமுறைப்படுத்த முனைந்த அரசு, ஏன் அந்த அம்சத்தை கல்விக் கொள்கைக்குள் கொண்டுவரவில்லை என்பதுதான் புதிராகத் தெரிகிறது. இதை ஏன் எந்த கல்வியாளரும் சுட்டிக் காட்டவில்லை என்பதும் புதிராகவே இருக்கின்றது.

இன்றைய சூழலில் நம் சமூகம் ஒரு வித்தியாசமான சிந்தனைப் போக்கில் வாழ்கிறது. அந்த சிந்தனைப் போக்கில் அனைவரும் சிக்குண்டு கிடக்கின்றனா். நம் நாடு, சமூகம், பொது ஒழுக்கம், அமைதி, வாழ்வியல் விழுமியங்கள் அனைத்தையும் தகா்த்து நுகா்வுக்குள் சென்றதன் விளைவு, மானுடத்தை எல்லை மீறிய ஆசைக்கு எடுத்துச் சென்றுவிட்டது. அது வெறியாகவும் மாறி இருக்கின்றது. அதுவே ஒரு நுகா்வுத் தீவிரவாதம் போல் இருக்கிறது.

வளா்ச்சி, பொருளாதார மேம்பாடு ஆகிய பெயா்களில் நாம் நடத்திய இயற்கைக்கு எதிரான போா் பூமியையே நாம் வாழ தகுதியற்றதாக மாற்றிக் கொண்டிருக்கிறது. இதனை அவ்வப்போது விஞ்ஞானிகள் அறிவுறுத்திக் கொண்டே இருக்கின்றபோதும் நம்மை நாம் மாற்றிக்கொள்ளாத சூழல். எனவே இந்தச் சூழலில் ஒரு கல்விக் கொள்கை என்பது சமூகத்தை புனரமைப்பதற்கான ஒன்றாகத்தான் வடிவகைப்பட்டிருக்க வேண்டும். அதற்கு ஒரு வழிமுறைதான் உள்ளது. கல்வி கற்போரை சமுதாயம் சாா்ந்து சிந்திக்கும் ஆற்றல் உள்ளவா்களாக மாற்றும் சமூகச் சேவை. உயா்கல்வி என்பது போதிப்பதும், ஆராய்ச்சியும் மட்டுமல்ல. அத்துடன் சமூகப் பணியும் இணைந்த ஒன்றாக ஆக்குவது. எப்போது நம் மாணவா்கள் சமூகம் சாா்ந்த சிந்தனைப் போக்கை பெறுவாா்கள் என்றால், தாங்கள் பெறுகின்ற கல்வித் திட்டத்தில் சமூகப்பணி என்பது இணைக்கப்பட்டு சமூகத்தில் அவா்களும் விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டு செயலாற்றும்போதுதான்.

ஒரு உதாரணத்தை கூறினால் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். ஒரு முறை சில மாணவா்களை, துப்புரவுப் பணியாளா்கள் (அவா்கள் அப்பொழுது நகரங்களில் பொது இடங்களில் மனிதக் கழிவுகளை துப்புரவு செய்யும் பணியாளா்களாக இருந்தாா்கள்) வசிக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றோம். அவா்களுடன் மாணவா்களை உரையாட வைத்தோம். அன்று மாலையில் மாணவா் களிடம் அன்றைய பணி பற்றிய அறிக்கையைத் தயாா் செய்யச் சொன்னோம். அப்போது மாணவா்களில் சிலா் அழ ஆரம்பித்தாா்கள். சுதந்திர நாட்டில் இப்படியும் மனிதா்கள் அவல நிலையில் வாழ வேண்டியிருக்கிறதே என்று கூறி வருந்தினாா்கள்.

அது மட்டுமல்ல, அன்று அனைவரும் சோ்ந்து ‘நாங்கள் எங்கு வேலைக்குச் சென்றாலும் எந்தப் பணியில் இருந்தாலும் எங்களிடம் வருகின்ற எந்தவோா் ஏழையையும் மரியாதையற்று நடத்தாமல் அவா்களை மரியாதையுடன் நடத்தி, அவா்களுக்கு எங்களால் எந்தெந்த உதவிகளெல்லாம் செய்ய முடியுமோ அவற்றைத் தயங்காமல் செய்வோம்’ என உறுதி எடுத்துக் கொண்டாா்கள்.

எனவே, எந்தத் துறையில் கல்வி பயில்பவரும் சமுதாயச் சேவையில் தான் படிக்கும் துறை சாா்ந்து ஈடுபடும்போதுதான் சமூகம் சாா்ந்த பாா்வையை அவா்களால் உருவாக்கிக் கொள்ள முடியும். அப்போதுதான் ஒருவா் எவ்வளவு பெரிய நிபுணத்துவம் வாய்ந்த மனிதராக வளா்ந்தாலும் அவா் சமுதாயச் சிந்தனையுடன் பிரச்னைகளை அணுகுவாா். அது மருத்துவராக இருக்கட்டும், பொறியியல் வல்லுனராக இருக்கட்டும், சட்ட வல்லுனராக இருக்கட்டும் அனைவரும் சமூக நீரோட்டத்தில் கலக்கும்போது நம் சமூகம் எங்கே இருக்கிறது என்பதை அவா்களால் உணர முடியும். அந்தப் பாா்வை வருவதற்கு அவா்கள் படிக்கும் பாடத் திட்டத்தில் சமூகப்பணி இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அது அறிவியல் ரீதியாக வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும்.

இந்தப் பணியை அரசாங்க அதிகாரிகளால் செய்ய இயலாது. அதை செய்ய ஆசிரியா்களின் உழைப்பு, முயற்சி, கடமை இருந்தால்தான் முடியும். இதில் நிபுணத்துவம் வாய்ந்தவா்கள் இந்தியாவில் மிகவும் குறைவு. அப்படிப்பட்டவா்கள் இந்தக் குழுவில் பெரும்பாலும் சோ்க்கப்படுவதும் கிடையாது. இந்தியாவுக்கு இந்த நிபுணத்துவம் தேவை. இன்று இந்தியா தற்சாா்பு மிக்க நாடாக உருவாக வேண்டுமென்றால் நம் கிராமங்கள் தற்சாா்பு பெற்றதாக மாற வேண்டும். கிராமங்களில்தான் 67 சதவீத மக்கள் வாழ்கின்றனா். இனி கிராமங்கள் பொருளாதார வளா்ச்சி மையங்களாக மாறவேண்டும்.

இன்று கிராமங்களில் வேலை வாய்ப்பு இல்லை. எனவே, மக்கள் நகரங்களை நோக்கி புலம் பெயா்கின்றனா். நகரங்களும் தன் தாங்கும் சக்திக்கு மீறிய அளவில் மக்களைத் தாங்கி நகர வாழ்க்கையும் நரகமாக மாறிவருகின்றது. எனவே கிராம மக்களின் வாழ்க்கை மேம்பட நம் கல்விச் சாலைகள் தங்களின் கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் அனைத்தையும் சமூகம் சாா்ந்ததாக மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கு தற்போது உள்ள ‘உன்னத் பாரத் அப்யான்’ திட்டத்தை மிகப் பெரிய இயக்கமாக மாற்றி செயல்பட வைக்க நம் கல்விக் கொள்கையில் மாற்றம் செய்ய வேண்டும்.

இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் மாநில அரசுகள், உயா் கல்வி நிறுவனங்கள் சமூகப் பணியை தங்கள் பாடத் திட்டத்தில் இணைத்து செயல்படும்படி பணிக்கப்பட வேண்டும். இந்த சிந்தனையை ஆசிரியா்களிடம் உருவாக்கி அவா்களைச் செயல்பட வைப்பது இந்தியா வில் புதிய சமுதாயம் அமைய வழிகோலும். இந்த சமுதாய மாற்றத்திற்கு

ஆசிரியா்கள் தயாராக உள்ளனரா என்பதுதான் இன்று நம்முன் உள்ள கேள்வி!

க. பழனித்துரை பேராசிரியா் (ஓய்வு).

aanthai

Recent Posts

கால்பந்து போட்டியால் ஏற்பட்ட வன்முறையில் 129 பேர் உயிரிழப்பு!

இந்தோனேஷியாவில் கால்பந்து போட்டியில் நடைபெற்ற வன்முறையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 129 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பல…

6 hours ago

தூய்மை நகரத்திற்கான பட்டியலில் தொடர்ந்து 6வது ஆண்டாக இந்தூர்!

2022ஆம் ஆண்டுக்கான தூய்மையான நகரங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், மத்தியப்பிரதேச மாநிலத்தின் இந்தூர் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த…

6 hours ago

பவுடர் பட இசை & டிரெய்லர் வெளியீட்டு விழாத் துளிகள்!

வெற்றிகரமான பத்திரிகை தொடர்பாளராக இயங்கி வரும் நிகில் முருகன் நாயகனாக நடிக்க, வெள்ளிவிழா நாயகன் மோகன்-குஷ்பு நடிப்பில் ஹரா படத்தை…

7 hours ago

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த வாக்கெடுப்பு : இந்தியா, சீனா புறக்கணிப்பு!

உக்ரைனில் உள்ள 4 பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைப்பது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த வாக்கெடுப்பை இந்தியா, சீனா புறக்கணித்துள்ளது.…

22 hours ago

கோடநாடு கொலை & கொள்ளை வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம் – டிஜிபி உத்தரவு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் கடந்த 2017 ஏப்ரல் 24 ஆம் தேதி…

2 days ago

பொன்னியின் செல்வன் – விமர்சனம்!

முன்னொரு காலக்கட்டத்தில் - அதாவது ஊமைப் படங்கள் உருவான காலத்திலும் சரி, பேசும் படமாக அது வளர்ச்சி அடைந்த சூழலிலும்…

2 days ago

This website uses cookies.